EWS பற்றி வீடியோவில் பொய்.. ட்விட்டரில் கவனப் பிசகு எனப் பதிவிட்ட ரங்கராஜ் !

சாணக்யா யூடியூப் சேனலை நடத்தி வரும் திரு.ரங்கராஜ் அவர்கள் ” உடையும் உண்மைகள் ” எனும் தலைப்பில் நீட் கமிட்டி உறுப்பினர் உடன் நடத்திய நேர்காணல் வீடியோவில் “EWS என்பதில் உயர்சாதி, பொதுப் பிரிவினர் என சொல்லவில்லை, மேல் சாதி என சொல்லவில்லை. யார் வேண்டுமென்றாலும் இடஒதுக்கீட்டில் வரலாம் ” எனப் பேசி இருந்தார்.
EWS எனும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்காக 10% இடஒதுக்கீடு ஆனது இடஒதுக்கீடு முறைக்குள் வராத பொதுப் பிரிவினர் எனும் முன்னேறிய வகுப்பினருக்கே வழங்கப்பட்டு வருகிறது. ஓபிசி, எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு திட்டத்தின் கீழ் வராத EWS-ஐ சேர்ந்த நபர் இந்திய அரசின் வேலைகளில் 10% இடஒதுக்கீடு பெறுவார்கள். அவர்களுக்கான வருமானம், சொத்து எவ்வளவு இருக்க வேண்டும் என்கிற வரையறையும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அனைத்து பிரிவினரும் போட்டியிட முடியாது.
இந்நிலையில், ரங்கராஜ் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ” பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான EWS ஒதுக்கீடை, பிற இடஒதுக்கீடுக்கு *விண்ணப்பிக்காத* யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என நினைத்திருந்தேன். இருக்கும் ஒதுக்கீடு *வரம்புக்குள் வராதவர்கள்* தான் பெற முடியும் என தெரிந்து கொண்டேன். என் கவனப் பிசகு ” எனப் பதிவிட்டு இருக்கிறார்.
ஆனால் 2019-ம் ஆண்டிலேயே 10% இடஒதுக்கீடு குறித்து விரிவான வீடியோ வெளியிட்ட ரங்கராஜ் அவர்கள், ” EWS இடஒதுக்கீடு உயர்ந்த சாதியினருக்கு என அரசு குறிப்பிடவில்லை , பொதுப்பிரிவினர் என்றேக் கூறவேண்டும். இந்த 10% இடஒதுக்கீடு பொதுப்பிரிவினருக்கு ” என்று தெளிவாய் பேசி இருக்கிறார். ஆனால், தற்போது EWS இடஒதுக்கீட்டில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம், பொதுப்பிரிவினருக்கு என்று சொல்லவில்லை ” எனக் கூறி இருக்கிறார்.
மேலும் படிக்க: EWS இடஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினர் பயன் பெற முடியுமா ?
கடந்த ஆண்டில் கூட, EWS இடஒதுக்கீடு அனைவருக்குமானது, ஓபிசி மாணவன் கூட பயன்பெற முடியும் என தவறான தகவலை தற்போதைய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார். பின்னர் தன்னுடைய தவறான தகவலை திருத்திக் கொள்வதாக பதிவிட்டார்.
பத்திரிகைத் துறையில் இத்தனை ஆண்டுகளாக பணியாற்றி வரும் ரங்கராஜ் அவர்கள் EWS இடஒதுக்கீடு யாருக்கு பயன் தரும் என்றே தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றும், வீடியோவில் பொய்யான தகவலை பேசிட்டு ட்விட்டரில் விளக்கம் அளிப்பது எந்தவிதத்தில் சரியானது என பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். மேலும், ரங்கராஜ் EWS பற்றிய பேசிய தவறான தகவல் இடம்பெற்ற பகுதி வீடியோவில் இருந்து நீக்கப்படவும் இல்லை.