தேர்தல் பத்திரம் நிதி: வாரிக் குவித்த பாஜக.. ED, IT ரெய்டில் சிக்கிய நிறுவனங்களின் நிதி யாருக்கு?

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த மாதம் தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானது என்றும், வங்கிகள் உடனடியாக தேர்தல் பத்திர விநியோகத்தை நிறுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

மேலும், அத்தீர்ப்பில் 2019-ம் ஆண்டு முதல் விநியோகிக்கப்பட்ட தேர்தல் பத்திர விவரங்களை மார்ச் 6 ஆம் தேதிக்குள் SBI வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல்களை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணைய தளத்தில் வெளியிடவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

தரவுகள் சரிபார்ப்பு மற்றும் ஒருங்கிணைப்பு செய்ய கால தாமதம் ஆகும் என்று கூறி ஜூன் 30 வரை உச்ச நீதிமன்றத்தில் அவகாசம் கேட்டது எஸ்பிஐ.  வங்கியின் இந்த கோரிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும்,  தேர்தல் பத்திர விவரங்களை மார்ச் 12ம் தேதிக்குள் சமர்பிக்க உத்தரவிட்டதோடு, அந்த தகவல்களை தேர்தல் ஆணையம் மார்ச் 15ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் கெடு விதித்தது. இந்நிலையில், நேற்று (மார்ச் 14) அந்தப் பட்டியலைத் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம்.

உச்ச நீதிமன்ற உத்தரவின் பெயரில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இரண்டு பட்டியல்களை வெளியிட்டுள்ளது. முதல் பட்டியலில் தேர்தல் பத்திரத்தை வாங்கிய நிறுவனங்களின் பெயர்களும், இரண்டாவது பட்டியலில் தேர்தல் பத்திரங்களை வங்கியில் டெப்பாசிட் செய்த அரசியல் கட்சிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இவ்விரண்டும் தனித்தனி தகவல்களாகவே தரப்பட்டுள்ளன. இதில் எந்த நிறுவனம் (Purchaser), எந்தக் கட்சிக்கு நன்கொடை அளித்தது என்ற விவரங்கள் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் எஸ்பிஐ வங்கி தாக்கல் செய்துள்ள ஆவணத்தில், கடந்த ஏப்ரல் 2019 முதல் 15 பிப்ரவரி 2024 வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 22,030 தேர்தல் பத்திரங்களை அரசியல் கட்சிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. எஞ்சிய 187 பத்திரங்களின் தொகை பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்றும் எஸ்பிஐ அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் பத்திரம் என்றால் என்ன ? 

தேர்தல் பத்திரம் என்பது அரசியல் கட்சிக்கு நிதி வழங்கப் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். இந்தியாவில் தனிநபராகவோ அல்லது நிறுவனமாகவோ அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் தனது அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ளாமல் நிதியளிக்க முடியும்.

எந்த கட்சிகள் தேர்தல் பத்திரம் பெறலாம்? 

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 (43 இன் 1951) பிரிவு 29A இன் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சியாகவும், முந்தைய நாடாளுமன்ற தேர்தலிலோ அல்லது சட்டமன்ற தேர்தலிலோ ஒரு சதவீதத்திற்கும் அதிகமாக வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சியாகவும் இருப்பின் அந்த கட்சி தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெறலாம்.

தேர்தல் பத்திரம் வந்தது எப்படி?

2017-18 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் நிதி மசோதா, 2017 மூலம் தேர்தல் பத்திரங்கள் நடைமுறைக்கு வந்தது. இதற்காக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, Companies Act 1956 மற்றும் Income Tax Act 1961 உள்ளிட்ட சட்டங்களில் பல திருத்தங்கள் கொண்டு வரப்பட்ட பின் செயல்பாட்டுக்கு வந்தது. மார்ச் 2018ல் முதல் முறையாக தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டன.

இந்த தேர்தல் பத்திரங்கள் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் (SBI) குறிப்பிட்ட சில கிளைகளில் மட்டுமே கிடைக்கும்படி  திட்டமிடப்பட்டது. 1,000; 10,000; 1,00,000; 10,00,000 மற்றும் 1,00,00,000 ஆகிய தொகைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டன. இந்த தொகைகளில் ஒரு நபரோ அல்லது நிறுவனமோ எத்தனை பத்திரங்கள் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ள முடியும். ஆனால் இவ்வாறு வழங்கப்படும் தேர்தல் பத்திரங்களின் ஆயுட்காலம் 15 நாட்கள் மட்டுமே. அதற்குள் தேர்தல் பத்திரங்களை பெறும் கட்சிகள் தங்கள் வங்கிக்கணக்கில் வரவு வைத்துக்கொள்ள வேண்டும்.

தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தக் கட்சி எவ்வளவு பணம் பெற்றுள்ளது?

அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரம் மூலம் பெற்ற தொகை மற்றும் தேதியின் விவரங்கள் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகளில் இடம்பெற்றுள்ளன. அதன்படி, பாஜக, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிதி விவரங்களை கீழே உள்ள அட்டவணையில் காணலாம்.

இந்தப் பட்டியலில் அதிகம் நிதி பெற்ற கட்சியாக முதலிடத்தில் பாரதிய ஜனதா கட்சி உள்ளது. ஏப்ரல் 12, 2019 முதல் ஜனவரி 24, 2024 வரை பாரதிய ஜனதா கட்சி ₹6060 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை பெற்றுள்ளது. மொத்த பத்திரங்களில் பாஜகவின் பங்கு மட்டுமே 47.5% ஆகும். அதற்கடுத்த இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் (₹1,609 கோடி), காங்கிரஸ் (₹1,421 கோடி) போன்ற கட்சிகள் உள்ளன.

₹500 கோடிக்கும் அதிகமான தேர்தல் பத்திரங்களை பணமாக்கிய கட்சிகளாக பாரத ராஷ்டிர சமிதி, பிஜு ஜனதா தளம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள் முறையே நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களில் உள்ளன.

ED நடவடிக்கை எடுத்துள்ள நிறுவனங்கள் Vs தேர்தல் பத்திரங்கள்:

தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளவர்களின் பட்டியலில் ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், மேகா இன்ஜினியரிங், பாரதி ஏர்டெல், வேதாந்தா, முத்தூட், பஜாஜ், பிரமல் எண்டர்பிரைசஸ், அப்பல்லோ டயர்ஸ், PVR உள்ளிட்ட எண்ணற்ற நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இத்தரவுகளின் படி, ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1,300 நிறுவனங்களால் மொத்தம் 12,155.51 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதில் ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் 2020-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2024-ஆம் ஆண்டு ஜனவரிக்கு இடையில் மட்டும் 1,368 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் நிறுவனர் சாண்டியாகோ மார்ட்டின். தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் இதன் பதிவு அலுவலகம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதே போன்று வேதாந்தா லிமிடெட் ரூ.402 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. மேகா இன்ஜினியரிங் ரூ.966 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களையும், பாரதி ஏர்டெல்லின் மூன்று நிறுவனங்கள் ரூ.246 கோடி மதிப்புள்ள பத்திரங்களையும், க்விக் (Qwik) சப்ளை செயின் பிரைவேட் லிமிடெட் ரூ. 410 கோடி மதிப்புள்ள பத்திரங்களையும், ஹால்டியா எனர்ஜி ரூ.377 கோடி மதிப்புள்ள பத்திரங்களையும் வாங்கி நிதியளித்துள்ளன.

மேலும் தேர்தல் பத்திரம் வாங்கியுள்ள டாப் 30 நிறுவனங்களில் 14 நிறுவனங்களின் மீது ED, CBI மற்றும் IT ரெய்டுகள் மற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், மேகா இன்ஜினியரிங், வேதாந்தா லிமிடெட், யசோதா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, DLF கமர்ஷியல் டெவலப்பர்ஸ் லிமிடெட், ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட், டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்ரிஸ் லிமிடெட், அரபிந்தோ பார்மா உள்ளிட்ட நிறுவனங்களின் பெயர்களும் அடக்கம்.

ஆதாரங்கள்:

Disclosure of Electoral Bonds

Electoral Bonds Case: 22,217 bonds purchased of which 22,030 redeemed

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader