ஒரு தொகுதியில் நோட்டா வெற்றி பெற்றால் என்ன ஆகும்? நோட்டா குறித்த தெளிவான தகவல்கள் இதோ..!

2024 மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுதக்கால் மார்ச் 27 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், வேட்புமனு தாக்கலில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 பேரும், வட சென்னை தொகுதியில் 54 பேரும் மனுதாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிவடைந்தநிலையில், நாளை வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படவுள்ளது.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தல் நாள் அன்று வாக்காளர்கள் பலரும் தங்கள் தொகுதியில் உள்ள வேட்பாளர்களை புறக்கணிப்பதற்காக நோட்டாவிற்கு (NOTA) வாக்களிக்கவுள்ளதாகக் கூறுவதை பரவலாக கேட்க முடியும். உண்மையில் நோட்டா என்றால் என்ன? நோட்டா முதன்முதலில் எப்போது கொண்டுவரப்பட்டது? ஒரு தொகுதியில் நோட்டா வெற்றி பெற்றால் என்ன நடக்கும்? என்பன போன்ற தகவல்கள் அனைத்தையும் இங்கு தொகுத்துக் காண்போம்.

நோட்டா – ஓர் அறிமுகம்:

தன்னுடைய தொகுதியில் போட்டியிடும் எந்த வேட்பாளரையும் வாக்காளர் ஒருவருக்கு பிடிக்கவில்லை. அதேசமயம் தான் வாக்களிப்பதிலிருந்து தவறவும் விரும்பவில்லை. தனது வாக்கை இன்னொருவர் தவறாகப் பயன்படுத்துவதை அனுமதிக்கவும் விருப்பமில்லை என்று சிந்திக்கும் வாக்களர்களுக்கும் ஜனநாயக முறைப்படி வாய்ப்பு வழங்கவேண்டுமென, அவர்களுக்கென உருவாக்கப்பட்ட முறைதான் ’நோட்டா’. NOTA என்பதற்கு ’None of The Above’ அதாவது ’மேலே உள்ள எவரும் அல்ல’ என்பது பொருள்.

விதி 49-O எதற்காக கொண்டு வரப்பட்டது?

தேர்தல் நடத்தை விதி 1961, 49-O இன் படி, வாக்காளர் ஒருவர் வாக்களிக்க விரும்பாதபோது, வாக்காளர் பட்டியல் படிவம்17A என்ற பதிவேட்டில் முதலில் வாக்காளர் ஒருவர் தனக்கு எந்த வேட்பாளருக்கும் ஓட்டுபோடவிரும்பவில்லை என்பதை தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்து, அந்த பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் விதி 49L துணைவிதி (1) இன் படி கையொப்பமோ, கைரேகையோ (கைநாட்டு) இட வேண்டும். படிவம் 17A இல் கூறப்பட்ட பதிவுக்கு எதிராக, தலைமை அதிகாரியால் பதிவு செய்யப்பட்ட பின்னர், அத்தகைய கருத்துக்கு எதிராக வாக்காளரின் கையொப்பம் அல்லது கைரேகை மீண்டும் பதிவு செய்யப்படவேண்டும்.

இவ்வாறு விதி 49-O, ஒரு வாக்காளர், தான் ஏன் தனது தொகுதி வேட்பாளரை நிராகரித்துள்ளார் என்பதற்கான காரணத்தை கண்டறிய தேர்தல் அதிகாரியை அனுமதித்தது. ஆனால் விதி 49-O வாக்களர்களுக்கு எந்தவொரு ரகசியத் தன்மையையும் வழங்கவில்லை. எனவே உச்ச நீதிமன்றம் விதி 49-O ஐ ரத்து செய்து உத்தரவிட்டது.

முதன் முதலில் நோட்டா எப்போது கொண்டுவரப்பட்டது?

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சாண்டா பார்பரா கவுண்டியில் உள்ள தேர்தல் வாக்குச்சீட்டில் தான் முதன்முதலில் நோட்டா முறை கொண்டு வர வேண்டும் என்ற என்ற எண்ணம் 1976 ஆம் ஆண்டு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்தியாவில் முதன்முதலில் 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அளித்த ஆணையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் “நோட்டா” பொத்தானை வைக்க வேண்டுமென உத்தரவிட்டது. அதன்படி வாக்குப் பதிவு இயந்திரத்தில் கடைசியாக இளஞ்சிவப்பு நிறத்தில் நோட்டா பொத்தான் பொருத்தப்பட்டு, 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 சட்டமன்றத் தேர்தல்களில், முதல் முறையாகப் பயன்படுத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் முதன் முறையாக நோட்டா முறை, 2013 டிசம்பர் 4 அன்று நடைபெற்ற ஏற்காடு இடைத்தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

கடந்த மக்களவை தேர்தலில் நோட்டா எவ்வளவு வாக்குகள் பெற்றது?

2014 இல் நடைபெற்ற இந்தியாவின் 16 வது மக்களவைத் தேர்தலில் 543 தொகுதிகளின் மொத்த வாக்குகளில் 1.1 % (59,97,054) வாக்குகள் நோட்டாவிற்கு பதிவாகின.

அதேபோல் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகளில் 1.4 சதவீதம் (5,82,062) வாக்குகள் நோட்டாவிற்கு பதிவாகின. அதிகபட்சமாக தமிழ்நாட்டில் நீலகிரி மக்களவைத் தொகுதியில் 45,559 நோட்டா வாக்குகள் பதிவாகியது.

நோட்டா வெற்றி பெற்றால் என்ன ஆகும்?

பொதுவாக ஒரு தொகுதில் நோட்டாவிற்கு அதிக வாக்குகள் கிடைத்தால், அந்த தொகுதியில் குடியரசுத்தலைவரின் ஆட்சி வரும் என்றும், அந்த தொகுதியில் மீண்டும் மறுதேர்தல் நடைபெறும் என்றும் அல்லது இதற்கு முந்தைய தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளரே மீண்டும் பதவியில் தொடர்வார் என்றும் பல தகவல்கள் தவறாகப் பரவி வருகின்றன. அனைத்துமே ஆதாரமற்றவை தான்.

உண்மையில் நோட்டா வெற்றி பெற்றால், அதாவது வேட்பாளர்கள் பெற்றிருக்கும் வாக்குகளை விட அதிக வாக்குகள் பெற்று நோட்டா முதலிடம் பெற்றால், அதற்கு அடுத்ததாக அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளரே வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார். முதலிடம் பெற்றாலும் கூட, பதிவு செய்யப்பட்ட அந்த நோட்டா வாக்குகள் அனைத்தும் செல்லாத வாக்குகளாகவே இருக்கும்.

ஆதாரம்:

ECI  – Symbol for ‘None of the Above’ (NOTA) option

https://www.eci.gov.in/eci-backend/public/api/download?u

ECI – NOTA Advanced search

Please complete the required fields.
Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader