நீர்நிலை என்று சொல்ல மாட்டாராம்.. ஆக்கிரமிப்புக்கு துணை போகும் அதிகாரிகள் ?

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மனுதாரர் ஒருவர், கிராமத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு, அது அரசின் நிலம் என்பதால் விவரங்களை தனிநபருக்கு அளிக்க முடியாது என பதில் அளிக்கப்பட்டு உள்ளது.

ஜூன் 1-ம் தேதி அளிக்கப்பட்ட ஆர்.டி.ஐ பதிலில், ” செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், படூர் கிராமத்தில் புல எண் 116-ல் உள்ள நிலத்தின் வகை  என்ன? ” என்ற கேள்விக்கு ” மனுதாரர் விவரம் கோரும் புல எண் அரசு நிலம் என்பதால் இது தொடர்பாக பொது நலன் கருதி எந்த தகவலும் தனிநபருக்கு அளித்திட சாத்தியம் இல்லை என்பதை மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது ” என பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது.

அடுத்ததாக,  புல எண் 116-ல் உள்ள நிலத்தில், நீர்நிலை ஆக்ரமிப்பு நடந்ததாக இதுவரை
புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா ? என்ற கேள்விக்கு “ இதற்கான தகவல் ஏதும் இல்லை ” எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், ” இந்த புல எண்ணில் வடிகால் வாய்க்கால் / கால்வாய் இணைப்பு எத்தனை
உள்ளது ? இந்த புல எண்ணில் கிணறு உள்ளதா ? கிணற்றில் நீர் எடுக்க உரிமம் கொடுக்கப்பட்டுள்ளதா? அப்படி கொடுக்கப்பட்டு இருந்தால், யார் பெயரில் என்ன கால அளவுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது ? கிராமத்தின் நீர் நிலையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அதிகாரி யார் ? தற்போது பணியில் அந்த பொறுப்பில் உள்ள அதிகாரியின் பெயர், அலுவலக முகவரி, தொலைபேசி எண் என்ன ? நீர்நிலை ஆக்ரமிப்பு குறித்த புகார், மற்றும் ஆதாரங்கள் எந்த அதிகாரியிடம் வழங்க வேண்டும் ? ” என வரிசையாக எழுப்பப்பட்ட கேள்விக்கும்,

” மனுதாரர் விவரம் கோரும் புல எண் அரசு நிலம் என்பதால் இது தொடர்பாக பொது நலன் கருதி எந்த தகவலும் தனிநபருக்கு அளித்திட சாத்தியம் இல்லை என்பதை மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது ” என்ற பதிலே திருப்போரூர் பொது தகவல் அலுவலர் தரப்பில் அளிக்கப்பட்டு இருக்கிறது .

கிராமத்தில் உள்ள நிலம் மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ளதா என்ற எண்ணத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆர்.டி.ஐ மனுவிற்கு அரசு நிலம் எனக் கூறி தகவலை அளிக்க மறுத்து இருப்பது அப்பட்டமான விதி மீறலே.

தமிழக அரசால் வெளியிடப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 வழிகாட்டி கையேடுபடி, ” பொது தகவல் அலுவலர் தகவலை அளிப்பதை எந்த முறையிலும் தடுக்குமிடத்து, அந்த விண்ணப்பம் பெறப்படும் வரை அல்லது தகவல் அளிக்கப்படும் வரை ஒவ்வொரு நாளும் ரூ.250/- தண்டமாக(அபராதம்), அந்த பொது தகவல் அலுவலர் மீது விதிக்கப்படும் ” எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், கோரிய தகவல் அலுவலக ரகசியக்காப்பு ஆணை 1923-ல் வராததால் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005  தண்டனை பிரிவு 20(1), 20(3), 20(5) இன் கீழ் தகவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கூறியும், கோரிய தகவலை வழங்குமாறும் மனுதாரர் மேல்முறையீடு செய்துள்ளார்.

இங்கு பெரும்பாலான ஆக்கிரமிப்புகள் அரசு புறம்போக்கு நிலங்களிலும், நீர்நிலை பகுதிகளிலும் தானே நிகழ்கிறது. ஆனால், அரசு நிலம் தொடர்பான விவரங்களை தனிநபருக்கு அளிக்க சாத்தியம் இல்லை என பொது தகவல் அலுவலர் அளித்து இருக்கிறார், எந்த கேள்விக்கும் முறையான ஒரு பதில் கூட இல்லை. இது அப்பட்டமான ஆக்கிரமிப்பை மறைக்க திட்டமிடும் முயற்சியா என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது.

Please complete the required fields.




Back to top button
loader