மின்சார சட்ட திருத்த மசோதா 2022 ஏன் எதிர்க்கப்படுகிறது ?

ஒன்றிய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், 2022ம் ஆண்டுக்கான மின்சார சட்ட திருத்த மசோதாவை ஆகஸ்ட் 8-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்த பின்னர் ஆய்வுக்காக எரிசக்திக்கான நிலைக்குழுவிற்கு அனுப்பி உள்ளார்.

மின்சார சட்டம் 2003-ல் திருத்தத்தை கொண்டு வர இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மின்சார உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம், வர்த்தகம், மின்சார பயன்பாடு மற்றும் மின்சாரத் துறையின் வளர்ச்சி தொடர்பான சட்டங்களை ஒருங்கிணைக்கும், மின்துறையை சீர்த்திருத்துவதாகவும் ஒன்றிய அரசாங்கம் தெரிவித்து உள்ளது. ஆனால், இந்த சட்ட மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் பல்வேறு எதிர்ப்புகளும் எழுந்து வருக்றது.

தனியார் மின் விநியோகம் : 

நுகர்வோருக்கு மின்சார விநியோகத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் வகையில், மின்சார சட்டத்தின் 42 மற்றும் 14வது பிரிவுகளில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தம்படி, மின்சார விநியோகத்தில் போட்டியை ஏற்படுத்துவதன் மூலம் தொலைபேசி அல்லது இணைய சேவை வழங்குபவர்களை தேர்ந்தெடுப்பது போல் மின்சாரம் வழங்குபவர்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. சட்டம் 42வது பிரிவின் திருத்தம்படி, ” மின்சாரம் விநியோகம் செய்யும் நிறுவனம் மின்சாரம் வழங்குவதற்காக அங்குள்ள மின் கட்டமைப்பை (மாநில அல்லது மற்ற நிறுவனத்தின்) பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒரு நிறுவனத்தின் மின் கட்டமைப்பை வேறொரு நிறுவனம் பயன்படுத்திக் கொள்ள தனியார் நிறுவனங்கள் Wheeling Charges எனும் கட்டணத்தை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும் எனப் அப்பிரிவில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இத்தனை ஆண்டுகள் உருவாக்கிய கட்டமைப்பை எப்படி தனியாருக்கு கொடுப்பது என்றும், அதற்காக தனியார் நிறுவனங்கள் அளிக்கும் கட்டணம் போதுமானதாக இருக்காது, நிறுவனங்கள் ஏமாற்றுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றும் மாநில அரசுகள் ஆட்சேபணை தெரிவிக்கின்றன.

இலவச மின்சாரம் : 

தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் இலவச மின்சாரம் மற்றும் மானிய விலையில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய சட்ட திருத்த மசோதாவில் இலவச மின்சாரம் தடை செய்யப்படுவதாக நேரடியாக குறிப்பிடவில்லை. ஆனால், மின்சாரத்திற்கு உரிய கட்டணம் வசூலிப்பதை வலியுறுத்தி செய்கிறது.

பிரிவு 62-ன் திருத்தத்தின்படி, மின்சாரத்திற்கு அதிகபட்ச கட்டணத்தை ஒழுங்குமுறை ஆணையம் தீர்மானிக்கும். அதேபோல், தனியார் மின் விநியோக நிறுவனங்களுக்கு இடையே போட்டியை உறுதி செய்வதற்கு குறைந்தபட்ச கட்டணத்தையும் ஒழுங்குமுறை ஆணையமே தீர்மானம் செய்யும். இதில், அதைவிட குறைந்த விலையில் மாநில அரசு நிறுவனத்தால் மின்சாரத்தை தர முடியாமல் போகும் நிலையும் உருவாகும்.

நேஷனல் லோட் டெஸ்பாச் சென்டர் : 

முன்பு நாடு முழுவதும் மின்சார விநியோகத்தை முறைப்படுத்தும் அமைப்பாக இருந்து வந்த நேஷனல் லோட் டெஸ்பாச் சென்டர், இனி மின் விநியோகத்தின் உச்சபட்ச அமைப்பாக இருக்கும் என சட்டப் பிரிவு 26-ல் கொண்டு வரப்படும் திருத்தத்தின் மூலம் கூறப்பட்டு உள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள மின் விநியோக கட்டமைப்பு நேஷனல் லோட் டெஸ்பாச் சென்டர் அமைப்பிடமே இருக்கும். இந்த அமைப்பானது மாநிலங்களுக்கு இடையில் மற்றும் பிராந்தியங்களுக்கு இடையில் உள்ள மின் விநியோகத்தை கட்டுப்படுத்தும்.

மேலும், ஒவ்வொரு பிராந்திய லோட் டெஸ்பாச் சென்டர், ஸ்டேட் லோட் டெஸ்பாச் சென்டர், உரிமைதாரர்கள், மின் உற்பத்தி நிறுவனங்கள், உற்பத்தி நிலையங்கள், துணை மின் நிலையங்கள் ஆகியவை நேஷனல் லோட் டெஸ்பாச் சென்டர் வழங்கும் உத்தரவுகளை ஏற்று செயல்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

அபராதத் தொகை அதிகரிப்பு : 
மின்சார சட்டப் பிரிவு 142-ல் மேற்கொள்ளப்படும் திருத்தத்தின்படி, ஒரு மின் விநியோகம் நிறுவனம் மின்சாரச் சட்டம் அல்லது விதிமுறைகளை மீறுவதாக புகார் எழுந்து, அது ஏற்றுக்கொள்ளப்படும் நிலையில் ஒவ்வொரு விதிமீறலுக்கும் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு மிகாமல் அபராதம் விதிக்கப்படும்.
அதேபோல், ஒழுங்குமுறை ஆணையத்தால் விதிக்கப்படும் விதிமுறைகளை மீறும்பட்சத்தில், ஒவ்வொரு விதிமீறலுக்கும் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அது தொடரும் பட்சத்தில் ஒவ்வொரு நாளும் ரூ.60,000 அபராதம் விதிக்கக்கூடும். இது மாநில மின் நிறுவனங்களின் நிதி சுமையை மேலும் அதிகரிக்கும் என மாநிலங்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கிராஸ் மானியம் : 
மின்சார சட்ட பிரிவு 60-ன்படி, ஒரு பகுதியில் மின் விநியோகம் செய்ய  ஒன்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் வரும் பட்சத்தில், மின்சாரத்தை கூடுதல் விலைக்கு வாங்குபவர்களிடம் இருந்து பெறக்கூடிய தொகையை வேறு பிரிவினருக்கு மானியமாக வழங்க, ஒரு நிதியை அரசு உருவாக்க வேண்டும்.
ஆனால், தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரையில் பெருநகரங்கள் மற்றும் நகரங்கள் உள்ளிட்ட லாபம் கிடைக்கும் பகுதிகளில் மட்டுமே மின் விநியோகத்தில் ஈடுபடுவர். கிராமங்கள் மற்றும் விவசாய பகுதிகள் போன்றவைக்கு மாநில அரசின் மின்விநியோகமே வழங்க வேண்டி இருக்கும். லாபம் தரும் பகுதிகள் தனியாருக்கு செல்லும் பட்சத்தில், Cross Subsidy என்பதன் மூலம் பிற பிரிவினருக்கு சலுகைகளை வழங்க முடியாமல் போகும் என மாநில அரசுகள் நினைக்கின்றன.

மின்சார சட்ட திருத்த மசோதா 2022 ஆய்விற்காக நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பட்டு உள்ளது. இதற்கிடையில், இந்த மசோதா மின்சாரத்துறையை தனியார் மயமாக்கும் முயற்சி என்றும், அதிகாரம் அனைத்தும் ஒன்றிய அரசிடமே செல்கிறது என்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் பெரும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. மேலும், பல மாநிலங்களில் மின்சாரத் துறை பணியாளர்களும் மசோதாவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

link : 

Electricity Bill 2022

Please complete the required fields.




Back to top button
loader