This article is from May 13, 2021

கொரோனாவிற்கு DRDO கண்டறிந்த 2-DG மருந்திற்கு ஒப்புதல்.. என்ன செய்யும், தொடரும் கேள்விகள் ?

கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக பெரிதும் பயன்தரக்கூடிய மருந்தை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பான (DRDO) உருவாக்கியுள்தாகவும், இந்த மருந்து இன்னும் மூன்று வாரங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. ஆக்சிஜன், தடுப்பூசி போன்ற அடிப்படை தேவைகளின் பற்றாக்குறையால் மிக மோசமான சூழல் ஏற்பட்டு மக்கள் கொத்து கொத்தாக இறந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் DRDOவின் முன்னணி அணு மருத்துவம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளும் (INMAS) நிறுவனமும் ஹைதராபாத்தை சேர்ந்த டாக்டர்.ரெட்டி ஆய்வகமும் இணைந்து 2-DG எனப்படும் இந்த மருந்தை தயாரித்துள்ளது. இது குறித்தான விரிவான செய்தி அறிக்கை ஒன்றையும் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

DCGI ஒப்புதல் :

2-DG மருந்துக்காக ஆய்வுகள் ஏப்ரல் 2020 ஆம் ஆண்டில் இருந்து ஹைதராபாத்தில் உள்ள செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் (சி.சி.எம்.பி) உதவியுடன் INMAS ஆல் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

” இது SARS-CoV-2 வைரஸ்க்கு எதிராக திறம்பட செயல்பட்டதால் கிட்டத்தட்ட 110 நோயாளிகளிடம் கடந்த அக்டோபர் 2020 ஆம் ஆண்டு இரண்டாம் கட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அதில் கொரோனாவிற்கு எதிராக நல்ல முன்னேற்றங்கள் காணப்பட்டன. இதனை தொட்ந்து 2020 நவம்பரில் இந்திய மருந்துகள் கட்டுப்பாடு அமைப்பின் நிபுணர் குழு (DCGI) மூன்றாம் கட்ட பரிசோதைக்கான ஒப்புதலை அளித்தது. இந்தியா முழுவதும் உள்ள 27 மருத்துவமனைகளில் 220 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வு 2-DG யின் சிறந்த செயல்திறனைக் காட்டியது, நோயாளிகள் வேகமாக குணமடைந்தனர். 65 வயதிற்கு மேல் உள்ள நோயாளிகளுக்கும் நல்ல பலனை அளித்தது. இதனை தொடர்ந்து மிதமான மற்றும் கடுமையான கொரோனா பாதிப்புகளுக்கு ஆளான நோயாளிகளுக்கு ஒரு துணை சிகிச்சை மருந்தாக செயல்படுத்த; அவசரகால பயன்பாட்டிற்கான ஒப்புதலை DCGI அளித்துள்ளது. மருத்துவ பரிசோதனைகளில் 2-DG மருந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளை விரைவாக மீட்க உதவுகிறது என்றும் மருத்துவமைகளில் நோயாளிகளின் ஆக்சிஜன் சார்பை பெருமளவு குறைக்கிறது என்றும் ” ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன செய்யும் ?

தூள் நிலையில் உள்ள இந்த (2- deoxy-D-glucose) 2-DG மருந்தானது குளுக்கோசின் பொதுவான மூலக்கூறு என்பதால் இந்தியாவில் எளிதில் தயாரிக்கப்படலாம். மேலும் இந்த மருந்து குளுக்கோஸ் எடுத்துக்கொண்ட பிறகு அது எப்படி உடல் முழுவதும் பரவுகிறதோ அது போலவே 2-DG மருந்தும் வாய் வழியாக எடுத்துக்கொண்ட பின் உடல் முழுவதிலும் உள்ள கொரோனா பாதிப்புக்கு உள்ளான செல்களை அடைந்து, அந்த வைரஸின் வளர்ச்சியைத் தடுத்து, அதன் ஆற்றல் உற்பத்தியையும் அழிக்கவல்லது. மேலும் இந்த மருந்து நுரையீரலில் பரவும் வைரஸ் தொற்றுக்கு எதிராகவும் நன்கு செயல்படுவதால் மருத்துவ ஆக்சிஜனுக்கான தேவையையும் குறைக்கும் எனக் கூறப்படுகிறது.

தொடரும் கேள்விகள் :

ஆனால், சில மருத்துவ வல்லுநர்கள் இதுவரை வெளியிட்டுள்ள தரவுகளில் மனித சோதனைகளில் அதன் செயல்திறன் குறித்த தரவுகள் போதுமானதாக இல்லை என தெரிவித்துள்ளதாக தி ஹிந்து பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

2-DG மருந்தானது பல ஆண்டுகளாக புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக விரிவாக சோதிக்கப்பட்டு இதுவரை அங்கீகரிக்கப்படாத மருந்தாகும். புற்றுநோய்க்கு எதிராக ஆராய்ச்சியில் இருந்த அங்கீகரிக்கப்படாத மருந்தை நடைமுறைக்கு கொண்டு வருகையில் அந்த மருந்து முன்னர் ஏன் அங்கீகரிக்கப்படவில்லை, தற்போது ஏன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறித்தான விளக்கங்கள் மூன்றாம் கட்ட சோதனை முடிவுகளில் குறிப்பிடப்படவில்லை. எனவே இந்த மருந்து ஆரோக்கியமாக இயங்கும் உயிரணுக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வாய்ப்புகளும் உள்ளன என வல்லுநர்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

“புற்றுநோய் செல்கள் அவற்றின் உயிர்வாழ்விற்காக குளுக்கோஸை பெரிதும் சார்ந்துள்ளது, எனவே அதனை 2-DG உடன் இணைப்பதன் மூலம் அவற்றின் வளர்ச்சியை கட்டுப்படுத்தலாம். ஆனால் கேன்சர் செல்கள் போன்று அதிகப்படியான குளுக்கோசை எடுத்துக்கொண்டு செயல்படக்கூடிய மூளை செல்களை (நியூரோன்கள்) 2-DG பாதிக்கக்கூடும். இதனால் மூளை தொடர்பான பக்க விளைவுகள் ஏற்படலாம்” என கேரளாவின் ராஜகிரி மருத்துவமனையில் ஹெபடாலஜி மற்றும் கல்லீரல் மாற்று மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர் சிரியாக் அப்பி பிலிப்ஸ் தெரிவித்து உள்ளதாக தி ஹிந்துவில் வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்து மருத்துவர் பிரவீன் அவர்களிடம் பேசுகையில், ” இதை டிசிஜிஐ அவசர பயன்பாட்டிற்காக அங்கீகரித்தது உண்மை. ஆனால், விரிவான அறிக்கைகள் மற்றும் தரவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இன்னும் 3-ம் கட்ட சோதனை மற்றும் 2-ம் கட்ட அறிக்கை வரவில்லை. அவை கிடைத்ததும் அது பயனுள்ளதா அல்லது இல்லையா என்பது பற்றி தெளிவான பார்வை கிடைக்கும். தற்போதைய நேரத்தில் அதை எச்சரிக்கையுடன் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் ” எனக் கூறி இருந்தார்.

DRDO தலைவர் :

இந்த மருந்தின் பயன்பாட்டு விளக்கம் குறித்தும், விநியோகம் குறித்தும் DRDO வின் தலைவர் டாக்டர் சதீஷ் ரெட்டி இந்திய டுடே பத்திரிக்கைக்கு கூறுகையில், “2-DG மருந்தானது குளுக்கோஸ் போன்று தண்ணீரில் கலந்து எடுத்துக்கொள்ளக்கூடிய மருந்தாகும். விநியோகம் குறித்து நாங்கள் டாக்டர் ரெட்டி ஆய்வகத்துடன் கலந்துரையாடி வருகிறோம். குறிப்பிட்ட அளவிலான மருந்துகள் மட்டும் இரண்டு – மூன்று நாட்களில் சந்தைக்கு வரும் பெரிய அளவிலான விநியோகங்களுக்கு அநேகமாக மூன்று வாரங்கள் எடுக்கும்” என தெரிவித்துள்ளார். இந்த மருந்தின் விலைக் குறித்தான அதிகாரப்பூர்வ செய்திகள் இன்னும் வெளியாகவில்லை.

Links : 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1717007

new-anti-covid-19-drug-2-dg-in-market-in-three-weeks-drdo-chief

Questions remain on DRDO’s COVID drug

Please complete the required fields.




Back to top button
loader