EWS எனும் சமூக அநீதி: 79 சாதிகள் பட்டியலின் உண்மை குறித்த வீடியோவின் ஆதாரத் தொகுப்பு !

பிராமணர்கள் ராஜாக்களிடம் கை கட்டி வேலை பார்த்துள்ளனர். ஆண்ட பரம்பரைக்கு இட ஒதுக்கீடு இருக்கும்பட்சத்தில் அவர்களிடம் கை கட்டி வேலை பார்த்த பிராமணர்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் எனப் பேசு தமிழா பேசு சேனலின் ராஜவேல் நாகராஜன் ஒரு வீடியோவில் பேசியுள்ளார்.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டில் பிராமணர்கள் மட்டுமே பலனடைகின்றனர் என்ற குற்றச்சாட்டு உண்டு. 10% இட ஒதுக்கீட்டில் பிராமணர்கள் மட்டுமல்லாமல் மொத்தம் 79 சாதிகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், 10% சதவீத இட ஒதுக்கீட்டில் எந்தெந்த சாதிகள் பலனடையும் என்ற தரவுகள் பற்றி அதிகாரப்பூர்வமான தரவுகள் எதுவும் அரசுத் தரப்பில் வெளியாகவில்லை.

மேலும், அவர் குறிப்பிட்டுள்ள 79 சாதிகள் பற்றிய குறிப்புகள் குறித்துத் தேடியபோது, பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலையை ஆராய அமைக்கப்பட்ட சட்டநாதன் ஆணையம் மற்றும் அம்பாசங்கர் ஆணையத்தின் தரவுகளில் இருந்து இவை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.

79 சாதிகளில் பிராம்மணர்கள் ஒரு சாதி தான். அது இல்லாமல் இன்னும் 78 சாதிகள் இருக்கும்பட்சத்தில் பிராமணர்களை மட்டும் குறை கூறுவது எப்படிச் சரியாகும் போன்ற கேள்விகள் முன் வைக்கப் படுகிறது.

பிராமணர்கள் என்பது ஒரு சாதி என இவர்கள் குறிப்பிட்டாலும், அம்பாசங்கர் ஆணையத்தின் தரவுகள் படி பிராமணப் பிரிவில் 11 சாதிகள் குறித்துத் தரவுகள் இருந்தது. அவை 1. அய்யர் 2. அய்யங்கார் 3. பட்டாச்சாரியார் 4. குருக்கள் 5. ராயர் 6. கரிகோட்டுராயர் 7. மத்துவர் 8. தேசிகர் 9. பிற மாநில பிராமணர்கள் 10. நம்பூதிரி 11. ராவ்.

இப்படிப் பிராமணச் சாதிக்குள் 11 சாதிகள் இருக்கும்போது பிராமணர் என்பது ஒரு சாதி எனக் கூறுவது உண்மைக்கு முற்றிலும் முரணாக உள்ளது.

மேலும், அந்த 79 சாதிகளில் பணிக்கர் (பிராமணர்களின் துணை சாதி), நாயர், வாரியர் போன்ற சாதிகள் கேரளாவைச் சேர்ந்தவர்களுடையது. இவர்களுடைய மக்கள் தொகை மிகச் சொற்பமாகவே தமிழகத்தில் இருக்கும்.

மலங்கரா சிரியன் கிறிஸ்தவர் என்ற சாதி இரண்டு முறை குறிப்பிடப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, ஆங்கிலோ இந்தியர், ஜனோலா சால்வேஷன் சர்ச், லண்டன் மிஷன் கிறிஸ்தவர், ரோமன் கத்தோலிக்க மலங்கரா சிரியோ மலபார் ரைட்ஸ், முற்பட்ட வகுப்புகளிலிருந்து மதம் மாறிய கிறிஸ்தவர் போன்ற கிறிஸ்தவ வகுப்புகளும் இதில் அடங்கும்.

