This article is from Apr 25, 2019

கோவா தேர்தலில் மாதிரி வாக்குப்பதிவில் பிஜேபிக்கு அதிக வாக்கு | பல மாநிலத்தில் EVM-ல் கோளாறு !

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் தேர்தலை சந்திக்க விரும்புகின்றனர். ஆனால், தேர்தலுக்கு பயன்படுத்தி வரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறைக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதற்கு காரணம் EVM -ல் ஓட்டு திருட்டு நிகழ வாய்ப்பு உள்ளதாக நம்புகின்றனர்.

எனினும், இந்த கருத்தை மறுத்து வரும் தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பானதே என்கிறது. ஆயினும், சமீப தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பல்வேறு கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. இத்தகைய கோளாறுகள் EVM மீதான எதிர்ப்பை அதிகரித்துள்ளது

ஏப்ரல் 23-ம் தேதி  மூன்றாம் கட்ட தேர்தலாக 13 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 117 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில், வாக்குச்சாவடியிலேயே வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறுகள் ஏற்பட்டு உள்ளன.

கோவாவில் காலையில் வாக்குப்பதிவுக்கு முன்பாக நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 9 வாக்குகளை விட அதிகமாக 17 வாக்குகள் அந்த கட்சியின் சின்னத்தில் விழுந்து உள்ளது. பிற கட்சியினருக்கு சரியாக ஒதுக்கீடு செய்த வாக்குகள் விழும் பொழுது பிஜேபி கட்சிக்கு 17 வாக்குகள் விழுந்தது மூன்றாம் கட்டத் தேர்தலுக்கு முன்பான மாதிரி வாக்குப்பதிவில் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இந்த பிரச்சனை குறித்து உடனடியாக கோவாவின் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தலைவரான எல்வின் கோமேஸ் தன் ட்விட்டரில் காலை 7.14 மணியளவில் தெரிவித்து உள்ளார். கோவாவில் உள்ள 34 AC இன் 31 வது வாக்குச்சாவடியில் நிகழ்ந்து உள்ளதாகவும், இதனை ஓட்டு திருட்டு என்றும் குறிப்பிட்டு இருந்தார்.


இதற்கு  கோவா தேர்தல் அதிகாரி, தெற்கு கோவாவில் EVM குறித்து எழுந்த புகாரை அடுத்து முழு EVM செட்-ம் மாற்றப்பட்டு உள்ளதாக ட்விட்டரில் பதில் அளித்து இருந்தார்.

வாக்குப்பதிவு இயந்திரத்தின் கோளாறுகள் குறித்து புகார்கள் கோவா மட்டுமல்லாமல் கர்நாடகாவில் மீதமுள்ள 14 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலிலும் பல வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டில் கோளாறுகள் இருந்ததாக கூறப்படுகிறது.


கர்நாடகா மாநில அமைச்சரான பிரியன்க் கார்கே, ” சித்தபூரில் பல EVM இயந்திரங்கள் கோளாறுகள் ஆகியுள்ளது. 20-க்கும் மேற்பட்ட இயந்திரத்தில் கோளாறுகள் இருந்ததாக புகார்கள் வந்துள்ளன. இதற்கு தேவையான மாற்று இயந்திரங்களை மாவட்ட நிர்வாகம் கொண்டிருக்கும் என நம்புகிறோம் ” எனத் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.


கேரளாவில் வேறு மாதிரியான தவறுகள் நிகழ்ந்து உள்ளன. அங்குள்ள வாக்குச்சாவடியில் ஒரு கட்சிக்கு வாக்குச் செலுத்த அந்த வாக்கு வேறு ஒரு கட்சிக்கு சென்றுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரு கட்சியின் பட்டனை அழுத்தினால் லைட் வேறு கட்சியின் சின்னத்தில் எரிவதாக புகார்கள் கூறப்பட்டன.


கேரளாவில் கயன்குளம் பகுதியில் கோளாறுகள் கொண்ட 20 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டன. மேலும், செரதலா அருகே உள்ள கிழக்கி நல்பது பகுதியில் செலுத்தும் வாக்குகள் பிஜேபி கட்சிக்கு ஆதரவாக செல்வதாக புகார் அளிக்கப்பட்ட பின்னர் இயந்திரங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. இதேபோன்று, கேரளாவில் பல பகுதிகளில் EVM கோளாறு குறித்து முதல்வர் பினராயி விஜயன் புகார் தெரிவித்து இருந்தார்.

வயநாட்டில் ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிட்ட பிஜேபி வேட்பாளர் துஷர் என்பவர் கோளாறான EVM இயந்திரத்தில் மக்கள் வாக்குச் செலுத்துவது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்தார்.

இந்த செய்திகள் யாவும் ஏப்ரல் 23 -ம் தேதி நடைபெற்ற மூன்றாம் கட்டத் தேர்தலில் நிகழ்ந்தது. இனி வரும் அடுத்த கட்டத் தேர்தலில் எம்மாதிரியான கோளாறுகள் வருகின்றன என்பதை கவனிக்க வேண்டியது அவசியம். மக்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது படிப்படியாக நம்பிக்கை இழக்கும் நேரத்தில் தேர்தல் ஆணையம் துரிதமாக செயல்பட்டு இதுபோன்ற கோளாறுகள் நிகழாமல் கவனிக்க வேண்டியது அவசியமாகும்

Kerala Lok Sabha elections | Over 73% voter turnout in state, 9 collapse and die

Please complete the required fields.




Back to top button
loader