This article is from Jan 06, 2022

போலி முகநூல் கணக்கு மூலம் பணம் கேட்கும் மோசடி! தப்பிக்க எளிய வழி.

சமீப காலமாக, ” எச்சரிக்கை, என்னுடைய பெயரில் போலியான ஃபேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. என்னுடைய பெயரில் உள்ள ஃபேஸ்புக் கணக்கில் இருந்து நட்பு கோரிக்கை(Friend Request) வந்தால் நிராகரிப்பு செய்யுங்கள். அவசரநிலை என பண உதவி கேட்டால் அனுப்பாதீர்கள் ” எனக் குறுந்தகவலும், பதிவுகளும் பார்த்திருக்கக்கூடும்.

உங்களுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து புகைப்படங்கள், தனிநபர் விவரங்கள் அனைத்தையும் சேகரித்து உங்களுடைய பெயரிலேயே புதிதாக போலி ஃபேஸ்புக் கணக்கை தொடங்குவார்கள். பின்னர், உங்கள் கணக்கில் உள்ள நட்பு வட்டாரங்களுக்கு நட்பு கோரிக்கை(Friend Request) அனுப்பி புதிய கணக்கை போன்று மாற்றி விடுவார்கள்.

இதன்பிறகு, உங்கள் நண்பர்களுக்கு போலியான ஃபேஸ்புக் கணக்கு மூலம் அவசரநிலை எனக் கூறி பணம் கேட்டு மெசேஜ் செய்வார்கள். அதுவும், ஆள் பார்த்து தான் தொகையை நிர்ணயிக்கிறார்கள். அதிக சம்பளத்துடன் பெரிய வேலையில் இருப்பவர்கள் போல் தெரிந்தால் 10 ஆயிரம், 20 ஆயிரம் என்றும், சாதாரண நபர்களிடம் குறைவாக சில ஆயிரக்கணக்கில் கேட்கிறார்கள்.

தற்போதைய டிஜிட்டல் இந்தியாவில் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவதால், கூகுள்பே, போன்பே என சம்பந்தப்பட்டவர்களின் எண்ணை சரிபார்க்காமல் கூட பணத்தை அனுப்பி ஏமாறுகிறார்கள்.

நமது யூடர்ன் ஆசிரியர் ஐயன் கார்த்திகேயன் அவர்களுக்கு நள்ளிரவு நேரத்தில் தெரிந்த ஐபிஎஸ் அதிகாரியின் பெயரில் போலியான ஃபேஸ்புக் கணக்கில் இருந்து நட்பு கோரிக்கை வந்துள்ளது. அதுகுறித்து, சம்பந்தப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டு அந்த கணக்கு நீக்கப்பட்டது.

பெரும்பாலும் இரவு நேரத்தையே இதுபோன்ற போலி ஃபேஸ்புக் கணக்கு மூலம் ஏமாற்றும் நபர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். ஏனெனில், இரவு நேரங்களில் அவசரநிலை எனக் கூறினால் நம்பக்கூடிய வாய்ப்புகள் அதிகம் மற்றும் நேரடியாக சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து பேச மாட்டார்கள் என்பதால் இரவு நேரத்தை தேர்ந்தெடுக்கிறார்கள்.

இதை தடுப்பது எப்படி ? 

உங்கள் ஃபேஸ்புக் கணக்கில் நட்பு பட்டியல்(Friend List) அனைவரும் பார்க்கும் வகையில் திறந்து இருக்கும் போது இப்படி நடக்கிறது. அதேபோல், உங்கள் புகைப்படம் மற்றும் விவரங்கள் (Profile) அனைவரும் அணுகக்கூடிய வகையில் இருப்பதால் எடுத்துக் கொள்கிறார்கள்.

முதலில் அதை மாற்ற வேண்டும். உங்கள் கணக்கு விவரங்களை தெரியாதவர்கள் அணுக முடியாத வகையில் செட்டிங்கில் சென்று லாக் செய்ய வேண்டும். இதன் மூலம், உங்கள் புகைப்படங்கள், விவரங்களை எடுக்க முடியாது. மேலும், உங்கள் நட்பு பட்டியலை(Friend List) தெரியாதவர்கள் பார்க்க முடியாத வகையில் மாற்ற வேண்டும்.

உங்கள் ஃபேஸ்புக் கணக்கின் விவரங்களை லாக் (Profile lock) செய்ய செட்டிங்கில் சென்று audience and visibility பிரிவில் Profile locking உள்ளே சென்று லாக் செய்யலாம். அதேபோல், ஃபேஸ்புக் செட்டிங்கில் ப்ரைவசியில் சென்று ” Who can see your friends list? ” என்பதில் only me அல்லது பிற விருப்பங்களை தேர்ந்தெடுக்கலாம்.

ஓவர்பேமெண்ட் மோசடி :  

நீங்கள் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவதோ அல்லது வியாபாரம் செய்யும் போது உங்களுக்கு அதிகமாக பணத்தைக் கட்டி விட்டேன் என பணப்பரிமாற்றம் செய்தது போன்ற பொய்யான மெசேஜ் காண்பித்து ஏமாற்றி விடுகிறார்கள். பணம் செலுத்தினால் என்ன மெசேஜ் வருமே அதை அனுப்பி உங்களை நம்ப வைத்து விடுவார்கள். நீங்களும் அவர் செலுத்தியதாக கூறும் கூடுதல் தொகையை சரிபார்க்காமலும் கூட அளித்து விடுவீர்கள்.

இதுபோன்ற நிலைகளில், முழுமையாக கணக்கை சோதித்து பார்த்து பணம் வந்ததா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளின் போது கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.

இந்தியாவில் ஆன்லைன் மோசடிகள் நிகழ்வது ஒரு சில மட்டுமே செய்திகளின் வாயிலாக அறியப்படுகிறது. பெரும்பாலானவை வெளியே வருவதில்லை. கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், மக்கள் பொருளாதாரரீதியில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இத்தகைய சூழலைப் பயன்படுத்தி பண மோசடி செய்கிறார்கள். அதேபோல், ஆன்லைன் சூதாட்டங்களில் அடிமையாகி பணத்தை இழக்காதீர்கள். அவற்றிடம் இருந்து எச்சரிக்கையாக விலகி இருங்கள்.

Please complete the required fields.
Back to top button
loader