முஸ்லீம் வகுப்புகளான தாவூத், கட்ஸு(சைத்), மீர், மைமன், நவாப் மற்றும் பிற மாநில முஸ்லீம்கள் போன்றவையும் இந்த 79 சாதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்கள் குறிப்பிடும் 79 சாதிகளில் 3 சாதிகள் OBC பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

மேலும், 79 சாதிகளில் பிராமணர்கள் தவிர மற்ற எந்தச் சாதியினரும் நாம் பெரிதாகக் கேள்விப்படாத சாதிகளாகவே இருக்கின்றது.

மேலே குறிப்பிட்டுள்ள கேரளா சாதிகளோ, கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் வகுப்பினரோ தமிழக ஜனத்தொகையில் மிகச் சொற்பமாகவே இருப்பர். எனவே, இயற்கையாகவே பிராமணர்களே இதில் அதிகமாக பலனடைகின்றனர் என்பது புலப்படுகிறது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பின்தங்கியவர்களுக்கே இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இவற்றிற்குத் தரவுகளும் உள்ளது. ஆனால் முன்னேறிய வகுப்பில் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் குறித்து எந்தத் தரவுகளும் இல்லை.

இந்தியாவின் மக்கள் தொகையில் சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எடுக்கப்படுவதில்லை. அதனால் ஒவ்வொரு வகுப்பினரும் மக்கள் தொகையில் எவ்வளவு சதவீதம் இருக்கின்றனர் என்பதற்குத் தரவுகள் இல்லை.

1931ம் ஆண்டு மெட்ராஸ் பிரசிடன்சியின் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி வாரி கணக்கும் எடுக்கப்பட்டது. அதில் 4,67,40,000 இருக்கும் மக்கள் தொகையில் பார்ப்பனர்களின் மக்கள் தொகை 10,67,400 என குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், இளையதலைமுறை என்ற அமைப்பின் மூலம் தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சமூக வாரியாகப் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்துத் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி மனு அளிக்கப்பட்டு இருந்தது.

படிக்க : இட ஒதுக்கீடு எதற்காக ? | யார் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் !

அதற்கு 2019ல் அளிக்கப்பட்ட பதிலின்படி, 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் ஓசி பிரிவினர் 3 சதவீதம், பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் 37.5 சதவீதம், பிசி(முஸ்லீம்) 6 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் 27%, பட்டியலின பிரிவினர் 22%, அருந்ததியர் 3%, பழங்குடியின 1.5 % பேர் இருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது.

பள்ளிக்குழந்தைகளின் மக்கள் தொகையின் அடிப்படையில் வைத்துப் பார்க்கையில் முன்னேறிய வகுப்பினர் 3% சதவீதம் மட்டும் இருப்பது நமக்குத் தெரிய வருகிறது.  மக்கள் தொகையில் 3% சதவீதம் மட்டுமே இருக்கும் முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு ஏன் என்ற கேள்வி எழுகிறது.

முன்னேறிய வகுப்பில் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் என்றக் கூற்று உண்மையென்றால் அவர்களுடைய குழந்தைகளை பெரும்பாலும் அரசு பள்ளிகளிலோ அல்லது அரசு உதவிப் பெரும் பள்ளிகளிலே படிப்பர்.

ஆனால், இளையதலைமுறை அமைப்பினர் வெளியிட்ட தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் பதிலில் முன்னேறிய வகுப்பினரின் பிள்ளைகள் பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் பயின்று வருவதை நம்மால் காண முடிகிறது. முன்னேறிய வகுப்பினரில் 74% பேர் தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள். பட்டியலின மற்றும் பழங்குடி மக்களின் குழந்தைகள் 15% பேர் மட்டுமே தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள்.

இதிலிருந்து முன்னேறிய வகுப்பினரில் பெரும்பாலானோர் தங்களுடைய பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்கச் வைக்கும் அளவு பணம் படைத்தவர்களாக இருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

மேலும், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளவர்களுக்கே இடஒதுக்கீடு என்பது தான் சரியான வாதமாக இருக்கும்.

இடஒதுக்கீட்டால் அதிகம் பாதிப்படைந்தது முன்னேறிய வகுப்பினர்கள் தான் என்ற வாதம் முன் வைக்கப்படுகிறது.

