This article is from Dec 10, 2018

5 மாநிலத் தேர்தலில் நடந்த முறைகேடு !

இந்திய தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்(EVM) கொண்டு முறைகேடுகள் நிகழ்வதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் எழுகிறது. அதனை மெய்ப்பிக்கும் வகையிலும் அவ்வபோது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நடைபெறும் முறைகேடுகள், தேர்தல் அதிகாரிகளின் தவறுகள், தேர்தலில் நடைபெறும் குளறுபடிகள் பற்றி செய்திகள் வெளியாகின.

அவ்வாறான தொடர் சம்பவங்கள் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில தேர்தல் களத்தில் அரங்கேறியுள்ளது. வாக்கு இயந்திரங்களில் நடைபெற இருந்த முறைகேடுகள், அதற்கு துணைபோனவர்கள், பல லட்ச வாக்களர்களின் பெயர்கள் இடம்பெறாமல் போனது போன்றவைப் பற்றி விரிவாக காண்போம்

மத்தியப்பிரதேசத்தில் நடந்தவை :

  • முறைகேடுக்கு உடந்தையாக தேர்தல் அதிகாரிகள்

மத்தியப்பிரதேச மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் நவம்பர் 28-ம் தேதிக்கு முன்பு சீல் வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனியார் ஹோட்டல் அறைகளில் வைக்கப்பட்டதைக் கண்டறிந்து எடுக்கப்பட்ட மூன்று வீடியோக்கள் வைரலாகியது.

மத்தியப்பிரதேசத்தின் சஜபூர் மாவட்டத்தில் உள்ள ராஜ்மஹால் ஹோட்டலில் நவம்பர் 27-ம் தேதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர்கள் சரிபார்ப்பு மாதிரி தணிக்கை சீட்டுகள் வைக்கப்பட்டு இருந்தன. அந்த ஹோட்டல் பிஜேபியை சேர்ந்தவருக்கு சொந்தமானது. மனோஜ் ப்ரோகித் என்ற பத்திரிகையாளர் எடுத்த வீடியோவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் பணிக்கு வந்த அதிகாரிகள் இடம்பெற்றனர். மூன்று அறைகளில் தேர்தல் பணிக்கு வந்த துறை அதிகாரி சோகலால் பாலாஜி, Micro Observer(நுண் பார்வையாளர்கள்), காவலர் ஒருவர் மற்றும் ஓட்டுனர் ஒருவரும் தங்கி இருந்துள்ளனர். இந்த விவகாரத்தில் துறை அதிகாரி உள்ளிட்டோர் சஸ்பென்ட் செய்யப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

  • EVM பாதுகாப்பு அறையில் மின்தடை

மத்தியப்பிரதேசத்தின் போபாலில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறையில் நவம்பர் 30-ம் தேதி ஒரு நேரத்திற்கு மேலாக ஏற்பட்ட மின் தடையால் சிசிடிவி கேமராக்கள் இயங்காமல் இருந்தன. மின்தடை எவ்வாறு ஏற்பட்டது என்பது தெரியவில்லை.

போபால் EVM பாதுகாப்பு அறையில் மின்தடையால் சிசிடிவி இயங்காமல் இருந்தது, அடுத்து வாக்குப்பதிவு முடிந்து 48 மணி நேரத்திற்கு பிறகு நம்பர் ப்ளேட் இல்லாத பள்ளி வாகனத்தைப் பயன்படுத்தி சாகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு சென்றது குறித்த பல குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் எம்.பி விவேக் தக்கா செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.

  • ஜெய்ட்பூர் தொகுதியின் புதார் நகர் வாக்குச்சாவடியில் பதிவாகிய வாக்குகளை விட 45 வாக்குகள் அதிகமாக EVM-ல் காட்டப்படுள்ளது. வாக்குப்பதிவு அதிகாரி பதிவு செய்த 819 வாக்குகளுக்கு பதிலாக EVM-ல் 864 வாக்குகள் என காண்பித்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்தவை :

சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்டரில் உள்ள EVM பாதுகாப்பு அறையில் லேப்டாப், செல்போன் உடன் இருந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், ரிலையன்ஸ் ஜியோவில் பணிபுரிவதாக கூறியுள்ளார்கள். இதனை மறுத்த ஜியோ நிறுவனம், அந்த நபர் எங்களின் ஊழியர் அல்ல. ஆனால், உள்ளூர் பகுதிகளில் சென்று பராமரிப்பு பணிகளை செய்யும் விற்பனையாளர்களின் ஊழியர்கள் (Vendor Technicians) என தெரிவித்தனர்.

உத்தரப்பிரதேசம் :

உத்தரப்பிரதேசத்தில் சர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஓர் தொகுதியின் 44 வது சாவடியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் மட்டும் நீக்கப்பட்டு உள்ளதாக மூத்த காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சின்காவி கூறியுள்ளதாக செய்தியில் வெளியாகி உள்ளது.

ராஜஸ்தானில் ரோட்டில் கிடந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் :

ராஜஸ்தானின் பாரன் மாவட்டத்தின் கிஷான்கஞ் தொகுதியின் ஷகாபாத் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாக்கு இயந்திரங்கள் கிடப்பதை பார்த்து உள்ளூர் மக்கள் புகார் அளித்தனர்.

இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம், பாதுகாப்பு அறைக்கு EVM பெட்டிகளை எடுத்து செல்லும் பொழுது வாகனத்தில் இருந்து கீழே தவறி விழுந்து சாலையில் கிடந்துள்ளது. தேர்தல் பணியில் இருந்த இரு துறை அதிகாரிகள் அலட்சியத்தால் இவ்வாறு நடந்தது எனக் கூறி அவர்களை சஸ்பென்ட் செய்துள்ளது.

தெலுங்கானாவில் 22 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம் :

தெலுங்கானா மாநிலத் தேர்தலில் வாக்கு செலுத்த சென்றவர்களின் பெயர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாக புகார் அளித்தனர். கிட்டத்தட்ட 22 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அவர்களுக்கு தெரியாமல் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

இதற்கு பதில் அளித்த முதன்மை தேர்தல் அதிகாரி ராஜத் குமார், இது மிகப்பெரிய தவறு. மக்களுக்கு தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். தனிப்பட்ட முறையில் எனக்கு தெரிந்த பலரும் வாக்கு செலுத்தியதாக கூறினர். இருப்பினும், இது வெளிப்படையான தவறாகும் என டிசம்பர் 7-ம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து இருந்தார்.

அரசியல் கட்சிகளின் அதிகாரமின்றி தன்னிசையாக இயங்க வேண்டியது தேர்தல் ஆணையம். ஆனால், இன்று அரசியல்வாதிகளின் அதிகாரத்தால் அவர்களுக்கு ஏற்ப தேர்தல் அதிகாரிகள் செயல்படுகின்றனரோ என்ள சந்தேகத்தை இந்த செய்திகள் வரவழைக்கிறது .

தேர்தல் ஆணையம் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மக்கள் மத்தியில் நம்பிக்கையைப் பெற தவறி விட்டன. ஐந்து மாநில தேர்தல்களில் தேர்தல் ஆணையம் மற்றும் EVM மீதான தவறுகள், தன்னிச்சையாக செயல்பட வேண்டிய ஆணையம் அரசியல் கட்சிக்கு ஆதரவாக இருப்பதாக நினைக்க வைக்கின்றது. இன்றைய மாநில தேர்தலில் நடைபெறுபவை அனைத்தும் அடுத்த ஆண்டு வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஒத்திகையாக இருக்குமா ?

இந்தியா ஒரு ஜனநாயக நாடு என கூறுகிறோம். ஜனநாயகம் என்பதில் இருந்து தவறி அதிகார வர்க்கத்தின் கையில் அனைத்தும் செல்கிறதே என ஒலிப்பது மக்களின் குமுறல். தன்னை ஆள்பவர்கள் தன்னால் தேர்தெடுக்கப்பட்டவராக இருக்க வேண்டும் என்ற அடிப்படையே தடம் மாறுகிறதா ?

Congress alleges EVM tampering in Madhya Pradesh

MPPolls: A viral video shows EC officials with EVMs at a hotel—but how credible is it?

‘Sealed’ EVM Found Abandoned On Road After Polling In Rajasthan, EC Claims It Was Not Used

Rajasthan election: EVM found lying on road, 2 officials suspended

Election Body Admits Cameras Failed For Over An Hour At EVM Strongroom

Mass deletion of voter names reported in Telangana polls

Please complete the required fields.




Back to top button
loader