This article is from Jul 24, 2020

“ட்ரோன் பாய்” பிரதாப் குறித்த பெரும்பாலான தகவல்கள் தவறானவை.. உடையும் பிம்பம் !

ட்ரோன் பாய் ” மற்றும் ” ட்ரோன் சயின்டிஸ்ட் ” என சமூக வலைதளங்களில் பெருமை கொள்ளும் வகையில் வைரலான இளைஞர்தான் பிரதாப். கர்நாடகாவைச் சேர்ந்த 22 வயதான பிரதாப் ட்ரோன் என அழைக்கப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்களை தயாரிப்பதில் சிறந்து விளங்குவதாகவும், எலெக்ட்ரானிக் வேஸ்ட் மூலம் 600 ட்ரோன்களை தயாரித்ததாகவும், பல்வேறு சாதனைகளை படைத்து பல விருதுகளை வாங்கியுள்ளார் என்றும், இதனால் பல நாடுகளில் இருந்து பணிகள் வழங்க பல நிறுவனங்கள் முன் வந்ததாக நீண்ட ஃபார்வர்டு பதிவு பல நாட்களாக சமூக வலைதளங்களில் பல மொழிகளில் வைரலாகி வருகிறது. அப்படி பரவிய தகவலில் பெரும்பாலானவை தவறான தகவல் என்பது தெரிய வந்துள்ளது.

Facebook link | archive link 

Facebook link | archive link

2019 ஆகஸ்ட் மாதம் கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள பிரதாப் தன்னுடைய ட்ரோன்கள் மூலம் வெள்ளத்தில் சிக்கியவர்களை அடையாளம் கண்டு தேசிய பேரிடர் மீட்பு படைக்கு உதவியதாகவும் செய்தியில் வெளியாகி இருந்தது. படகில் பிரதாப் அமர்ந்து இருக்கும் புகைப்படங்கள் அப்போதைய செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

இதன் பின்னர், பல சாதனைகளை படைத்த பிரதாப்-ஐ பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு விருது வழங்கியதோடு, DRDO-வில் விஞ்ஞானியாக பணி வழங்கியதாகவும் தகவல்கள் பரவின. ஆனால், பிரதமர் மோடி பிரதாப்-க்கு விருதுகள் வழங்கியதாகவோ, DRDO-வில் பணி வழங்கியதாக கூறுவது தவறான தகவல் எனத் தெரிய வந்தது. DRDO-வில் விஞ்ஞானியாக பணியாற்ற பிரதாப்-க்கு போதுமான கல்வித்தகுதி இல்லை மற்றும் பிரதமர் தரப்பில் எந்தவொரு அழைப்பும் வரவில்லை என பிரதாப் பதில் அளித்து இருந்தார் என யூடர்ன் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

மேலும் படிக்க : ட்ரோன் பாய் பிரதாப்-க்கு பிரதமர் மோடி DRDO-வில் பணி வழங்கினாரா ?

” ட்ரோன் பாய் ” பிரதாப் சாதனைகள் குறித்து பல சந்தேகங்கள் எழுந்த பின்னர், கன்னட சேனல் ” BTV நியூஸ் கன்னடம் ” நடத்திய நிகழ்ச்சியில் சந்தேகங்களை தெளிவுப்படுத்தவும், ஆதாரங்களை வழங்கவும் பங்கேற்று உள்ளார். 40 நிமிடங்கள் மேலாக நடைபெற்ற நேர்காணலில், பிரதாப் ட்ரோன்களுடன் இருக்கும் புகைப்படங்கள், கடந்த காலங்களில் வென்றதாகக் கூறும் சர்வதேச விருதுகளுக்கான பல சான்றுகளை வழங்கியும் உள்ளார். ஆனால், அந்த நேர்காணலுக்கு பிறகே பிரதாப்-க்கு பிரச்சனை வரத் தொடங்கியுள்ளது.

மேற்காணும் நேர்காணல் வீடியோவின் 31-வது நிமிடத்தில் நெறியாளர் நீங்கள் தயாரித்ததாக கூறப்படும் 600 ட்ரோன்களில் ஒன்றையாவது காண்பிக்குமாறு கேட்ட போது 32-வது நிமிடத்தில் தன்னுடைய செல்போனில் ட்ரோன் உடன் தாம் நிற்கும் புகைப்படத்தை பிரதாப் காண்பித்து உள்ளார்.

ஆனால், நேர்காணலில் காண்பிக்கப்பட்ட படத்தில் இருக்கும் ட்ரோன் உண்மையில் தங்களுக்கு சொந்தமானது என ஜெர்மனி நிறுவனமான ” BillzEye Multicoptersysteme ” அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அந்நிறுவனத்தின் உரிமையாளர் பில் குட்பியர், ” ஜெர்மனியின் ஹனோவரில் “CeBIT 2018” -ல் மேற்காணும் ட்ரோனை Billzeye காட்சிப்படுத்தியதாகவும், மற்ற பார்வையாளர்களோ போலவே பிரதாப்பும் ட்ரோன்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆர்வம் காட்டியதாகவும்  Billzeye நிறுவன இணையதளத்தின் செய்தி அறிக்கையில் வெளியாகி உள்ளது.

இப்படி வைரலாகும் பிரதாப் புகைப்படத்துடன் அவர் அருகே இருக்கும் ட்ரோன்களை அவர் தயாரித்ததாக நினைத்து சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர். இதேபோல், வைரலாகும் மற்றொரு புகைப்படத்தில் இருக்கும் ட்ரோன் கூட ACSL நிறுவனத்தின் தயாரிப்பே.

மேற்காணும் புகைப்படத்தில் இருக்கும் ட்ரோன் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த Autonomous Control System Laboratory Ltd எனும்  நிறுவனத்துக்கு சொந்தமானது. ACSL நிறுவனத்திற்கும், பிரதாப்பிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என அந்நிறுவனத்தின் சிஇஓ Reddit இணையதளத்தில் பதில் அளித்த ஸ்க்ரீன்ஷார்ட் imgur இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.

அதே உடையில் பிற ட்ரோன்கள் உடன் பிரதாப் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி இருக்கிறது. கண்காட்சியில் வைக்கப்பட்ட ட்ரோன்கள் உடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து பிரதாப் கண்டுபிடித்த ட்ரோன் என தவறான தகவலை பரப்பி உள்ளார்கள். பிரதாப் புகைப்படம் எடுத்துக் கொண்ட ட்ரோன்கள் பெரும்பாலானவை வணிகரீதியாக தயாரிக்கப்பட்ட இயந்திரங்களாக மாற்றப்பட்டவை.

மேலும், நேர்காணலில் ஜப்பான் நாட்டில் நடைபெற்ற சர்வதேச ரோபாட்டிக்ஸ் கண்காட்சியில் (iREX) மற்றும் ஜெர்மனியில் ஒவ்வொரு ஆண்டும் ஏற்பாடு செய்யப்படும் CeBit உள்ளிட்ட பல தகவல்களை பிரதாப் முன்வைத்து உள்ளார். CeBit 2018-ல் பிரதாப் ” Albert Einstein Innovation Gold Medal ” விருது கிடைத்ததாகக் கூறியுள்ளார்.

ஆனால், அப்படி எந்தவொரு விருது வாங்கியதாக தரவுகள் இல்லை, CeBit innovation விருதுகள் நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன, தனிநபர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இதேபோல், 2017 டோகியோவில் நடைபெற்ற சர்வதேச ரோபாட்டிக்ஸ் கண்காட்சியில் தங்க பதக்கம் வென்றதாக கூறியதும் தவறான தகவல். அந்த நிகழ்ச்சியின் முடிவுகளை வெளியிட்ட இணையதளத்தில் பிரதாப் வென்றதாக குறிப்பிடவில்லை. இப்படி பொது வெளியியில் பிரதாப் கூறிய தகவலில் முரண்பாடுகள் இருப்பதோடு அவருடைய சாதனைகள் எனக் கூறுபவைகளுக்கு ஆதாரங்களும் இல்லை. பிரதாப் பல இடங்களில் உரையாற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் இடம்பெற்று உள்ளன. இருப்பினும் அயல்நாட்டில் லட்சங்களில் சம்பளம், மாதத்திற்கு 28 நாட்கள் விமானத்தில் பயணம் எனக் கூறுவதெல்லாம் மிகைப்படுத்திய ஒன்றாக தற்போது தோன்றுகிறது.

பிரதாப் 600 ட்ரோன்களை உருவாக்கினார் எனக் கூறும் கூற்றை நிரூபிக்கும் வகையில் அவரின் தயாரிப்புகள் எதுவும் காட்சிப்படுத்தப்படவில்லை. மாறாக, பிற நிறுவனத்தின் கண்டுபிடிப்பை தன்னுடையது என தொலைக்காட்சியிலேயே தெரிவித்து இருக்கிறார். இதனால் பிரதாப் பெரும் சிக்கலில் சிக்கி உள்ளார். நாட்டிற்கு கிடைத்த சிறந்த ” ட்ரோன் விஞ்ஞானி ” என அனைவரும் புகழ்ந்த நிலையில் பிரதாப் பிம்பம் உடைந்து உள்ளது.

Links : 

Drone pratap| Kirik keerthi| Exclusive interview

Stellungnahme zu den Falschmeldungen von Herrn NM Prathap in der „BTv Live Show“ in Indien

Unmanned Systems Asia: autonomous navigation from Japan

irex2017report

ACSL CEO Answer 

Please complete the required fields.




Back to top button
loader