இதுகுறித்துத் தரவுகளைத் தேடிப் பார்த்ததில், IIMகளில் பேராசிரியர்கள், இணைப் பேராசியர்கள், துணைப் பேராசிரியர்களின் சமூக பின்னணி குறித்து ஒன்றிய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டத் தகவலில் 75.2% பேர் முன்னேறிய வகுப்பினரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவருகிறது. SC, ST, OBC வகுப்பினர்களின் பிரதிநிதித்துவம் மிகச் சொற்பமாகவே உள்ளது தெரியவருகிறது.

மேலும், இந்தியாவில் உள்ள 45 மத்திய பல்கலைக்கழங்களில் துணை வேந்தர்கள், பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், துணைப் பேராசிரியர்கள் முதலியவர்களின் சமூகப் பின்னணி குறித்து ஒன்றிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில் முன்னேறிய வகுப்பினரே அதிகமாக உள்ளனர் என்பது தெரிய வருகிறது.

குறிப்பாக, 45 மத்திய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களில் 36 பேர் முன்னேறிய வகுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்.சி-1, எஸ்.டி-1, ஓபிசி-7.

கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், முன்னேறிய வகுப்பினருக்கும் பிற சமூகத்தினருக்கும் இருக்கும் இடைவெளி பெருமளவு இருக்கின்றது.

2014ம் ஆண்டு ஒன்றிய அமைச்சகத்தால் பாராளுமன்றத்தில் வெளியிட்ட தகவலின் படி, 2013ம் ஆண்டு ஒன்றிய அமைச்சகத்தில் குரூப் டி(துப்புரவு பணியாளர்கள்) பிரிவில் வேலை செய்பவர்களில் பெரும்பாலானோர் SC/ST பிரிவினை சேர்ந்தவர்கள் என்பதை நம்மால் காண முடிகிறது. ஒரு சில அமைச்சகத்தில் துப்புரவு பணியில் 100 சதவீதமும் பட்டியலின மக்களே ஈடுபட்டிருக்கின்றனர்.

குறிப்பாக ஒன்றிய சமூக நீதி அமைச்சகத்தில் துப்புரவு பணியில் ஈடுபடுபவர்களில் 100% பட்டியலின மக்கள் என அறிய முடிகிறது.

மேலும், ஆண்டிற்கு 8 லட்சம் வரை வருமானம், 5 ஏக்கர் நிலம், 1000 சதுர அடிக்குள் சொந்த வீடு வைத்திருப்பவர்களையே முன்னேறிய வகுப்பில் இருக்கும் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் என வரையறுக்கப்படுகிறார்கள்.

இந்தியாவில் ஒரு நாளைக்கு 75 ரூபாய்க்கு மேல் சம்பாரிப்பவர்களை வறுமை கோட்டுக்கு மேல் இருப்பவர்கள் என வரையறுத்திருக்கும் அதே வேலையில் ஒரு நாளைக்கு 2,222 ரூபாய் சம்பாரிக்கும் முன்னேறிய வகுப்பினரை பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என வரையறுக்கப்படுவது ஜனநாயகத்திற்கு எதிரான ஒன்று.

இடஒதுக்கீட்டால் தான் திறமையானவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது எனக் கூறியவர்களும், மண்டல் ஆணைய அறிக்கையை எதிர்த்து வீதியில் வந்து போராடியவர்களும் தான் இன்று தரவுகளே இல்லாமல் கொண்டு வரப்பட்ட EWS இட ஒதுக்கீட்டை ஆதரித்து வருகின்றனர்.

பிறந்த சாதியின் காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை மறுக்கப்பட்டவர்களுக்கே இடஒதுக்கீடு என்ற நிலையை மாற்றி அந்தச் சாதியின் கட்டமைப்பில் பலனடைந்த முன்னேறிய வகுப்பினருக்குக் கொடுக்கப்படும் 10% இடஒதுக்கீடு என்பது முற்றிலும் சமூக நீதிக்கு எதிரான ஒன்று.

Please complete the required fields.




Back to top button
loader