This article is from Aug 28, 2021

முன்பே கொலை வழக்கில் சிக்கியவரா எடப்பாடி பழனிசாமி? வைரல் பதிவுப் பின்னணி !

கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவ வழக்கில் மீண்டும் விசாரணையை துவங்கி இருக்கிறது திமுக அரசு. கோடநாடு வழக்கில் தன்னைத் தொடர்புப்படுத்த சதி நடப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார். கோடநாடு வழக்கு விசாரணை தொடங்கியது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது மற்றும் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புப்படுத்தி சமூக வலைதளங்களில் கருத்துக்களும், ட்ரோல் மீம்களும் வைரலாகின.

இதற்கிடையில், ” கொலை குற்றவாளியாக அரசியலில் நுழைந்த பழனிசாமி 33 ஆண்டு கழித்து மீண்டும் கொலை குற்றவாளியாகவே சிறை செல்ல போகிறார் ” என எடப்பாடி பழனிசாமியின் பழைய புகைப்படத்துடன் கூடிய பதிவின் ஸ்க்ரீன்ஷார்ட் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த பதிவு குறித்து வாசகர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது. இதை யார் பதிவிட்டார் எனத் தேடுகையில், ஆகஸ்ட் 22-ம் தேதி ஸ்ரீதேவி பாண்டியன் என்பவரின் ட்விட்டர் பக்கத்தில் இப்பதிவு வெளியிடப்பட்டு இருக்கிறது. இவர் ஓபிஎஸ் ஆதரவாளர் என்பதை முகப்பு புகைப்படங்கள் மூலம் அறிய முடிந்தது.

Twitter link | Archive link 

பதிவில், ” 1980களில் கொலை குற்றவாளியாக சத்தியமங்கலம் வனப்பகுதியில் தலைமறைவு வாழ்க்கையை நடத்தியவர் தான் எடப்பாடி பழனிசாமி. அன்றைய போக்குவரத்து துறை அமைச்சரும் தன்னுடைய தாய்மாமன் மகனுமாகிய ஈரோடு முத்துச்சாமி தயாவால் தப்பினார் ” எனும் மற்றொரு ஸ்க்ரீன்ஷார்ட் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் பழைய புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி மீதான கொலை வழக்கு குறித்து தேடுகையில், 2017-ம் ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி ” வெல்ல மூட்டை டு எடப்பாடியார்… பழனிசாமி முதலமைச்சர் ஆன கதை! ” தலைப்பில் விகடன் வெளியிட்ட கட்டுரையில், ” அரசியல் மூலம் பரவலாக அறியப்பட்டதற்கு முன்னரே, ஒரு கொலை வழக்கில் அடையாளம் காணப்பட்டு அந்த பகுதியில் அறிமுகமானவர் பழனிசாமி. பங்காளிகள் சூழ வாழ்ந்து வந்தவர் பழனிசாமி.

தன் குடும்பத்துக்கும் பங்காளி குடும்பத்துக்கும் பாதை பிரச்னையில் சண்டை மூள.. கொலை வரை நீண்டது. இதில் எதிர்தரப்பை சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டனர். கொலையில் தொடர்புடையவர்கள் எனத் தேடப்பட்டு வந்தவர்கள் தலைமறைவாகினர். அவர்களில் ஒருவர்தான் எடப்பாடி கே.பழனிசாமி. கட்டப்பஞ்சாயத்து, சமரசத்தால் சாட்சிகள் பல்டி அடிக்க.. வழக்கு தள்ளுபடியாகி கொலை வழக்கில் இருந்து மீண்டனர் பழனிசாமி தரப்பினர் ”

இதற்கு முன்பாக 2017 பிப்ரவரி 10-ம் தேதி விகடனில் “முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றிய நல்லதும் கெட்டதுமான செய்திகள் என்ன? ” எனும் தலைப்பில் வெளியான கட்டுரையிலும், ” பங்காளியோடு வாய்க்கால் வரப்புச்சண்டையில் ஏற்பட்ட கொலை சம்பவத்தில் தேடப்பட்டவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளுக்குள் மாயமாகிப்போனார்கள் என்றும், அவர்களில் பழனிசாமியும் ஒருவர் ” எனக் கூறப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி சவுக்குஆன்லைன் எனும் இணையதளத்தில், ” சொத்துத் தகராறுக்காக சொந்த பங்காளிகளை கொலை செய்த வழக்கில் கொலைக் குற்றவாளியாக இருந்தவர்தான் பழனிச்சாமி. பின்னர் பங்காளிகளுக்குள் சமரசமானதால் அவ்வழக்கில் விடுதலை செய்யப்பட்டார் ” எனும் வாக்கியமும், வைரல் செய்யப்படும் எடப்பாடி பழனிசாமியின் பழைய புகைப்படமும் இடம்பெற்று இருக்கிறது.

பங்காளி சண்டையில் ஏற்பட்ட கொலையில் தேடப்பட்டவர்கள் மலைக் காடுகளில் தலைமறைவாகியதாகவும், அதில் பழனிசாமியும் ஒருவர், அதன்பின்னர் சமரசத்தால் கொலை வழக்கில் இருந்து பழனிசாமி தரப்பினர் மீண்டனர் என எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த சமயத்திலேயே விகடன் கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறது.

தற்போது கோடநாடு எஸ்டேட் வழக்கோடு எடப்பாடி பழனிசாமி பெயர் தொடர்ந்து தொடர்ப்படுத்தி வருவதால் பழைய சம்பவத்தையும், கோடநாடு சம்பவத்தையும் இணைத்து வைரல் செய்து இருக்கிறார்கள். எனினும், கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக விரிவான விசாரணைக்கு பிறகே அதற்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்பு இருக்கிறதா அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சியா என்கிற உண்மை தெரியவரக்கூடும்.

Links : 

the-goods-and-bads-of-edappadi-palanisamy

biography-of-chief-minister-edappadi-palanisamy

எத்தன் எடப்பாடி.

Please complete the required fields.
Back to top button
loader