சிஏஏ : அன்று சட்டம் நிறைவேற ஆதரவு, இன்று எதிர்ப்பு.. விமர்சிக்கப்படும் எடப்பாடி பழனிசாமி !

CAA எனப்படும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்திற்கான மசோதா (CAB) கொண்டுவருவதற்கான முயற்சிகள் தொடங்கிய போதில் இருந்தே இதற்கு எதிரான போராட்டமும் விவாதமும் நடந்து கொண்டுதான் உள்ளது. 

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஒன்றியத்தில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் குடியுரிமை சட்டத்தில் திருத்தத்தினை கொண்டு வந்தது. இந்த திருத்தம் இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து மத துன்புறுத்தல் காரணமாகக் கடந்த 2014 டிசம்பர் 31ம் தேதிக்கு முன் இந்தியாவில் குடியேறியவர்கள், குறிப்பாக முஸ்லிம் அல்லாத இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயினர்கள் மற்றும் பவுத்தர்களுக்குக் குடியுரிமை வழங்க வகை செய்கிறது.

அண்டை நாட்டில் இருந்து இந்தியா வந்தவர்கள் என்பதில் இஸ்லாமியர்கள் சேர்க்கப்படவில்லை. அரசு வரையறுத்துள்ள மதத்தினரைப் போல் இஸ்லாமியர்களும் இந்தியாவில் தஞ்சம் அடைந்திருந்தால் அவர்களுக்குக் குடியுரிமை மறுக்கப்படும். 

அதுமட்டுமின்றி இந்தியா அரசியலமைப்பு மதத்தின் பெயரால் ஒருவரைப் பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது என்றும் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. ஆனால், இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் மத ரீதியிலான பாகுபாட்டை அங்கீகரிக்கிறது என்கிற குற்றச்சாட்டுகள் இச்சட்டத்தை எதிர்ப்பவர்களால் முன்வைக்கப்படுகிறது. 

மேலும் எந்தவொரு சட்டமும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த 6 மாதங்களுக்குள் அதற்கான விதிகள் வகுக்கப்பட வேண்டும். ஆனால், CAA-விற்கு மட்டும் 2020ம் ஆண்டு முதல் அதற்கான காலக்கெடுவை ஒன்றிய அரசு நீட்டித்துக் கொண்டே உள்ளது.  

CAA – எடப்பாடி பழைச்சாமி : 

பாஜகவைச் சேர்ந்த ஒன்றிய துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை இணை அமைச்சர் சாந்தனு தாக்குர் ‘CAA விரைவில் அமல்படுத்தப்படும், இந்த சட்டம் இன்னும் ஏழு நாட்களுக்குள் செயல்படுத்தப்படும். இது நான் அளிக்கும் உத்தரவாதம்’ என ஊடகம் ஒன்றில் பேசினார். 

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வரை CAA-விற்கு எதிராக அறிக்கைகளை வெளியிடத் தொடங்கியுள்ளனர். 

எடப்பாடி பழனிசாமி அவரது X பக்கத்தில்CAA சட்டத்தால் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது. CAA சட்டத்தால் தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டால் எங்கள் அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்பதை ஏற்கனவே எங்களது ஆட்சியின் போது சட்டமன்றத்திலேயே நாங்கள் தெரிவித்தோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

ஆனால், CAA சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த போது அதிமுக அதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. அச்சட்டம் குறித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க் கட்சியினர் கேள்வி எழுப்பிய போதும் ஆதரவான கருத்தையே எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

குடியுரிமை திருத்த மசோதா வாக்கு விவரம் : 

2019ம் ஆண்டு குடியுரிமை திருத்த மசோதா கொண்டு வந்த காலக்கட்டத்தில் தமிழ்நாடு சார்பாக மக்களவையில் இருந்த உறுப்பினர்கள் : 

    • திமுக + கூட்டணி = 38 (24 + 14)
    • அதிமுக = 1  

குடியுரிமை திருத்த மசோதா மீது வாக்கெடுப்பு நடக்கையில் திமுக மக்களவை உறுப்பினர்கள் 9 பேர் அவைக்கு வரவில்லை. மீதம் திமுகவைச் சேர்ந்த 15 உறுப்பினர்களும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்களும் மசோதாவிற்கு எதிராக வாக்களித்தனர். ஆனால், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் மூலம் 311 வாக்குகள் ஆதரவாக செலுத்தப்பட்டது மசோதாவை மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

மாநிலங்களவையில் தமிழ்நாடு சார்பாக இருந்த உறுப்பினர்கள் :

    • திமுக + கூட்டணி = 7 
    • அதிமுக + கூட்டணி = 11

மக்களவை போல மாநிலங்கள் அவையில் பாஜகவிற்குச் செல்வாக்கு இல்லை. இந்த மசோதாவைச் சட்டமாக்க அது தனது கூட்டணிக் கட்சிகளையே சார்ந்திருக்க வேண்டி இருந்தது. மாநிலங்களவையிலும் திமுக உறுப்பினர்கள் மசோதாவிற்கு எதிராகவே வாக்கு செலுத்தினர். அதிமுக உறுப்பினர்கள் 11 பேரும் ஆதரவாக வாக்கு செலுத்தினர். அதிமுக செலுத்திய 11 வாக்குடன் சேர்த்து 125 ஆதரவு வாக்குகளுடன் குடியுரிமை திருத்த மசோதா மாநிலங்கள் அவையில் நிறைவேற்றப்பட்டது. எதிராகப் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 105. 

அதிமுக மட்டும் எதிராக வாக்கு செலுத்தி இருந்தால் ‘ஆதரவு 114, எதிர்ப்பு 116’ என்கிற அடிப்படையில் மசோதா சட்டமாகி இருக்காது. 

மேலும் படிக்க : சிஏஏ, என்ஐஏ சட்ட மசோதா வந்தபோது திமுக வெளிநடப்பு செய்ததா ?

தமிழ்நாடு சட்டமன்றத்தில் CAA :

எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த போது (2020, பிப்ரவரி) ‘CAA-விற்கு எதிராகத் தீர்மானம் போடப்படுமா’ என எதிர்க் கட்சியினர் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். 

இதற்குப் பதிலளித்த பழனிசாமி “இதையே சொல்லிச் சொல்லி நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டு உள்ளீர்கள். இதனால் யார் பாதிக்கப்பட்டுள்ளனர் சொல்லுங்கள்? நாங்கள் தீர்வு வாங்குகிறோம். தமிழ்நாட்டில் வாழுகின்ற தமிழ் மண்ணில் பிறந்த எந்த சிறுபான்மையின மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் எனச் சுட்டிக் காட்டுங்கள். அதற்கு நாங்கள் பதில் சொல்கிறோம். அதை விட்டுவிட்டு மக்களை ஏமாற்றி நாடகமாடி, தவறான அவதூறான செய்தி சொல்லி அமைதியாக வாழுகிற மாநிலத்தில் குந்தகம் ஏற்படுத்துகிறீர்கள். யார் பாதிக்கப்பட்டுள்ளார் சொல்லுங்கள்?” என ஆக்ரோஷமாகப் பேசினார்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் 2021, செப்டம்பரில் இச்சட்டத்திற்கு எதிராகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போதும் இச்சட்டத்திற்கு எதிரான நிலைபாட்டில்தான் திமுக உள்ளது. இந்த தீர்மானம் கொண்டு வரும் போது அதிமுக அவையில் இல்லை, வேறு காரணங்களை கூறி வெளிநடப்பு செய்தனர். பாஜக  தீர்மானத்திற்கு எதிராக வெளிநடப்பு செய்தது. 

2023ல் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய பிறகு ‘கூட்டணியில் இருந்ததால் அதன் தர்மத்திற்கு உட்பட்டு, எங்களுக்கு உடன்படாத சிலவற்றையும் நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருந்தோம். அந்த அடிப்படையில்தான் சிஏஏ-வை ஆதரித்தோம்’ என எடப்பாடி கூறியதும் குறிப்பிடத்தக்கது. 

இப்படி சட்டம் நிறைவேற்றக் காரணமாக இருந்து விட்டு, தற்போது CAA-விற்கு எதிராக மாற்றி பேசுகிறார் என பழனிசாமியை பலரும் விமர்சித்து வருகின்றனர். 

அப்படி விமர்சிக்கையில் SDPI மாநாட்டில் பழனிசாமி பேசிய வீடியோ ஒன்றும் பரப்பப்படுகிறது. அதில், ‘இங்கே பேசுகிறவர்கள் CAA பற்றிப் பேசுகிறார்கள். நான் எதிர்த்து ஓட்டுப் போட்டால் ஆட்சி இருக்காது என்று சொன்னாரு. அவர் எதிர்த்து ஓட்டுப் போட்ட பிறகும் இருந்தது அண்ணா திமுக ஆட்சி’ என பழனிசாமி கூறுகிறார். 

கடந்த ஜனவரி 7ம் தேதி நடந்த SDPI மாநாட்டில் பழனிசாமி பேசியதை எடிட் செய்து தவறாகப் பரப்புகின்றனர். அவர் பேசிய முழு வீடியோ (44 நிமிடம்) ‘நியூஸ் ஜெ’ யூடியூப் பக்கத்தில் உள்ளது. அதில் 22வது நிமிடத்தில் பரவக் கூடிய பகுதி உள்ளது. 

அதில், “இங்கே கூட CAA பற்றிப் பேசினார்கள். நான் முதலமைச்சராக இருந்தேன். எவ்வளவு இக்கட்டான காலம் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். 4 பேருதாங்க அதிகம். அந்த நாலரை ஆண்டுக் காலம் நான் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை. இப்போது வெளியில் ஒருவர் சென்று உள்ளார் அல்லவா (ஓ.பன்னீர் செல்வம்). அவரை வைத்தும் நான் காலத்தை ஓட்ட வேண்டி இருந்தது. அவரு நான் எதிர்த்து ஓட்டுப் போட்டிருந்தாள் ஆட்சி இருக்காது என்று சொன்னார். அவர் எதிர்த்து ஓட்டுப் போட்ட பிறகும் ஆட்சி இருந்தது அண்ணா திமுக ஆட்சி” எனக் கூறியுள்ளார். 

CAA பற்றிப் பேசத் தொடங்கி பிறகு அதிமுக-வில் ஓபிஎஸ் ஈபிஎஸ் இடையேயான உட்கட்சி மோதல் பற்றி பழனிசாமி பேசியுள்ளார். இதனை எடிட் செய்து தவறாகப் பரப்பியுள்ளனர்.

SDPI மாநாட்டில் பழனிசாமி பேசுகையில் சிறுபான்மை மக்களின் போராட்டத்திற்கு அனுமதியும் பாதுகாப்பும் தங்கள் அரசு வழங்கியதாகக் கூறியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டையில் 2020, பிப்ரவரி மாதம் இஸ்லாமியர்கள் உட்படப் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் சிலர், கல்வீச்சில் ஈடுபட்டதாகக் கூறி, தடியடி நடத்தி போராட்டக்காரர்களை காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது ஆட்சியில் இருந்தது எடப்பாடி பழனிசாமி என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்படி சட்டம் நிறைவேறக் காரணமாக இருந்த அதிமுக தற்போது, CAA-விற்கு எதிரான கருத்துக்களைக் கூறுவதும், கூட்டணி தர்மத்திற்காக நாடாளுமன்றத்தில் ஆதரவாக வாக்கு செலுத்திவிட்டோம் எனச் சொல்வதும் எந்த வகையிலும் ஏற்புடையதாக இல்லை. அதிமுக தற்போது எதிரான நிலைப்பாடு எடுப்பதினால் இந்த சட்டத்தைத் திரும்பப் பெற முடியுமா?

Please complete the required fields.
Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader