விவசாயிகள் மீதான வழக்கைக் கைவிட அமலாக்கத்துறை முடிவு.. என்ன காரணம்?

மிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு விவசாய முதியவர்களுக்கு ஜாதி பெயரைக் குறிப்பிட்டு அமலாக்கத்துறை அனுப்பிய கடிதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவ்வழக்கைக் கைவிட அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. எதற்காக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்பதை விரிவாகக் காண்போம்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், ராமநாயக்கன் பாளையத்தை சேர்ந்த கண்ணய்யன் (73) மற்றும் கிருஷ்ணன் (70) என்பவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை கடந்த ஜூன் மாதம் சம்மன் அனுப்பியது.

அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனில் விவசாயிகளின் ஜாதி பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததற்கு அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்புகள் எழத் தொடங்கியது. 

மேலும் படிக்க: வயதான விவசாயிகளுக்கு சாதியைக் குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை.. பின்னணி என்ன?

அது மட்டுமின்றி, சேலம் கிழக்கு மாவட்ட பாஜக செயலாளர் குணசேகரன் அவரது கட்சி செல்வாக்கைப் பயன்படுத்தி தங்களது நிலத்தை அபகரிக்க முயல்வதாக கண்ணய்யன் மற்றும் கிருஷ்ணன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து பல்வேறு தகவல்களும் சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கியது. 

தன்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து குணசேகரன் விகடனிடம் பேசுகையில் “கண்ணையன், கிருஷ்ணன் தரப்பினர், 4.12.1991-ம் ஆண்டு என் அம்மா லெட்சுமியிடம் தங்களது 5 ஏக்கர் நிலத்தையும் அடமானமாகவைத்து ஒரு லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர். இது அரசு ஆவணக் குறிப்பேட்டிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே, அது சட்டப்படி எங்கள் நிலம். 2021-ம் ஆண்டு எங்களுக்குச் சொந்தமான நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தில், இவர்கள் விவசாயம் செய்து வந்ததால் நான் தட்டிக்கேட்டதும் என்மீதே காவல் நிலையத்தில் புகாரளித்தனர். நானும் சேலம் ஆத்தூர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தேன்… அவ்வளவுதான். மற்றபடி எந்த ஆதாரத்தின் அடிப்படையில், அமலாக்கத்துறையில் நான் புகாரளித்ததாகப் புகார் சொல்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நான் பா.ஜ.க-வில் பொறுப்பில் இருக்கிறேன் என்கிற காரணத்துக்காகவும், ஜனவரி 3-ம் தேதியன்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது நடைப்பயணத்தை ஆத்தூரிலிருந்து தொடங்கவிருக்கிறார் என்பதாலும் ஐந்து மாதங்களுக்குப் பிறகு இந்தப் பிரச்னையில் என்னை இழுத்துவிடுகின்றனர்” என்று கூறியுள்ளார்.

காட்டு விலங்கைக் கொன்றார்களா?

கண்ணய்யன் மற்றும் கிருஷ்ணன் 2017ம் ஆண்டு இரண்டு காட்டெருமைகளைக் கொன்றது தொடர்பாக வனத்துறை அளித்த புகாரின் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதாக செய்திகள் வெளியாகியது. 

வன உயிர் பாதுகாப்பு சட்டம் 1972-ன் படி பதிவு செய்யப்படக்கூடிய வழக்குகளை PMLA (Prevention of Money Laundering Act)  சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், இச்சம்பவம் எப்போது நடந்தது? அந்த வழக்கின் தற்போதைய நிலை என்ன? என்பது பற்றிய முழு தகவல்களை குறிப்பிடாமல் பெரும்பாலான ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

கண்ணய்யன் மற்றும் கிருஷ்ணன் பெருச்சாளிகளிடம் இருந்து தங்களது பயிர்களைக் காக்க  2017, ஜனவரி 1ம் தேதி தங்கள் நிலத்திற்கு மின் வேலி அமைத்துள்ளனர். அடுத்தநாள் (ஜன.2) காலை ஆண் காட்டெருமை ஒன்றும் பெண் காட்டெருமை ஒன்றும் அந்த மின் வேலியில் சிக்கி இறந்தது. இறந்த மாடுகளை கண்ணய்யன் மற்றும் கிருஷ்ணன் குழி தோண்டி புதைத்தனர். 

இது தொடர்பாக 2017, ஜனவரி 15ம் தேதி ஆத்தூர் வனச்சரக அலுவலர் மேற்கொண்ட விசாரணையில், இச்சம்பவம் பற்றி அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

இவ்வழக்கு விசாரணைக்குப் பிறகு 2021, டிசம்பர் மாதம் கண்ணய்யன் மற்றும் கிருஷ்ணன் குற்றவாளிகள் இல்லையென நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இப்படி முடிந்த வழக்கிற்குத்தான் அமலாக்கத்துறையினர் ஜாதி பெயரைக் குறிப்பிட்டு சம்மன் அனுப்பி இரண்டு விவசாய முதியவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர். 

வழக்கினை கைவிட முடிவு : 

இரு விவசாயிகள் மீதான வழக்குகளைக் கைவிட அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது. ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்‘ வெளியிட்ட செய்தியில், 2021, ஜூலை 12ம் தேதி தமிழ்நாடு வனத்துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் தான் கண்ணய்யன் மற்றும் கிருஷ்ணன் மீது 2022, மார்ச் மாதம் PMLA வழக்குப் பதிவு செய்தோம் என அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஆனால், 2021 டிசம்பர் மாதமே அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பிறகு எதற்கு இந்த சம்மன் என்கிற கேள்வி எழுகிறது. மற்றொரு அமலாக்கத்துறை அதிகாரியோ, இது வழக்கமான நடைமுறைதான் என கூறியதும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பிற மாநிலத்தில் வன உயிர் பாதுகாப்பு சட்டத்தின் கீழான வழக்குகள் : 

கண்ணய்யன் மற்றும் கிருஷ்ணன் மீது வன உயிர் பாதுகாப்பு சட்டம் 1972ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதின் காரணமாகவே அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், மற்ற மாநிலங்களில் இச்சட்டத்தின் கீழ் எவ்வளவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. 

NCRB 2016 – 2022

தேசிய குற்ற ஆவணக் காப்பக (NCRB) அறிக்கையின் படி 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையில் (ஏழு ஆண்டுகள்) அதிகப்படியாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 1,495 வழக்குகள் வன உயிர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக ராஜஸ்தானில் 1,154 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த ஏழு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 4 வழக்குகள் மட்டுமே இச்சட்டத்தின் கீழ் பதிவாகியுள்ளது. மேற்கண்ட இரு மாநிலங்களைக் காட்டிலும் இது பல மடங்கு குறைவாகும். இச்சட்டத்தின் கீழ் அதிக குற்றங்கள் பதிவாகியுள்ள மேற்கண்ட மாநிலங்களில் அமலாக்கத்துறையின் நடவடிக்கை என்ன?

மேலும், தமிழ்நாடு வனத்துறைதான் முதலில் அவ்விவசாயிகளின் ஜாதி பெயரை வழக்குப் பதிவு செய்யும்போது குறிப்பிட்டுள்ளது. அதன் அடிப்படையில்தான் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனில் ஜாதி பெயர் இடம்பெற்றது எனக் கூறப்படுகிறது. ஒருவர் மீது குற்றம் சுமத்தப்படும் பட்சத்தில் அவர் எந்த ஜாதியாக இருந்தால் என்ன என்பதே அடிப்படை கேள்வி. அமலாக்கத்துறையோ தமிழ்நாடு வனத்துறையோ யார் இதனைச் செய்தாலும் தவறுதான்.

இவர்கள் மீதான புகாரை தமிழ்நாடு வனத்துறை 2021, ஜூலை மாதம் அமலாக்கத்துறைக்கு அனுப்பியுள்ளதாக கூறியுள்ளனர். ஆனால் 2021, டிசம்பர் மாதமே வழக்கில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பின்னர் எதற்கு 2023, ஜூன் மாதம் அமலாக்கத்துறை சம்மன் அனுப்ப வேண்டும். ஒருவேளை இந்த சம்மன் அனுப்பப்பட்டது வழக்கமான நடைமுறை என்றால், வெறும் சமூக ஊடகங்களில் வந்த எதிர்ப்பிற்காகவா திரும்ப பெறுகிறார்கள் என்கிற சந்தேகம் எழுகிறது.

Link : 

TNSA140000732017_2_2021-12-28 – judgment

Crime in India – 2016 Complete PDF

CrimeinIndia2017-Volume

Crime in India 2018 – Volume 1

CII 2019 Volume 1

CII 2020 Volume 1

CII 2021 Volume 1

Crime in India 2022 Book1

Please complete the required fields.
Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader