வயதான விவசாயிகளுக்கு சாதியைக் குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை.. பின்னணி என்ன ?

சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரி அரசு மருத்துவரிடம் 51 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது சிக்கிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரிய பேசுபொருளானது. இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு விவசாயிகளுக்கு, அமலாக்கத்துறை சட்ட விரோத கருப்புப் பண பரிமாற்றத்திற்கான சம்மன் வழங்கியுள்ளது என்று கூறி வயதான விவசாயி ஒருவர் பேசும் 1:48 நிமிடங்கள் கொண்ட வீடியோ கொண்ட ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

சாதிய அடையாளத்துடன் சம்மன் அனுப்பியுள்ள அமலாக்கத்துறை :

விவசாயிகள் கண்ணய்யன் (73) மற்றும் கிருஷ்ணன் (70) ஆகியோர், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அமைந்துள்ள ராமநாயக்கன்பாளையம் வடக்கு காடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு கடந்த ஜூன் மாதத்தில், சாதிய அடையாளத்துடன், முகவரியையும் சேர்த்து குறிப்பிடப்பட்ட சம்மன் ஒன்று, சென்னை சத்தியபவனில் இயங்கக்கூடிய அமலாக்கத்துறையிடமிருந்து வந்துள்ளது. மேலும் அதில் ஜூன் 22, 2023 என்ற தேதியும் அச்சிடப்பட்டிருப்பதைப் காண முடிகிறது. இதில், கதவு எண் குறிப்பிடப்படவில்லை, ஆனால் சாதி தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வழக்கறிஞர் கோ பிரவீணா கூறுவதென்ன ?

இது குறித்து வழக்கறிஞர் கோ பிரவீணா சத்தியம் தொலைக்காட்சிக்கு நேற்று (டிசம்பர் 30) வழங்கியுள்ள பேட்டியில், “முதியோர்களான கண்ணய்யன் மற்றும் கிருஷ்ணன் சகோதரர்கள். அந்த விவசாயிகளுக்கு 6.5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் சேலம் பாஜகவைச் சேர்ந்த பிரமுகர் ஒருவருவரும், அவருடைய வழக்கறிஞர் ஒருவரும் 3 வருடங்களாக முயற்சித்து வருகிறார்கள். இவர்கள் நிலத்தை தர மறுத்ததனால், இவர்கள் மீது கொலை மிரட்டலும் விதிக்கப்படுகிறது. 

இந்த இரண்டு தரப்பினருக்கும் இடையில் 3 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது. அதே சமயம் இவர்களைப் போலவே நிலம் வழங்க மறுத்துள்ள இன்னொரு விவசாயியும் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே முதியோர்களான கண்ணய்யன் மற்றும் கிருஷ்ணன் அவர்களுக்கு அச்சம் ஏற்பட்டது. 

இந்த நிலையில் கண்ணையன், கிருஷ்ணன் சகோதரர்களுக்கு அமலாக்கத் துறையில் இருந்து கருப்பு பண பரிமாற்ற மோசடி செய்ததாகக் கூறி சென்னை அமலாக்கத் துறையில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது. எனவே இது குறித்து, அந்த பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்லத்துரை மற்றும் கண்ணன் ஆகியோர் எனக்கு தெரியப்படுத்தினர். எனவே 2023, ஜுலை 5 அன்று சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கண்ணய்யன் கிருஷ்ணன் சகோதரர்களை நான் ஆஜர்படுத்தினேன். 

ஆனால் அங்கே அமலாக்கத்துறை அதிகாரிகள், வழக்கறிஞராகிய நீங்கள் உள்ளே வரக்கூடாது. குற்றம் சாட்டப்பட்டு உள்ள இரண்டு விவசாயிகளை மட்டும் தான் உள்ளே வர வேண்டும் என்று கூறி என்னை அனுமதிக்க மறுத்துவிட்டார்கள்.” என்று அந்த வீடியோவில் வழக்கறிஞர் பிரவீணா பேசியிருந்தார். இதன் மூலம் இந்த சம்பவம் தொடர்பான செய்திகள் கடந்த ஜூலை மாதத்திலிருந்தே சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன என்பதை அறிய முடிகிறது.

மேலும், பாதிக்கப்பட்ட விவசாயி கிருஷ்ணன் பேசியது குறித்து அரண் செய் ஊடகம் நேற்று வீடியோ வெளியிட்டுள்ளது. அதில் பேசியுள்ள முதியவர் கிருஷ்ணன், “நான், எனது அண்ணன் மற்றும் அண்ணிக்கு சொந்தமாக 6 1/2 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால் பக்கத்து நிலத்து காரர்கள் எங்கள் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்தார்கள். நாங்கள் சம்மதிக்கவில்லை. எனவே வர்கள் எங்களை பயிர் செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர்.

கஞ்சிக்கே வழியில்லாமல் இருக்கிறோம். முதியோர் உதவித் தொகை ஆயிரம் ரூபாய் மற்றும் அரசு தரும் ரேசன் பொருட்களைக் கொண்டு தான் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில் நாங்கள் கருப்புபண பரிவர்த்தனை செய்ததாகக் கூறி அமலாக்கத் துறையிடமிருந்து சம்மன் வந்துள்ளது. எங்களிடம் எந்த விதமான கறுப்புப் பணங்களும் கிடையாது. என்னுடைய SBI வங்கி கணக்கில் மட்டும் தான் சுமார் ஐநூறு ரூபாய் பணம் உள்ளது. எனவே இது பழிவாங்கும் செயல் மட்டுமே. இதற்கு பக்கத்து நிலத்துக்காரர்களும் உடந்தை. இது குறித்து காவல்துறையினரிடமும் புகார் அளித்தோம். ஆனால் காவல் துறையினரோ, அதிகாரிகளோ எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.” என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

இதன் மூலம் அமலாக்கத்துறை முதியவர்கள் கண்ணய்யன் மற்றும் கிருஷ்ணன் அவர்களுக்கு கருப்புப்பண மோசடி வழக்கில் சம்மன் அளித்துள்ளது உண்மையே என்பதை உறுதிபடுத்த முடிகிறது. வயதான விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறிக்க அமலாக்கத்துறையை பயன்படுத்துவதாக பாஜகவைச் சேர்ந்தவர்கள் மீது குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

வயதான விவசாயிகள் கண்ணய்யன் மற்றும் கிருஷ்ணன் மீது மோசடி வழக்காக, கருப்புபண பரிவர்த்தனையா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, வீட்டின் கதவு எண் இன்றி, சாதிப் பெயரை தெளிவாகக் குறிப்பிட்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது பலத்த கேள்வியையே எழுப்புகிறது ?. அவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் சாதியைக் குறிப்பிட்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருப்பது பெரும் கண்டனத்துக்குரிய செயலாகும்.!!

Please complete the required fields.
Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader