லஞ்சம் வாங்கியதில் அமலாக்கத்துறை அதிகாரி கைது – ED மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் சரியா ?

மலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் தமிழ்நாடு அரசு அதிகாரி ஒருவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாகத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். ஒன்றிய அரசின் கீழ் செயல்படக்கூடிய அமலாக்கத்துறை  அதிகாரி மீது தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கக் கூடிய ஒரு துறை நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளதா ? இது அரசியலாக்கப்படுகிறதா ? ஊழலை ஒழிக்க அமைக்கப்பட்ட துறையில் ஊழல் எனப் பல்வேறு வாதங்கள் எழத் தொடங்கியுள்ளது. 

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அங்கித் திவாரி என்ற அதிகாரி கடந்த அக்டோபர், 29ம் தேதி திண்டுக்கல்லைச் சேர்ந்த தமிழ்நாடு அரசு ஊழியர் ஒருவரைத் தொடர்பு கொண்டு அவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரால் பதிவு செய்யப்பட்டு முடிந்து போன பழைய வழக்கைச் சுட்டிக்காட்டி, அவ்வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டுமெனப் பிரதமர் அலுவலகத்திலிருந்து உத்தரவு  வந்துள்ளதாகக் கூறியுள்ளார். 

மேலும் இது தொடர்பாக விசாரணைக்கு அக்டோபர், 30ம் தேதியன்று மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். பின்னர், நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ. 3 கோடி லஞ்சமாகத் தர வேண்டுமென அங்கித் திவாரி தமிழ்நாடு அரசு அதிகாரியிடம் தெரிவித்து, பின்னர் ரூ.51 லட்சம் தந்தால் போதும் எனப் பேரம் பேசியுள்ளார். 

அதன்படி கடந்த நவம்பர், 1ம் தேதி முதல் தவணையாக ரூ.20 லட்சத்தை அரசு அதிகாரி அளித்துள்ளார். மேல் அதிகாரிகளுக்கும் பங்கு தர வேண்டியுள்ளதால் பேசிய முழு தொகையினையும் அளிக்க வேண்டும். இல்லையெனில் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும்  மிரட்டியுள்ளார். 

அங்கித் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த தமிழ்நாடு அரசு ஊழியர் கடந்த நவம்பர் 30ம் தேதி திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது தவணையாக ரூ.20 லட்சம் லஞ்சப் பணத்தைக் கடந்த (டிசம்பர்) 1ம் தேதி பெற்றபோது கையும், களவுமாகப் பிடிக்கப்பட்டார். 

அவரது வீடு மற்றும் மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் காவல் துறையினரின் உதவியுடன் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விடிய விடியச் சோதனையில் ஈடுபட்டனர். அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போதே துணை ராணுவப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட அங்கித் திவாரி திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மோகனா இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “ஒரு மனிதன் தவறு செய்திருப்பதினால் முழு அமலாக்கத் துறையும் தவறு எனச் சொல்ல முடியாது. அதேபோல் தமிழக காவல் துறையில் யாரோ ஒருவர் தவறு செய்வதினால் தமிழ்நாடு காவல் துறையே மோசம் எனச் சொல்ல முடியாது. கைது செய்யப்பட்டுள்ள அமலாக்கத்துறை அதிகாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. இதனைக் கண்டு மொத்த அமலாக்கத்துறை மீதும் சாயம் பூச வேண்டியது கிடையாது” எனக் கூறியுள்ளார். 

இதே அண்ணாமலை அவர்கள் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறையை நீக்குவோம் எனப் பேசுகிறார். அறநிலையத்துறை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய ஒரு துறை. அதில் உள்ள அதிகாரி தவறு செய்யும் பட்சத்தில் தகுந்த ஆதாரங்களுடன் சட்ட நடவடிக்கை மேற்கொண்டு மீண்டும் அந்த தவறு நடைபெறாமல் பார்த்துக் கொள்வதுதான் சரியாக இருக்கும். ஒருவர் தவறு செய்துவிட்டார் என்பதற்காக ஒட்டு மொத்த துறையையே இல்லாமல் நீக்குவோம் எனக் கூறுவது எந்த வகையில் சரி. 

குற்றம் செய்தவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டும் என அண்ணாமலை ஒரு பக்கம்  கூறுகையில், மதுரை மாநகர மாவட்ட பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஐயப்பராஜா அமலாக்கத் துறை அலுவலகத்தில் சோதனை நடைபெற்றுக் கொண்டு இருக்கையில் வெளியில் நின்று கொண்டிருப்பது ஏன்?

ஒன்றிய அரசு அதிகாரி மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்கலாமா ?

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் அமலாக்கத்துறை அதிகாரி மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போன்ற மாநில அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியும். இது தொடர்பாகக் கேரளா உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

கேரளா மாநிலம் கோட்டயம் அருகே உள்ள தலயோல பரம்பு என்னும் பகுதியில் Village Extension அதிகாரி ஒருவர், அப்பகுதியில் உள்ள North Malabar Gramin என்னும் வங்கி அதிகாரிகள் மூவருடன் சேர்ந்து ரூ.1,85,000 மோசடியில் ஈடுபட்டனர். இது தொடர்பாகக் கேரளா லஞ்ச ஒழிப்பு பிரிவினர் (VACB- Vigilance and Anti-Corruption Bureau) வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

அதனை விசாரித்த கேரளா கீழமை நீதிமன்றம் ஒன்று ‘ஒன்றிய அரசு பணியாளர்களை விசாரிக்கும் அதிகாரம் மாநில அரசு அதிகாரிகளுக்கு இல்லை’ எனத் தீர்ப்பு அளித்தது. 

இத்தீர்ப்புக்கு எதிராகக் கேரளா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், ஒன்றிய அரசுப் பணியாளர்கள் ஊழலில் ஈடுபட்டது தொடர்பாக மாநில காவல் துறையினர் அல்லது சிறப்புப் பிரிவினர் விசாரிப்பது தொடர்பாக ஊழல் தடுப்பு சட்டத்திலோ (Prevention of Corruption Act) அல்லது Delhi Special Police Establishment சட்டத்திலோ எதுவும் குறிப்பிடவில்லை. அப்படிக் குறிப்பிடவில்லை என்பதால் அவர்கள் விசாரிக்க அதிகாரம் இல்லை எனக் கொள்ள முடியாது. ஒன்றிய அரசுப் பணியாளர்களை CBI போன்ற ஒன்றிய அமைப்புகள் மட்டும் தான் விசாரிக்க வேண்டுமென எந்த விதியும் இல்லை. 

இதனைக் கொண்டு பார்க்கையில் கேரளா லஞ்ச ஒழிப்பு பிரிவினர் மாநிலத்திற்குள் நடக்கும் குற்றச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அதிகாரம் உள்ளது எனக் கூறி தீர்ப்பளித்தது.

தற்போது தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டிருப்பது போல், கடந்த நவம்பர் மாதம் ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் நாவல் கிஷோர் மீனா, பாபுலால் மீனா என்ற இரண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

அமலாக்கத்துறையும் அரசியல் நடவடிக்கைகளும் : 

ஒன்றிய நிதி அமைச்சகத்தின் கீழ் 1956ம் ஆண்டு அமலாக்கத்துறை தொடங்கப்பட்டது. இது நிதிக் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்வது,  குற்றங்கள் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை முடக்குவது போன்ற அதிகாரங்களைக் கொண்ட ஒரு தன்னிச்சையான அமைப்பாகும். மேலும் ‘பணமோசடி தடுப்புச் சட்டம் – 2002’ (PMLA- Prevention of Money Laundering Act), அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் – 1999 (FEMA – Foreign Exchange Management Act), தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம் – 2018 (FEOA – Fugitive Economic Offenders Act) போன்ற பல்வேறு பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பான சட்டங்களை அமல்படுத்துகிறது. 

அமலாக்கத்துறை போன்று தன்னிச்சை அமைப்புகளான CBI, IT போன்றவற்றை பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் காரணங்களுக்காக எதிர்க் கட்சியினர் மீது தவறாகப் பயன்படுத்துகிறது என்கிற குற்றச்சாட்டு எதிர் கட்சியினரால் முன்வைக்கப்படுகிறது.

அந்த வகையில் ED, CBI, IT விசாரணைகளை எதிர் கொள்கின்ற பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகள் பாஜகவில் இணைந்துள்ளனர். அவ்வாறு அவர்கள் பாஜகவில் இணைந்த பிறகு அவ்வழக்குகள் கண்டுகொள்ளப்படாமல் விடப்படுகிறது. சஞ்சய் பாட்டீல் பாஜகவில் இணைந்து எம்.பி. ஆன பிறகு ‘இனி அமலாக்கத் துறை தன்னிடம் வராது’ எனக் கூறினார். 

அதேபோல் ஹர்ஷவர்தன் பாட்டீல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த பிறகு அமலாக்கத் துறை அச்சுறுத்தல் இன்றி நிம்மதியாகத் தூங்குவதாகக் கூறியிருந்தார். ஜோதிராதித்ய சிந்தியா மீதான வழக்குகள் அவர் பாஜகவில் இணைந்ததும் மூடப்பட்டது. மேலும் ED, CBI வழக்குகளையொட்டி  ஹிமந்தா பிஸ்வா சர்மா, சுவேந்து அதிகாரி, முகுல் ராய், மிதுன் சக்ரவர்த்தி மற்றும் நாராயண் ரானே ஆகியோரும் பாஜகவில் இணைந்துள்ளனர். 

இன்னும் ஒரு படி மேலே சென்று ஒன்றிய கலாச்சாரத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி நாடாளுமன்றத்தில் பேசும்போது குறுக்கிட்ட எதிர்க் கட்சியினரைப் பார்த்து,  வாயை மூடிக்கொண்டு அமைதியாக உட்காருங்கள், இல்லையெனில் உங்கள் வீட்டிற்கு அமலாக்கத்துறை வரும்’ என்று எச்சரித்தது குறிப்பிடத்தக்கது. இவற்றின் அடிப்படையில்தான் பாஜக அமலாக்கத்துறையை தங்கள் கட்சியின் அங்கமாகப் பயன்படுத்துகிறது என்கிற குற்றச்சாட்டு எழுகிறது. 

பொதுவா ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் துறைகள் திறமை வாய்ந்தவை என்றும் தவறுகள் நடக்காது என்றும் ஒரு கற்பிதம் பொதுப் புத்தியில் புகுத்தப்பட்டுள்ளது. அப்பட்டியலில் இருக்கும், அதுவும் ஊழலுக்கு எதிராகச் செயல்படும் துறை எனக் கூறிக்கொள்ளும் அமலாக்கத்துறை அதிகாரி மீதே லஞ்சம் பெறப்பட்டது தொடர்பாக வழக்குப் பதியப்பட்டு இருப்பதினால்தான், தற்போது பெரிய அளவில் பேசு பொருளாகியுள்ளது.

Link : 

DIPR-P.R.NO.-2394-Press Release -TN DVAC arrests ED officer -Date 01.12.2023

 HIGH COURT OF KERALA_2023_KER_44654

Please complete the required fields.
Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader