விமானத்தின் எமர்ஜென்சி கதவைத் திறந்த விவகாரம்: மாற்றி மாற்றிப் பேசும் அண்ணாமலை !

பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி தேசிய தலைவர் விமானத்தின்  ‘எமர்ஜென்சி’ கதவை திறந்ததற்கு மன்னிப்பு கோரியதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா கடந்த 18ம் தேதி தெரிவித்தார். ஆனால், அவர் மன்னிப்பு கூறவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேறொரு விளக்கத்தினை அளித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 10ம் தேதி சென்னையிலிருந்து திருச்சி செல்லும் இண்டிகோ விமானத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், அக்கட்சியின் இளைஞரணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யாவும் பயணம் செய்தனர். அப்போது தேஜஸ்வி சூர்யா எமர்ஜென்சி கதவைத் திறந்ததினால் பயணிகள் விமானத்திலிருந்து கீழே இறக்கி மீண்டும் சோதனை செய்து 3 மணி நேரம் விமானம் தாமதமாகக் கிளம்பியதாகத் தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி டிசம்பர் 29ம் தேதி டிவிட் செய்திருந்தார்.

Archive link

இந்நிகழ்வு குறித்து இண்டிகோ நிறுவனத்தை யூடர்ன் தரப்பில் தொடர்பு கொண்டு ஜனவரி 3ம் தேதி பேசிய போது, ‘பயணி ஒருவர் எமர்ஜென்சி கதவைத் திறந்து, அதனால் விமானம் தாமதமாகப் புறப்பட்டது உண்மைதான்’ . அதற்காக மன்னிப்பும் கேட்டனர் எனக் கூறினர். மேலும், பயணியின் பெயர் குறித்துக் கேட்டதற்கு, பயணிகளின் தனிப்பட்ட விவரங்களை பகிர முடியாது என நிர்வாக தரப்பிடம் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. 

இந்த சம்பவம் குறித்து தருமபுரியில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் ஜனவரி 2ம் தேதி அண்ணாமலை பேசியுள்ளார். அதில், “சமீபத்தில் நான் ஏதோ ஒரு விமானத்தில் செல்லும்போது… எமர்ஜென்சி கதவை பிடித்து இழுத்து விட்டதாக கூறுகிறார்கள். திமுகக்காரர்களை விமானத்தில் ஏற்றினால் எமர்ஜென்சி கதவைத் திறந்துவிட்டு, அங்கும் 4 பேரைத் தொங்கவிட்டுக் கொண்டு செல்வார்கள். அப்படி ஒரு கதவு இருப்பது தெரியாததினால்தான் விமானமும், பயணிகளும் பத்திரமாக இருக்கிறார்கள்” என தனக்கும் அந்த சம்பவத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது போலப் பேசி இருந்தார். 

Archive link

இதற்கிடையில், 2022, டிசம்பர் 10ம் தேதி சென்னையிலிருந்து திருச்சி செல்ல இருந்த இண்டிகோ விமானத்தின் (Flight 6E 7339) எமர்ஜென்சி கதவினை பயணி ஒருவர் தவறுதலாகத் திறந்த சம்பவம் குறித்து விசாரிக்கப் போவதாக டி.ஜி.சி.ஏ. (Directorate General of Civil Aviation) தரப்பில் 2023 ஜனவரி 17ம் தேதி கூறியது.

இந்த விசாரணை அறிவிப்பு வெளியானதும் அமைச்சர் செந்தில் பாலாஜி டிவீட் செய்திருந்தார். அதில், இது குறித்துத் தான் கடந்த டிசம்பரில் கேள்வி எழுப்பியதும், தற்போது விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதையும் குறிப்பிட்டு இருந்தார். மேலும், ‘சுதந்திர காற்றை சுவாசிக்க கதவை திறந்தேன் என கூறாமல் இருந்தால் சரி’ என்று கேலியும் செய்திருந்தார். 

Archive link 

இந்நிலையில்,  தேஜஸ்வி சூர்யா தவறுதலாக விமானத்தின் எமர்ஜென்சி கதவினை திறந்தார். அதற்காக அவர் மன்னிப்பும் கூறிவிட்டார்” என விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா ஜனவரி 18ம் தேதி ஊடகங்களிடம் கூறினார். அமைச்சர் கூறியதிலிருந்து விமானத்தின் எமர்ஜென்சி கதவைத் தேஜஸ்வி சூர்யா திறந்ததும், அதற்காக மன்னிப்பு கோரியதும் உறுதியாகத் தெரிய வருகிறது.

ஆனால், விமானத்தின் எமர்ஜென்சி கதவைத் திறந்த சம்பவம் பற்றி கன்னட ஊடகங்களுக்கு அண்ணாமலை புதிய விளக்கத்தினை அளித்துள்ளார். அவர் கூறியது : “அந்த விமானம் சிறியதாக இருந்தது. இருக்கைகளும் சிறியதாக இருந்தன. எமர்ஜென்சி கதவுக்குப் பக்கத்தில் தேஜஸ்வி சூர்யாவின் இருக்கை இருந்தது. அவ்விருக்கையில் கைகளை வைப்பதற்குக் கூட வசதி இல்லை.

எனவே எமர்ஜென்சி கதவிற்குப் பக்கத்தில் கைகளை வைத்துக் கொண்டு பேசிக் கொண்டு வந்தோம். விமானம் கிளம்புவதற்கு முன்னதாக கதவில் சிறிய இடைவெளி இருப்பதைப் பார்த்து என்னிடம் கூறினார். நானும் விமானப் பணியாட்களிடம் தெரிவித்தேன். அவர்கள் விமான ஓட்டுநரிடம் தெரிவித்து விதிமுறைகளின் படி பயணிகள் கீழே இறக்கப்பட்டு அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்னர் விமானம் புறப்பட்டது.  

இந்த நிகழ்வு எப்படி நடந்தது என்பது குறித்து தேஜஸ்வி சூர்யா அறிக்கை அளிக்க வேண்டி இருந்தது. அதாவது, அந்த இருக்கையில் அமர்ந்த பயணி எப்படி கை வைத்திருந்தார், எப்படி இது நிகழ்ந்தது எனப் படிவம் ஒன்றில் அறிக்கையாக அளிக்க வேண்டும். உண்மையில் தேஜஸ்வி சூர்யா எதைப் பிடித்தும் இழுக்கவில்லை. கை வைக்கும்போது கதவு லேசாக வெளியே வந்துவிட்டது. கர்நாடக ஊடகங்கள் தேஜஸ்வி மன்னிப்பு கோரியதாகச் செய்திகளை வெளியிடுகின்றன. மன்னிப்பு எல்லாம் கேட்கவில்லை. 

அதே சமயத்தில், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். பொறுப்புமிக்க பதவியில் உள்ளார். ஏற்கனவே விமானம் ஒரு மணி நேரம் தாமதம் ஆகியவிட்டது. அதற்காக அனைத்து பயணிகளிடமும் தேஜஸ்வி மன்னிப்பு கோரினார். என் தவறு இல்லையெனினும் அந்த இருக்கையில் நான் அமர்ந்திருந்தேன் எனக் கூறினார். தேஜஸ்வி எதனையும் இழுக்கவில்லை. இதற்கு நானே சாட்சி என அண்ணாமலை கூறியுள்ளார்.

அண்ணாமலை தனக்கும், விமானத்தின் எமர்ஜென்சி கதவு திறந்த சம்பவத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது போல ஜனவரி 2ம் தேதி பேசி இருந்தார். ஆனால், இப்போது தேஜஸ்வி சூர்யா எமர்ஜென்சி கதவைத் திறக்கவில்லை. இதற்கு நானே சாட்சி எனக் கூறுகிறார். இதில் எது உண்மை ?

இச்சம்பவம் குறித்து ஜனவரி 3ம் தேதியே இண்டிகோ நிறுவனம் நம்மிடம் உறுதி செய்துள்ளது. அதேபோல் தேஜஸ்வி  சூர்யா எமர்ஜென்சி கதவை திறந்தது குறித்தும், மன்னிப்பு கோரியது குறித்தும் ஒன்றிய அமைச்சரே கூறி உள்ளார். அப்படி இருந்தும் அண்ணாமலை எதற்காக இப்படி பொய் கூற வேண்டும்.

Link :

Passenger opens emergency door of IndiGo flight, DGCA orders probe

Tejasvi Surya opened emergency exit of IndiGo plane by mistake, has apologised: Civil aviation minister Jyotiraditya Scindia

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader