உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கு பிறகு எஸ்பிஐ சமர்பித்த தேர்தல் பத்திரம் தொடர்பான முழு தரவுகள் இதோ !

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து விபரங்களையும் மார்ச் 15 ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்று கூறி எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், மார்ச் 14 அன்று எஸ்பிஐ சமர்பித்த அந்தப் பட்டியலைத் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம்.

ஆனால் அதில் எந்த நிறுவனம் (Purchaser), எந்தக் கட்சிக்கு நன்கொடை அளித்தது என்ற விவரங்கள் எதுவும் இடம் பெறவில்லை. எனவே கூடுதல் தகவல்களுடன் மார்ச் 17 அன்று தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் மற்றொரு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது. அதிலும் எஸ்பிஐ முழுமையான தகவல்களை வழங்கவில்லை.

இந்நிலையில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிடாத எஸ்பிஐ  வங்கியின் அணுகுமுறை ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதுடன் கண்டனத்துக்குரியது என்று கூறி,  குறிப்பாக, தேர்தல் பத்திரம் வாங்கப்பட்ட தேதி, வாங்கியவர் பெயர், ஒவ்வொரு பத்திரத்திலும் உள்ள அடையாள எண் உள்ளிட்ட அனைத்து தரவுகளையும் மார்ச் 21 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று கூறி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் நேற்று எஸ்பிஐ வழங்கிய முழு விவரங்களையும் தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டது.

ஆனால் இதில் அரசியல் கட்சிகளின் முழு வங்கிக் கணக்கு எண்கள், கேஒய்சிவிவரங்கள் ஆகியவையும், தேர்தல் பத்திரங்களை வாங்கியவரின் கேஒய்சி விவரங்களும் வெளியிடப்படவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக இவை வெளியிடப்படவில்லை என்றும் எஸ்பிஐ தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு முன்பே எந்த கட்சி எவ்வளவு பணம் பெற்றுள்ளது என்பது தொடர்பாகவும், தேர்தல் பத்திரங்களில் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் குறித்து தவறாக பரவிய செய்திகள் குறித்தும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.

மேலும் படிக்க: தேர்தல் பத்திரம் நிதி: வாரிக் குவித்த பாஜக.. ED, IT ரெய்டில் சிக்கிய நிறுவனங்களின் நிதி யாருக்கு?

மேலும் படிக்க: தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக இதுவரை பெற்றது ரூ.6,986.5 கோடி என தவறாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!

எந்த நிறுவனம் எந்த கட்சிக்கு பணம் வழங்கியுள்ளளது :

இந்த தேர்தல் பத்திர விவகாரம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், இந்த திட்டத்தை அறிமுகப்படுத்திய பாஜக கட்சி தான், தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகமாக பயனடைந்துள்ளது என்பது தரவுகளின் அடிப்படையில் தெளிவாக புலனாகிறது. மேலும் தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்த நிறுவனங்கள் எவ்வளவு தொகையை, எந்த கட்சிக்கு  வழங்கியுள்ளனர் போன்ற விவரங்களை கீழே ஒவ்வொன்றாகக் காணலாம்.

ரூ.1368 கோடி வழங்கிய “ஃப்யூச்சர் கேமிங்”:

கோவையைச் சேர்ந்த சாண்டியாகோ மார்ட்டினுக்கு சொந்தமான இந்நிறுவனம் ரூ.1368 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை கட்சிகளுக்கு நன்கொடையாக அளித்துள்ளது. இந்தியாவிலேயே அதிக மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனம் இதுதான்.

மொத்த நன்கொடையான ரூ.1368 கோடியில், மார்டினின் நிறுவனம் அதிகபட்சமாக ரூ. 542 கோடியை திரிணாமூல் காங்கிரசிற்கும், ரூ. 503 கோடியை திமுகவிற்கும், ரூ. 154 கோடியை YSRCP கட்சிக்கும், ரூ. 100 கோடியை பாஜகவிற்கும் வழங்கியுள்ளது.

‘மார்ட்டின் லாட்டரி’ என்ற பெயரில் லாட்டரி நிறுவனத்தை தமிழ்நாட்டில் தொடங்கிய இவர், இன்று கர்நாடகா, பஞ்சாப், மேற்கு வங்காளம், கேரளா, மகாராஷ்டிரா மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கும் தனது தொழிலை விரிவுபடுத்தியுள்ளார்.

அமலாக்க இயக்குநரகம் (ED) மற்றும் வருமான வரித்துறை உட்பட பல ஒன்றிய அமைப்புகளின் மூலம் சோதனை நடத்தப்பட்டு மார்ட்டினின் சொத்துக்கள் பலமுறை முடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 2023 ஆம் ஆண்டில், கேரளாவில் மோசடியான லாட்டரி விற்பனையின் காரணமாக சிக்கிம் அரசாங்கத்திற்கு பலநூறு கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாகக் கூறி, சுமார் ₹ 457 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ED முடக்கியது.

பாஜகவிற்கு நிதியை வாரி வழங்கிய “மேகா இன்ஜினியரிங்”:

மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (MEIL) என்பது தெலுங்கானாவை தளமாகக் கொண்டு 1989 இல் நிறுவப்பட்ட ஒரு இந்திய உள்கட்டமைப்பு நிறுவனமாகும். இது அமெரிக்கா, இத்தாலி, சவுதி அரேபியா போன்ற 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் சர்வதேச அளவில் செயல்படுகிறது. அரசாங்கத்தின் பல கட்டுமான ப்ராஜக்ட்களையும் இந்த நிறுவனம் தான் பெற்றுள்ளது.

இந்நிறுவனம் பி.பி ரெட்டிக்கு சொந்தமானது. அவரது மருமகன் PV கிருஷ்ணா ரெட்டி தற்போது CEO ஆக உள்ளார், நீர் மேலாண்மை, பொறியியல், கட்டுமானம், உற்பத்தி, போக்குவரத்து, ஹைட்ரோகார்பன், பாதுகாப்பு மற்றும் மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்நிறுவனம் செயல்பட்டுவருகிறது.

MEIL க்கு ‘வெஸ்டர்ன் உபி பவர் டிரான்ஸ்மிஷன் கம்பெனி லிமிடெட்’ என்ற மற்றொரு நிறுவனமும் உள்ளது. இதுவரை இந்த இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து ரூ.1186 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை கட்சிகளுக்கு நன்கொடையாக அளித்துள்ளன.

மொத்த நன்கொடையில், ரூ. 664 கோடியை (55.99%) இவை ஆளும் கட்சியான பாஜகவிற்கு மட்டுமே வழங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற கட்சிகளுக்கு அளிக்கப்பட நன்கொடை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ரூ.402.4 கோடி வழங்கிய வேதாந்தா:

தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையின் படி, வேதாந்தா இதுவரை ரூ.402.4 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. அதிகபட்சமாக பாஜவிற்கு மட்டும் ரூ. 230 கோடிகளையும், காங்கிரஸ் கட்சிக்கு 125 கோடிகளையும் வழங்கியுள்ளது.

அனில் அகர்வாலுக்கு சொந்தமான லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வேதாந்தா நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய சுரங்க மற்றும் இரும்பு அல்லாத உலோக (Non Ferrous Metals) நிறுவனமாகும். இது செம்பு கம்பி மற்றும் கந்தக அமிலம் உற்பத்தியில் சிறந்து விளங்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க இன்றுவரை போராடி வருகிறது. அங்கு சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தியதன் விளைவாக இது மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வேதாந்தா 2018ல் எலக்ட்ரோஸ்டீல் ஸ்டீல்ஸ் லிமிடெட் (ESL) நிறுவனத்தை வாங்கிய போது, பொதுப் பணம் ரூ.9,358 கோடியை சுருட்ட முயன்றதாகக் கூறி சிபிஐ விசாரணை கோரி, வேதாந்தா மீது ஒரு பொதுநல மனு தாக்கலும் செய்யப்பட்டது, 2020 இல் அது திடீரென திரும்பப் பெறப்பட்டது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறியீட்டில் இந்தியா கடைசி (180வது) இடத்தில் உள்ள போதும், வேதாந்தா சுற்றுச்சூழல் விதிமுறைகளை பலவீனப்படுத்துவதற்கு அரசாங்கத்தை வலியுறுத்தியது.

2021ல் ராஜஸ்தானில் சுரங்க ராயல்டியில் வேதாந்தா ஆயிரக்கணக்கான கோடிகளை ஏய்ப்பு செய்ததாக கூறி, பல குற்றச்சாட்டுகள் இதன் மீது உள்ளன.

வேதாந்தாவின் பல சுரங்க குற்றச்சாட்டுகளை தாண்டியும், இது ஜனவரி 2024 இல் கோவா இரும்புத் தாது சுரங்கத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக அரசு வேதாந்தா-ஃபாக்ஸ்கானின் முன்மொழியப்பட்ட செமி-கண்டக்டர் வணிகத்தில் பெரும் முதலீட்டை உற்சாகப்படுத்தியது. ஆனால் வேதாந்தாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்ககுப் பிறகு ஃபாக்ஸ்கான் வெளியேறியது. ஆனாலும், வேதாந்தா மீது தீவிர விசாரணை எதுவும் நடைபெறவில்லை.

நிதி வழங்கிய மற்ற நிறுவனங்கள் என்னென்ன?

கட்சிகளுக்கு நிதி வழங்கிய மற்ற நிதி நிறுவங்கள் மற்றும் அவர்கள் வழங்கிய நன்கொடை உள்ளிட்ட விவரங்களை கீழே உள்ள அட்டவணையில் தெளிவாகக் காணலாம்.

மேலும் தேர்தல் பத்திரம் வாங்கியுள்ள முன்னணி நிறுவனங்களில், பெரும்பான்மையான நிறுவனங்களின் மீது ED, CBI மற்றும் IT ரெய்டுகள் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், மேகா இன்ஜினியரிங், வேதாந்தா லிமிடெட், யசோதா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, DLF கமர்ஷியல் டெவலப்பர்ஸ் லிமிடெட், ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட், டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்ரிஸ் லிமிடெட், அரபிந்தோ பார்மா உள்ளிட்ட நிறுவனங்களின் பெயர்களும் அடக்கம்.

ஆதாரங்கள்:

Details of Electoral Bonds submitted by SBI on 21st March 2024 (EB_Purchase_Details)

Details of Electoral Bonds submitted by SBI on 21st March 2024 (EB_Redemption_Details)

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader