எதற்காக எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை.. விற்பனையாளர்களின் எச்சரிக்கை என்ன ?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு மக்களுக்கு தலைவலியாக இருந்து வரும் நிலையில், விற்பனை செய்யப்படும் பெட்ரோலில் 10% எத்தனால் கலந்து இருப்பதால், பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகாமல் பார்த்துக் கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், ” சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ஒரு முயற்சியாக இந்திய அரசின் ஆணையின்படி தற்போது எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலில் 10% எத்தனால் கலந்து வினியோகிக்கின்றனர்.

வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் வழக்கமாக வாகனத்தை தண்ணீரால் கழுவும் போது, மழை பெய்யும் போதும் தண்ணீர் பெட்ரோல் சேமிப்பு கலன்களில்(டேங்) கசிந்திடாது கவனம் செலுத்த வேண்டும்.

பெட்ரோலில் உள்ள எத்தனாலை ஈர்க்க சிறிதளவு தண்ணீர் போதுமானது. இது வாகனத்தின் சேமிப்பு கலனில் உள்ள பெட்ரோலின் எத்தனாலை தண்ணீராக மாற்றி பெட்ரோல் டேங்கின் அடிப்பகுதிக்கு சென்று தங்கிவிடும். ஆதலால், உங்கள் வாகனத்தை இயக்க கடினமாக இருக்கும் அல்லது ஓட்டும்போது வாகனம் குலுங்கி செல்லக்கூடும்(ஜெர்க்) ” எனத் தெரிவித்து உள்ளனர்.

எத்தனால் :

சர்க்கரை ஆலைகளில் கரும்புச் சாறுடன் கிடைக்கும் துணைப் பொருளான எத்தனாலை தொழிற்சாலைகள் மற்றும் மதுபானம் தயாரிக்கும் நிறுவனங்களும் பயன்படுத்தி வருகின்றன.

Advertisement

2019-ம் ஆண்டு ஜூலையில் மக்களவையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பதிலில், ” தற்போதைய நிலையில் பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிலையங்கள் 10% எத்தனால் கலந்த பெட்ரோலை விற்பனை செய்து வருகின்றன. மத்திய அரசின் 08.06.2019 அன்று வெளியிட்ட உயிரி எரிபொருள் 2018 தொடர்பான தேசியக் கொள்கையின்படி, 2030-ம் ஆண்டு வாக்கில் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளது ” என தெரிவித்ததாக pib.gov.in வெளியிட்டு இருந்தது.

கடந்த 10 ஆண்டுகளாகவே பெட்ரோலில் 5% அளவிற்கு பெட்ரோலில் எத்தனாலை கலக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து முயற்சி வந்துள்ளது. அதன் விலையின் காரணமாகவும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் சிக்கல் இருந்தது. எனினும், தற்போது பெட்ரோலில் 10% அளவிற்கு எத்தனால் கலந்து விற்பனை செய்யப்படுகிறது.

எதற்காக ?

பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டிற்கு எண்ணெய் இறக்குமதியைச் சார்ந்து இருப்பதைக் குறைக்க இந்தியா உயிரி எரிபொருட்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என பெட்ரோலில் எத்தனால் கலந்த பயன்பாட்டை நடைமுறைப்படுத்தி வருகிறது.

2019-ம் ஆண்டில் தொடக்கத்தில் 5.6% எத்தனால் மட்டுமே பெட்ரோலில் பயன்படுத்தப்பட்டது. தற்போது அது 10% அளவிற்கு உயர்ந்துள்ளது. இதை 2030-ம் ஆண்டில் 20% அளவிற்கு உயர்த்த மத்திய அரசு பரிந்துரைத்து இருந்தது. எனினும், இதனை 2030-க்கு முன்னதாகவே நடைமுறைப்படுத்த உள்ளது தொடர்பான தகவல்கள் வெளியாகியதாகக் கூறப்படுகிறது.

2020 டிசம்பரில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ” 20% எத்தனால் கலந்த பெட்ரோல் கார்பன் டை ஆக்ஸைடு, ஹைட்ரோகார்பன் உள்ளிட்டவையின் உமிழ்வை குறைக்க உதவுகிறது. இது எண்ணெய் இறக்குமதி செலவைக் குறைக்கிறது, அந்நிய செலவாணியை சேமிக்கும் மற்றும் ஏரிசக்தி பாதுகாப்பை அதிகரிக்கவும் உதவும் ” எனக் கூறப்பட்டுள்ளது.

எத்தனால் எரிபொருள் பயன்படுத்தி வெளியேறும் கார்பன் டை ஆக்ஸைடு பெட்ரோலை விட குறைவானதே. ஆகையால், பெட்ரோலை விட சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், எண்ணெய் இறக்குமதியை குறைக்க உதவும் எனப் பார்க்கப்படுகிறது.

இருப்பினும், எத்தனால் ஆனது ஒரு எரிபொருளாக குறைந்த செயல்திறன் கொண்டது. இது தரும் ஆற்றலானது, பெட்ரோல் தரும் ஆற்றலைவிட மூன்றில் ஒரு பங்கு குறைவு. இதன் விளைவு காரணமாக அதிக எரிபொருள் நுகர்வு மற்றும் குறைந்த மைலேஜ் மட்டுமே கிடைக்கும். பெட்ரோலில் அதிக அளவில் எத்தனால் சேர்ப்பதால் பழைய வாகனங்கள் பாதிக்கப்படக்கூடும் எனக் கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக, எத்தனால் எரிபொருள் தயாரிக்கும் நாடுகளில் இந்தியா முன்னேறி வருகிறது. 2019-ம் ஆண்டில் எத்தனால் தயாரிப்பு 3 பில்லியன் லிட்டராக உயரும் என்றும், அதற்கு முந்தைய ஆண்டை விட 11 சதவீதம் அதிகம்(2.7 பில்லியன்) என எகனாமிக் டைம்ஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

இனி வரும் காலங்களில் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பதற்கு இந்தியா அதிக அளவில் எத்தனால் எரிபொருளை தயாரிக்க வேண்டும். இனி பெட்ரோல் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனத்தின் பெட்ரோல் டேங்குகளில் தண்ணீர் புகாமல் எச்சரிக்கையாக பார்த்துக் கொள்ளவும்.

Links :

Indian government mulls E20 ethanol mixed petrol to curb vehicle emissions: Pros and cons explained

Govt looks to advance 20% ethanol blending with petrol

Why ethanol blending in petrol might not work for India

India to achieve highest-ever ethanol blending in petrol this year

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button