Articles

மின்தடைக்கு அணில் காரணம் என்றாரா ? உண்மை என்ன?

தமிழ்நாட்டில் தற்போது ஏற்படும் மின்வெட்டுகளுக்கு மின்சார கம்பியில் அணில்கள் ஓடுவதால் மின்வெட்டு ஏற்படுகிறது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாக காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

Advertisement

ஜூன் 4-ம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில் கொரோனா தொற்று பரவல் குறித்தான நடவடிக்கைகள், மின் கட்டணம் மற்றும் மின்சாரத்துறை சம்பந்தமான பிற கேள்விகளுக்கு தமிழ்நாட்டின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது ஒரு செய்தியாளர் “ஆங்காங்கே மின்வெட்டு இருக்கிறது..” எனும் கேள்வியை எழுப்பினார். அதற்கு அமைச்சர் அளித்த பதிலில் அணில்கள் குறித்த சிக்கல்களையும் குறிப்பிட்டு இருந்தார். அந்த பகுதி மட்டும் வெட்டப்பட்ட காணொளி தற்போது இரண்டு நாட்களாக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி, அணில்களால் மின்தடை ஏற்படுகிறது எனும் செய்தி பலரால் நகைப்புகளுக்கும் , கண்டனங்களுக்கும் ஆளாகியுள்ளது.

செந்தில் பாலாஜி பேசும் வீடியோ :

வீடியோவில், ” ஆங்காங்கே மின்தடை இருக்கிறது என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். குறிப்பிட்டு, இவ்விடங்களில் மின்வெட்டு இருக்கிறது என தெரிவித்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். நேற்று மாண்புமிகு முதல் அமைச்சரின் அனுமதி பெற்று ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளோம். கடந்த டிசம்பர் 2020க்கு பிறகு, தேர்தலை மனதில் வைத்து முந்தைய ஆட்சியாளர்கள் மாதாந்திர பராமரிப்பு பணியை செய்யாமல் விட்டுவிட்டார்கள். எந்த பணிகளும் செய்யவில்லை. அங்கங்கு மரங்கள், செடிகள் மோதியிருக்கும் அவற்றை எல்லாம் அகற்றும் பணியை செய்யவில்லை. இதை நான் குற்றச்சாட்டாக கூறவில்லை எனினும், அப்பணிகளை தற்போது செய்ய வேண்டும்.

(4வது நிமிடத்தில்) சில இடங்களில் செடி வளர்ந்து கம்பியோடு மோதும் பொழுது அதில் அணில் ஓடும். அணில் மின்கம்பிகளில் ஓடும்போது இரு கம்பிகளும் இணைவதால் மின்தடை ஏற்படுகிறது. இது போன்ற நிலைகள் வரும்போது தான் பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும். மற்றபடி கொரோனா ஊரடங்கு முடியும் வரை பராமரிப்பு பணிகளில் ஈடுபட வேண்டாம் என தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது” என அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

செடிகள் வளர்ந்து கம்பியில் அணில்கள் ஓடும் போது ஏற்படும் மின்தடைகளுக்கு அவசரம் கருதி பராமரிப்பு பணிகள் நடைபெறும் என சில இடங்களில் நடைபெறுவதை உதாரணமாக கூறி இருக்கிறார். மேலும், ஜூன் 4-ம் தேதி பேசிய வீடியோவில் இருந்து குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடுத்து இரு வாரங்களுக்கு பிறகு தற்போது வைரல் செய்து உள்ளனர்.

உண்மையில் அணில்களால் மின்தடை ஏற்படுமா?

அணிகளால் ஏற்படும் மின்வெட்டு குறித்தான செய்திகள் அமெரிக்காவில் பெருமளவு நிகழ்ந்துள்ளது. அங்கு ஏற்படும் மின்வெட்டுகளில் 9-21% மின்வெட்டுக்கள் அணில்களால் ஏற்படுவதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்கன் பப்ளிக் பவர் அசோசியேஷன் கூறுகையில், அமெரிக்காவில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதற்கு அணில் தான் காரணம் என்று கூறுகிறது.

2021 ஏப்ரல் மாத தேர்தலின் போது, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் வாக்குப்பதிவின் போது மின்தடை ஏற்பட்டுள்ளது. அப்போது ஒரு அணில் டிரான்ஸ்பார்மரில் சிக்கியதால் மின்தடை ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் அந்த அணிலை அப்புறப்படுத்தி மீண்டும் மின்இணைப்பை கொடுத்த செய்தி வெளியாகியுள்ளது.

அணில்கள் மின்தடைகளை ஏற்படுத்துவதில் ஒரு உண்மையான உலகளாவிய பிரச்சனையாக இருந்து வருகிறது.

இப்படி பல இடங்களில் அணில்கள் மின்கம்பிகளை தாண்ட முற்படும்போது முன்னங்கால்கள் ஒரு மின்கம்பியையும், பின்னங்கால்கள் மற்றொரு மின்கம்பியையும் பிடிக்க வாய்ப்புள்ளது. அப்போது இரண்டு கம்பிகளும் வெவ்வேறு மின்னோட்டம் உள்ளதால் மின்தடை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இது போன்ற சம்பவங்கள் நிகழவும் செய்கின்றன. ஆனால், அணில்களால் எத்தனை மின்தடை சம்பவங்கள் நிகழ்கின்றன என்பது தொடர்பான தரவுகள் மின் வாரியத்திடம் இல்லை.

அமைச்சர் செந்தில் பாலாஜி, அணில் குறித்தான இந்த செய்தியை பராமரிப்பு செய்யாததால் சில இடங்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு உதாரணமாகவே குறிப்பிட்டு உள்ளார். அதுபோன்ற சூழ்நிலைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் எனக் கூறுகிறார்கள். ஒட்டுமொத்த மின் தடைக்கும் அணில்கள் காரணம் எனக் கூறவில்லை. ஆனால், தமிழகத்தில்  மின்தடைக்கு அணில்கள் மட்டுமே காரணம் என பேசியது போல் வீடியோவின் ஓர் பகுதி தவறாக பகிரப்பட்டு வருகிறது.

Links : 

இனி 100% மின்தடை இருக்காது.! – மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி | Senthil Balaji

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button