This article is from Aug 11, 2019

லைக், ஷேர்காக பதிவிடப்படும் தவறான ஃபேஸ்புக் பதிவுகளின் தொகுப்பு !

ஃபேஸ்புக் பயன்படுத்த தொடங்கிய சமயங்களில் இந்த கடவுளின் புகைப்படத்தை பகிர்ந்தால் 10 நொடியில் நன்மை வரும், பழங்களில் அல்லது மேகத்தில் கடவுள் தெரிகிறார், இந்த பாம்பு படத்தை பகிருங்கள் எனக் கூறும் ஏராளமான பதிவுகளை கண்டிருப்போம்.

தற்பொழுது அதுபோன்ற பதிவுகள் அதிகம் பார்க்க முடியவில்லை என்றாலும் சமூக ஊடகங்களில் ஏதோ ஒரு இடத்தில்இருக்கத்தான் செய்கிறது. ஒருபுறம் புரளிகள் சூழ்ந்திருக்கிறது என்றால், மறுபுறம் இப்படி லைக், ஷேர்க்காக கிடைக்கும் புகைப்படத்தை வைத்து ஒரு தலைப்பிட்டு பதிவிட்டு விடுகின்றனர்.

அப்படி பதிவிடப்படும் பதிவுகள் பெரும்பாலும் கடவுள், மதம், நாட்டின் பெருமை, ராணுவ வீரர்கள், பெண்கள் என உணர்வுகளை தூண்டும் வகையில் பகிரப்படும். சமீபத்தில் karthika என்ற முகநூல் பக்கத்தில் இந்திய ராணுவ வீரர் தமிழ் செல்வம் ஏழை விதவை பெண்ணை மறுமணம் செய்து கொண்டார் என ஒரு ராணுவ வீரர் திருமணம் கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து விட்டனர். அந்த பதிவு ஆயிரக்கணக்கான ஷேர்களை பெற்றுள்ளது.

அந்த பதிவு முகநூல் முழுவதும் பரவி பல முகநூல் பக்கங்களில் தொடர்ந்து பகிரப்பட்டு கொண்டே இருக்கிறது. இந்த செய்தி உண்மையா என்பதை கூட யாரும் அறிந்து கொள்ள விரும்பவில்லை. ஆனால், வாழ்த்துக்களை மட்டும் கூறியுள்ளனர். ஏன் அப்படி கூறுகிறோம் என்றால், அந்த பதிவில் ” ராணுவ வீரர் ” என்பதற்கு பதிலாக ” ராணுவீர்ர் ” எனப் பதிவிட்டு உள்ளனர். அதையும் காப்பி பேஸ்ட் செய்து பல முகநூல் பக்கங்கள், கணக்குகள் பதிவிட்டு லைக்குகளை பெறுகின்றனர். 

சரி, உண்மையில் ராணுவ வீரர் தமிழ் செல்வம் விதவை பெண்ணை மறுமணம் செய்து கொண்டாரா என அறிந்து கொள்ள முயற்சித்தோம். வைரலான புகைப்படத்தின் கீழே indian army protect us என்ற லோகோ இருந்தது.. அந்த முகநூல் பக்கத்திற்கு சென்று பார்க்கையில், வைரலான புகைப்படம் இருத்தது. ஆனால், தமிழில் பகிர்வது போன்று மறுமணம் செய்து கொண்டார் என்றெல்லாம் பதிவாகவில்லை.

இப்படி பொருந்தாத செய்தியை ஏன் பதிவிட்டு அந்த பெண்ணை இழிவுபடுத்த வேண்டும். வெறும் லைக், ஷேர்காக எதற்காக பொய்யான செய்தியை பதிவிடுகின்றனர். karthika என்ற முகநூல் பக்கம் இவ்வாறு பதிவிடுவது முதல் முறையல்ல. இதற்கு முன்பாக ஒரு சீரியல் நடிகையின் புகைப்படத்தை பதிவிட்டு பாலியல் குற்றவாளியை ஆணுறுப்பில் சுட்ட பெண் அதிகாரி என தவறான செய்தியை பதிவிட்டு ஆயிரக்கணக்கில் லைக், ஷேர் பெறுகிறார்.

மேலும் படிக்க : சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்தவனின் ஆணுறுப்பை சுட்ட போலீஸ் | செய்தி உண்மையா ?

அடுத்ததாக, அனாதை இல்லத்தில் இருக்கும் எனக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்து சொல்ல யாருமே இல்லை நீங்களாவது வாழ்த்தி ஒரு ஷேர் பண்ணுங்க நண்பர்களே எனக் கூறி ஒரு பெண்ணின் புகைப்படத்தை பகிர்ந்து விடுகின்றனர். இதுபோன்ற செய்திகள் உண்மையாக இருக்க வாய்ப்பே இல்லை என தெரியாமல் பகிர ஒரு கூட்டம் இருக்கிறது. ஆனால், பரவுவது என்னமோ ஏதும் அறியாத அந்த பெண்னின் புகைப்படம். இப்படி ஆயிரக்கணக்கான புகைப்படங்கள், பதிவுகள் முகநூலில் ஆக்கிரமித்து உள்ளது.

இந்த ஏழை பெண்ணை பிடிக்குமா, வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்த ஜோடிகள், கருப்பா இருக்கிறேன் என்னையெல்லாம் உங்களுக்கு பிடிக்குமா பிரண்ட்ஸ் என ஓராயிரம் பதிவுகள். இப்படி பரவும் பதிவுகளை ஒருவர் மட்டும் நினைத்தால் தடுக்க முடியுமா ?

ஆனால், அந்த பதிவை பார்க்கும் நபர்கள் நினைத்தால் அதனை சரி செய்ய முடியும். பதிவை மட்டும் பார்க்காமல், அந்த பதிவில் இருக்கும் பிழைகளை காணுங்கள், ஆதாரம் கேளுங்கள், பொய்யான தகவல் என்றால் கமெண்டில் பதிவு செய்யுங்கள். சிலராவது பார்த்து தெரிந்து கொள்வார்கள். பொய்யான தகவல்களை பரவும் முகநூல் பக்கங்கள், கணக்குகளை ரிப்போர்ட் அடியுங்கள்.

போலியான தகவல்கள் வைத்து அரசியல் பதிவுகளை பதிவிடுபவர்களுக்கு இணையாக லைக், ஷேர்க்காக போலியான செய்தியை வைத்து சமூக ஊடகங்களில் பதிவிடும் கும்பலும் அதிகமாய் இருக்கிறது. இங்கு போலி பரவும் அளவிற்கு உண்மையும், விழிப்புணர்வும் அதிகம் மக்களிடையே சென்றடைவதில்லை. எனினும், முடிந்த வரை அனைவருக்கும் இப்படியெல்லாம் கூட செய்கிறார்கள் என எடுத்துக் கூறுங்கள்.

Please complete the required fields.




Back to top button
loader