தேர்தல் நடத்தை விதிகளை மீறும் மோடி – தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

பிரதமர் மோடி தலைமையில் பாஜக கோவையில் நடத்திய ’ரோடு ஷோ’ (Road Show) நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு பாஜக-வின் கட்சி துண்டு அணிவிக்கப்பட்டு பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

மார்ச் 18ம் தேதி கோவையில் பிரதமர் மோடி தலைமையில் வாகனப் பேரணி நடத்த பாஜக திட்டமிட்டது. பாதுகாப்புக் காரணங்களுக்காக இப்பேரணிக்கு அனுமதி வழங்கப்படாது எனக் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து பேரணிக்கு அனுமதி வழங்கக்கோரி பாஜக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் பேரணிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். 

மேலும், பாதுகாப்பு தொடர்பான விஷயத்தைப் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படை கவனித்துக்கொள்ளும். பாதுகாப்பு குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் பேரணிக்கு அவர்கள் எப்படி ஒப்புதல் அளித்திருப்பார்கள் என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மேற்கொண்டு பேரணியின் தூரம் மற்றும் வழித்தடத்தை காவல்துறை முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். 

நீதிமன்ற அனுமதியைத் தொடர்ந்து திட்டமிட்டபடி மார்ச் 18ம் தேதி கோவை சாய்பாபா காலனியில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை பாஜகவின் பேரணி நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்து பங்கேற்ற புகைப்படங்கள் வெளியான நிலையில், கல்வித்துறை முதன்மை அலுவலர் இது குறித்து விளக்கம் அளிக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். 

இதேபோல் பேரணி வழித்தடத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் சிறுவர், சிறுமிகள் பாஜக கட்சி துண்டு அணிந்து கலை நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தப்பட்ட படங்களையும் யூடர்ன் கண்டறிந்துள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தல் தேதி கடந்த 16 அன்று இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடுவதும். இது தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள்வரை பின்பற்றப்பட வேண்டும். 

சாதி, மத பிரிவினை தூண்டும் விதமாகப் பேசக் கூடாது, மத வழிபாட்டுத் தளங்களைத் தேர்தல் பரப்புரைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது எனப் பல விதிமுறைகள் தேர்தல் நடத்தை விதியில் அடங்கும். இதனைத் தவிரக் குழந்தைகளைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது என்பதும் ஒரு முக்கியமான விதியாகும்

தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் இந்த விதியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். வேட்பாளரோ அல்லது அரசியல் கட்சியோ இதனை மீறினால் தேர்தல் ஆணையம் விதிகளின்படி நடவடிக்கை எடுக்கலாம். நடவடிக்கை என்றால் வேட்பாளரைத் தேர்தலில் போட்டியிடவிடாமல் தடுக்கவோ தேவைப்பட்டால் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கவோ தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது. 

மேலும் படிக்க : ‘இந்து தெய்வமான சக்தியை அவமதித்த ராகுல்காந்தி’ என பொய் பரப்பும் அண்ணாமலை!

ராகுல் காந்தி பேசியதைத் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மத ரீதியாகத் திரித்துப் பொய் பிரச்சாரம் செய்கிறார். மோடியோ தனது வாகன பேரணியில் குழந்தைகளைத் தனது கட்சி துண்டுடன் கலந்து கொள்ள வைத்துள்ளார். இவை இரண்டுமே தேர்தல் விதி முறை மீறல்கள்தான். இவற்றைத் தேர்தல் ஆணையம் தான் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.   

Please complete the required fields.
Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader