இந்தியாவில் அதிகரிக்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு.. EVகள் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன?

EVகளின் விற்பனை 2019 முதல் 2023 வரை 74.07% CAGR என்ற விகிதத்தில் வளர்ந்துள்ளது.

நாடு முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஆர்வம் மக்களிடையே கணிசமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2023 இல் உலகில் அதிகம் விற்பனையான டெஸ்லாவின் “மாடல் Y” கார், ஒரு எலெக்ட்ரிக் கார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் EVகளின் விற்பனை மந்தமாகவே இருந்தாலும், கடந்த இரண்டு வருடங்களில் இது வேகமாக மாறி வருவதைப் பார்க்க முடிகிறது.

2019 ஆம் ஆண்டில், இந்தியாவில் மொத்த EV விற்பனை 1.6 லட்சம் வாகனங்கள் மட்டுமே. ​​2023ல் இதன் விற்பனை கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகரித்து, 15.3 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்தது. இதே போன்று 2024 ஐ பொறுத்தவரையில், முதல் 3 மாதங்களில் மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமான EV வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. எனவே 2019 இல் இருந்து இந்தியாவில் அதிகரித்து வரும் EV வாகனங்களின் விற்பனையை கீழே உள்ள வரைபடத்தில் தெளிவாகக் காணலாம்.

EV விற்பனை இந்தியாவில் 74.07% CAGR ஆக உயர்ந்துள்ளது:

EV விற்பனை 2019 முதல் 2023 வரை 74.07% CAGR ஆக உயர்ந்துள்ளது மற்றும் 2022 உடன் ஒப்பிடும்போது 2023 இல் விற்பனை கிட்டத்தட்ட 50% அதிகரித்துள்ளது. இதே போன்று 2023 இன் முதல் 3 மாதங்களில் விற்பனையை ஒப்பிடும் போது, 2024 இன் முதல் 3 மாதங்களில் மட்டும், EV விற்பனை 141% அதிகரித்துள்ளது. குறிப்பாக 2022ல், முந்தைய ஆண்டை விட EV விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. மார்ச் 2024 இல், முதன்முறையாக 2 லட்சத்திற்கு மேல் EV விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. மேலும் FAME-II மானியத் திட்டத்தின் மூலம் EV வாகனங்களுக்கான மானியம் மார்ச் 31, 2024 அன்று முடிவடைந்து விடும் என அறிவிக்கப்பட்டதால், மானியம் முடிவடைவதற்கு முன்பே EV தயாரிப்பாளர்களின் விற்பனை உந்துதல் காரணமாக வாடிக்கையாளர்கள் தங்கள் EVகளை வாங்கத் தூண்டப்பட்டதால் விற்பனையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டிருக்கலாம்.

EVகள் எதிர்கொள்ளும் சவால்கள்:

மானியங்கள்:

FAME (Faster Adoption & Manufacturing of Electric Vehicles) திட்டம், இந்தியாவில் மக்கள் EVகளுக்கு மாறுவதை விரைவுபடுத்துவதற்காக தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். இந்தத் திட்டத்தின் முதல் கட்டம் 2015 இல் தொடங்கப்பட்டது மற்றும் 2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் இரண்டாவது கட்டம் மார்ச் 31, 2024 இல் முடிவடைந்தது. இதன் பட்ஜெட் ₹10,000 கோடி என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஏப்ரல் 1 முதல் , மத்திய அரசு ₹500 கோடி நிதியுதவியுடன் Electric Mobility Promotion Scheme (EMPS) என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது, இது ஜூலை 2024 இறுதி வரை நீடிக்கும். அதன் பிறகு லோக்சபா தேர்தலுக்கு பின் அரசாங்கம் FAME-III திட்டத்தைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

EV வாகனங்களுக்கு மற்ற நாடுகளில் வழங்கப்படும் மானியங்கள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், அமெரிக்காவில் ‘பட்ஜெட் பணவீக்கக் குறைப்புச் சட்டம் 2022’ மூலம், 2032 வரை மின்சார வாகனத்திற்கு $7,500 (₹6.25 லட்சம்) மானியம் வழங்குவதை உறுதி செய்துள்ளது. கூட்டாட்சியின் இந்த வரிச் சலுகைகளைத் தவிர, மாநில அளவிலும் அங்கு மானியங்கள் வழங்கப்படுகின்றன. இந்த மானியங்கள் சார்ஜிங் (Charging), சோலார் நிறுவல்கள் (Solar Installations) போன்றவற்றிற்கும் வழங்கப்படுகின்றன. FAME மானியங்கள் இந்தியாவில் இருந்தபோதிலும், EVகளை மேம்படுத்துவதற்கு அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் உள்ளதைப் போன்ற வலுவான ஆதரவு இந்தியாவில் இல்லை என்பதே உண்மை. எனவே அரசு விழித்துக் கொண்டு இந்தியாவிலும் இது போன்ற குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி தரவேண்டியது அவசியமான ஒன்று.

சார்ஜிங் உள்கட்டமைப்பு & சார்ஜிங் நேரம் (Charging Infrastructure & Charging Time):

EVகளின் பயன்பாடு இந்தியாவில் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், EVகளுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்பு போதுமான அளவில் இங்கு உருவாக்கப்படவில்லை. எனவே, சார்ஜ் இல்லாமல், வாகனம் பாதி வழியிலேயே நின்றுவிடும் என்ற கவலையில், மக்கள் EV வாகனங்களுக்கு மாறுவதற்கு தயங்கம் காட்டி வருகின்றனர். இவ்வாறு தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்பவர்கள் EVஐத் தேர்வு செய்வதிலிருந்து EVகளின் “Range Anxiety” தடுப்பதாக கருதுகின்றனர். மேலும் சார்ஜிங் நிலையங்களில், வாகனங்களுக்கான சார்ஜிங் நேரம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இயங்குவதால் பயணங்கள் பொதுவாக அதிக நேரம் எடுக்கும். எனவே சார்ஜிங் வேகம் 50kW உடன் ஒப்பிடும் போது, வளர்ந்த நாடுகளில் சார்ஜிங் வேகம் 250kW அல்லது 350kW என இருக்கிறது. எனவே இந்தியாவில் அதிக சார்ஜிங் ஸ்டேஷன்கள் மற்றும் அதிகரிக்கப்பட்ட சார்ஜிங் வேகம் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

வாகனச் செலவு:

எலெக்ட்ரிக் வாகங்களில் மோட்டார் சைக்கிளாக இருந்தாலும் சரி, நான்கு சக்கர வாகனமாக இருந்தாலும் சரி, இவை சாதாரண வாகனங்களை விட விலை உயர்ந்தே காணப்படுகின்றன. EVகள் இந்தியாவில் இன்னும் விலையில் சமநிலையை எட்டவில்லை என்பதே உண்மை. மேலும் இந்த விலையுயர்வு, இந்தியா போன்ற நாட்டில், வாகன ஓட்டிகளுக்கு பெரிய தடையாகவே உள்ளன. அரசு மானியம் வழங்கினாலும் கூட, அதிக விலையின் காரணமாக மக்களுக்கு இவை பெரிய தடையாகவே உள்ளன. எனவே EV விலையில் எப்போது சமநிலை ஏற்படுகிறதோ அப்போது தான் EV விற்பனை இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும்.

மற்ற காரணங்கள்:

2000களின் இறுதியிலும் 2010களின் முற்பகுதியிலும் மின்சார வாகனங்களின் ‘முதல் அலையின்’ (எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்) போது, ​​அவை 40 கிமீ தூரம் வரை மட்டுமே சென்றன. அதிகபட்ச வேகமாக 30-40 கி.மீ வரையே இருந்தது. மேலும் EVகளின் தரம் மோசமாக இருந்ததோடு, மிகக் குறுகிய ஆயுட்காலத்தையேக் கொண்டிருந்தன. எனவே EVகள் மக்கள் மத்தியில் நல்ல பெயரைப் பெற்றிருக்கவில்லை. இது தவிர, சில எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் பலரிடையே EVகள் பாதுகாப்பற்றவை என்ற அச்சத்தையையும் உருவாக்கின.

EVகள் வருங்காலங்களில் தவிர்க்க முடியாதவை:

மற்ற வாகனங்களுடன் ஒப்பிடும் போது எலெக்ட்ரிக் வாகனங்கள் குறைந்த அளவிலேயே  பசுமை இல்ல வாயுக்களை (Greenhouse Gases) வெளியேற்றுவதால், இவை சுற்றுச்சூழலுக்கு அதிக நன்மைகளை ஏற்படுத்துகின்றன.

மேலும் பெட்ரோலை சார்ந்திருக்க வேண்டிய சூழலும் EVகளுக்கு தேவையில்லாமல் போகும். இதன் மூலம் இந்தியா, கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக குறைந்த தொகையையே செலவிட நேரிடும். இது தவிர இந்தியாவில் பேட்டரி உற்பத்தியைப் பெருக்குவதன் மூலமும் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்.

எனவே EV வாகனங்களின் விலை குறைப்பு, பயணதூரத்தை மேம்படுத்துதல், வேகமான சார்ஜிங் வேகம் மற்றும் குறைந்த சார்ஜிங் நேரம் ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம்,  EVகள் இன்று விற்பதை விட பல மடங்கு அதிக எண்ணிகையில் வருங்காலத்தில் நிச்சயம் விற்கப்படும்..!!

ஆதாரங்கள்:

Govt brings new Rs 500 crore EV subsidy scheme from April 1

https://electrificationcoalition.org/work/federal-ev-policyscheme

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader