சென்னைக்கு வந்தது நாய்க்கறியா ?

தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படும் செய்தி சென்னை ஓட்டல்களில் நாய்க்கறி. ராஜஸ்தானில் இருந்து நாய்க்கறி கொண்டு வரப்பட்டது என தமிழக ஊடகங்கள் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் வைரலாக்கப்பட்டு வருகிறது. நடந்த நிகழ்வுகளை பார்ப்போம்.
நவம்பர் 17-ம் தேதி பாகத் கி கொதி – மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை எழும்பூருக்கு 2,100 கிலோ கறி கொண்டு வரப்பட்டுள்ளது. இது 20 தெர்மோகோல் பெட்டிகளில் அடைத்து இருந்துள்ளது.
ரயில் நிலையத்தில் நடைபெற்ற சோதனை, காத்திருந்து நாய்க்கறி பிடிக்கபட்டது என்று செய்திகள் பரவி வருகிறது. ஆனால், நடந்தவை யாதெனில், 20 பெட்டிகளைக் நடைமேடையில் இறக்கும் பொழுது அதில் துர்நாற்றம் வீசியுள்ளது. அந்நேரத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே போலீஸ் பெட்டிகளை சோதனை செய்துள்ளனர். பெட்டிகளில் இருப்பது ஆட்டுக்கறி போன்று இல்லாமல் வால் நீளமாகவும், உடல் சிறிதாகவும் இருந்தக் காரணத்தினால் அதனை நாய்க்கறி என நினைத்துள்ளனர்.
இதையடுத்தே நடந்த சம்பவங்கள் அனைத்தும் அனைவரும் அறிந்ததே. ராஜஸ்தானில் இருந்து 2,100 கிலோ நாய்க்கறி சென்னை வந்த செய்தியால் அசைவ உணவுகள் விரும்பி உண்பவர்கள் கூட ஹோட்டல்களில் சாப்பிட அச்சம் கொள்கின்றனர்.
சென்னை வந்தது நாய்க்கறி எனக் கூறுவதற்கு முக்கிய காரணம் கறியின் வால் நீளமாக உள்ளது என்றும், வாலில் முடி இல்லை என்பதே.
” இந்த விவகாரத்தில் ஷகிலா பானு என்பவர் அளித்த பேட்டி மிக முக்கியமானது. தனக்கும், தன்னை போன்ற 150 பேருக்கும் தான் கறி வந்துள்ளது. கொண்டு வந்த முறையில் தவறு இருந்தால் வழக்கு பதிவு செய்யுங்கள். ஆனால், நாய்க்கறி என்று வதந்தி பரப்ப வேண்டாம். டி.என்.ஏ சோதனையில் முடிவு வரட்டும் தெரியும். அவை ராஜஸ்தானில் உள்ள வெள்ளாடுகள் எனத் தெரிவித்து இருந்தார் “.
உண்மையில், அவை நாய்க்கறியாக இருந்தால் இதுபோன்று தைரியமாக பேட்டி அளிக்க அவசியமில்லை. இருப்பினும், அவர் கூறியது போன்று ராஜஸ்தானில் வால் நீளமான ஆடுகள் இருக்கிறதா என்று தேடுகையில், ” வால் நீளமாகவும் மற்றும் அளவில் சிறியவையாக இருக்கும் ராஜஸ்தான் செம்மறியாடுகள் இருப்பது பற்றி தெரிய வந்துள்ளது. அந்த ஆட்டிற்கு வாலின் நுனியில் இங்குள்ள ஆடுகள் போன்று நீளமான முடிகள் இல்லை “.
ராஜஸ்தானில் இருந்து 48-72 மணி நேரம் பயணம் செய்து கொண்டு வரப்பட்ட கறியானது பதப்படுத்தவில்லை என்பதால் வீணாகி துர்நாற்றம் வீசியுள்ளது. ஆகையால், அவற்றின் மீது பினாயில் தெளித்து கிடங்கிற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
ராஜஸ்தானில் இருந்து வந்த கறியானது நாய்க்கறியா என அறிய மெட்ராஸ் வெட்னரி காலேஜ்க்கு டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பியுள்ளனர். தற்போது, டி.என்.ஏ சோதனைகள் முடிய தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு வந்த கறி சரக்கு அனுமதி விவரங்களில் “ meat “ என்று குறிப்பிடாமல் “ Fish “ என்று குறிப்பிட்டு இருந்துள்ளது. இதை கண்டிப்பாக கருத்தில் கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. இந்த விவகாரத்தில் ஜெயபிரகாஷ் மற்றும் டெலிவர் ஏஜென்ட் கணேசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதைப் பற்றி விசாரிக்க தனிப்படை ஒன்று ராஜஸ்தான் செல்வதாக ரயில்வே பாதுகாப்புப்படை ஆணையர் லூயிஸ் அமுதன் செய்தியில் பேட்டி அளித்துள்ளார்.
நாய்க்கறி விவகாரத்தில் பல மாறுபட்ட மற்றும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் சமூக ஊடகத்தில் வருவதை பார்க்க முடிகிறது. தெருவில் இருக்கும் நாய்களை கொன்று கொடுப்பதாகவும், ஆன்லைன் விற்பனை இதை சார்ந்தே உள்ளது போன்றும் சித்தரிக்கப்படுகிறது. இதே போன்று ஊடகங்களும் மிகைப்படுத்தி செய்திகளை வெளியிடுகின்றனர். குறிப்பாக, 2000 கிலோவிற்கு ஒரேமாதிரியாக நாய்களை ஆடுகள் போல் வளர்த்து கறியை அனுப்புவது என்பது சாத்தியமில்லாதவை எனத் தோன்றுகிறது.
ராஜஸ்தானில் வால் நீளமான ஆடுகள் இருப்பது உண்மை என்றாலும், அந்த ஆடுகள் தான் இவை என்று நிரூபிக்க ஆதாரங்கள் தேவை. தற்போதுவரை கறியின் டி.என்.ஏ முடிவுகள் வெளியாகவில்லை, ஆய்வுக் குழு ராஜஸ்தான் சென்றுள்ளது. அதற்குள் ஓர் முடிவிற்கு வர வேண்டாம்.
ஆக, வீண் பதற்றத்தை தவிர்த்து உண்மைத் தகவல் கிடைக்கும் வரை தேவையற்ற செய்திகள் பதிவிடுவதைத் தவிர்க்கவும்.
DNA analysis on seized meat from railway station to take time