This article is from Nov 01, 2021

போதை மற்றும் மதுவால் நிகழும் தற்கொலையில் தமிழ்நாடு 3-ம் இடம் !

என்சிஆர்பி எனப்படும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் ஆனது நாடு முழுவதும் நிகழும் தற்கொலை சம்பவங்கள் எந்த காரணங்களின் அடிப்படையில் நிகழ்ந்துள்ளன என்ற 2020ம் ஆண்டிற்கான தரவுகளை வெளியிட்டு இருக்கிறது.

குடும்ப பிரச்சனை, நோய் பாதிப்பு, வறுமை, வேலையின்மை, மனநலம் சார்ந்த பிரச்சனை என பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தரவுகள் மாநில வாரியாக அளிக்கப்பட்டு இருக்கிறது. அதில் ஒன்றாக, போதை மருந்து பழக்கம் மற்றும் மதுவிற்கு அடிமையானவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும்  இடம்பெற்றுள்ளது.

போதை மருந்து பழக்கம் மற்றும் மது அடிமையாகி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள மாநிலங்களில், ” 2,479 சம்பவங்கள் உடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருக்கிறது. கர்நாடகா (1,477) இரண்டாம் இடத்திலும், தமிழ்நாடு (1,377) மூன்றாம் இடத்திலும், மத்தியப் பிரதேசம் (1,331) நான்காம் இடத்திலும் உள்ளன.

இதையடுத்து, கேரளா 692, ஆந்திரப் பிரதேசம் 385, சத்தீஸ்கர் 372, ராஜஸ்தான் 160, டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசம் 134 என்ற எண்ணிக்கையில் உள்ளன. நாட்டில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த 9,169 தற்கொலைகளுக்கு போதை மருந்து பழக்கம் மற்றும் மதுவிற்கு அடிமையாகியது காரணமாகி இருக்கிறது. இதில் ஆண்கள் 8974, பெண்கள் 193, மூன்றாம் பாலினத்தவர் 2 ஆக உள்ளது.

குஜராத்தில் 77, பீகார் 11, மிசோரம் 45 என மதுவிலக்கு உள்ள மாநிலங்கள் உள்ளிட்டவையிலும் கூட போதை மருந்து பழக்கம் மற்றும் மது அடிமையாகி தற்கொலை நிகழ்ந்த சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றன. மதுவிலக்கு உள்ள மாநிலங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டே வருகிறது.

மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்கள் மட்டுமே 1000-க்கும் மேலான தற்கொலை சம்பவங்கள் உடன் மோசமான நிலையில் உள்ளது. இதில், தமிழ்நாட்டைத் தவிர்த்து கர்நாடகா, மத்தியப் பிரதேசம் பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்கள். அதற்கு முன்பாக காங்கிரஸ் ஆட்சி அமைந்திருந்தது. அதேபோல், மகாராஷ்டிரா சிவசேனா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நிகழ்கிறது. அதற்கு முன்பாக, பாஜக ஆட்சி அமைந்திருந்தது.

சமூக நீதி பேசும் மாநிலமான தமிழ்நாடு, போதைக்கு அடிமையாகியதால் தற்கொலை சம்பவங்கள் நிகழும் மாநிலங்களில் 3-ம் இடத்தில் இருப்பது மிக மிக கவலைக்குரியதாக இருக்கிறது. தமிழ்நாடு மாநிலம் எந்த அளவிற்கு மது பழக்கத்திற்கு அடிமையாகி சென்றுக் கொண்டிருக்கிறது என்பதை இத்தரவுகள் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.

மக்களுடைய வளர்ச்சி, சாமானிய மக்களின் குரலாக இருப்போம் என ஒவ்வொரு முறையும் மார்தட்டிக் கொள்ளும் தமிழ்நாட்டின் நிலை இப்படி இருத்தல் கூடாது. தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் அரசு டாஸ்மாக் இத்தனை கோடி வசூல் என இலக்கு வைப்பதும், அதை விட பல கோடி வசூல் என பெருமை கொள்ளும் சூழ்நிலையே இங்குள்ளது. குடியை ஒழுக்கத்தை சார்ந்து பேசுவதை விட, குடி தீமை தருகிறது என்கிற மோசமான நிலையை எடுத்துரைக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும் அதிமுக, திமுக கட்சிகள் மதுக் கடைகளை குறைப்பதாக வெற்று வாக்குறுதிகளை மட்டுமே அளித்துக் கொண்டு இருக்கின்றன. இன்னும் சில ஆண்டுகளில் போதை மருந்து மற்றும் மதுவிற்கு அடிமையாகியதால் நிகழும் தற்கொலை சம்பவங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடிக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமையாகும்.

மது நாட்டிற்கும், வீட்டிற்கும், உயிருக்கும் கேடு என பாட்டில்களில் எழுதி விற்பனை செய்தால் மட்டும் போதாது.. உரிய நடவடிக்கை வேண்டும் !

Link : 

Table 2.5 state-ut-city

Please complete the required fields.




Back to top button
loader