ஹண்டா வைரஸ் பற்றிய உண்மைகள்.. அச்சம் கொள்ளத் தேவையில்ல.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய நோவல் கொரோனா வைரசின் தாக்கமும், அச்சுறுத்தலும் இன்னும் அடங்கியபாடில்லை. அதற்குள் ஹண்டா எனும் புதிய வைரஸ் சீனாவில் பரவி ஒருவர் உயிரிழந்ததாக வெளியான செய்திகள் உலகம் முழுவதும் பரவி வருகிறது.
குளோபல் டைம்ஸ் எனும் செய்தியின் ட்விட்டர் பக்கத்தில், சீனாவின் யுனான் மாகாணத்தில் பேருந்தில் பயணித்து நபர் இறந்துள்ளார். அவருக்கு ஹண்டா வைரஸ் இருந்தது தெரிய வந்துள்ளது. ஆகையால், பேருந்தில் உடன் பயணித்த 32 பேரையும் சோதித்து உள்ளதாக செய்தி வெளியாகி இருந்தது. இந்த செய்தி காட்சித்தீயாய் பரவியதால் மக்கள் அச்சமடையவும் செய்கிறார்கள், அதேநேரத்தில் கிண்டல் மீம்ஸ்களும் வைரலாகின்றன. ஆகையால், ஹண்டா வைரஸ் குறித்து விரிவாக காண்போம்.
ஹண்டா வைரஸ் :
ஹண்டா வைரஸ் என்பது புதிய வைரஸ் ஒன்றுமில்லை. இது பல சதாப்தங்களுக்கு முன்பிருந்தே இருக்கிறது மற்றும் கோவிட்-19 போன்று மனிதர்களிடையே அதிவேகமாக பரவக் கூடியது அல்ல.
உண்மையில், ஹண்டா வைரஸ் ரோடென்ட் (கொறித்துண்ணிகள்) வகை குடும்பத்தின் உயிரினத்தின் மூலமே மனிதர்களுக்கு பரவுகிறது. மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுவதில்லை. இந்த வைரஸ் பரவல் மற்றும் பாதிக்கப்படுபவர்கள் அரிது. இந்த வைரஸ் கொரிய போரின் போது 190 அமெரிக்க ஜி.ஐ-களை கொன்றதாகக் கூறப்படுகிறது.
ஹண்டா வைரஸ் மூலம் பரவும் ஹண்டாவைரஸ் புல்மோனரி சிண்ட்ரோம் (HPS) எனும் பொதுவான நோயை அமெரிக்காவில் கண்டறிந்தனர். HPS முதலில் 1993-ம் ஆண்டில் அமெரிக்காவில் அறியப்பட்டது. அது தொடர்பான ஆராய்ச்சியில், 1959-ம் ஆண்டிலேயே வைரசின் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
கிழக்கு ஆசியா, ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் ஹண்டா வைரசால் ஏற்படக்கூடிய Hemorrhagic fever with renal syndrome (HFRS) எனும் இரண்டாம் டைப் நோய் அறியப்பட்டது.
2009-ம் ஆண்டில் ncbi தளத்தில், இந்தியாவில் ஹண்டாவைரஸ் நோய் தொற்றின் வழக்கு குறித்து வெளியிட்ட தகவல். ஹண்டா வைரஸ் இந்தியாவில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியாக தரவுகள் இல்லை.
பரவும் முறை & அறிகுறிகள் :
ரோடென்ட் வகை உயிரினத்தின் மூலமே மனிதர்களுக்கு ஹண்டா வைரஸ் பரவுகிறது. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சிடிசி) படி, ” தொற்றுள்ள கொறித்துண்ணிகளின் சிறுநீர், மலம் மற்றும் உமிழ்நீர் மூலமாகவும், அவை கடிப்பதன் மூலமாகவும் கூட ஹண்டா வைரஸ் பரவுகிறது ” எனத் தெரிவித்து உள்ளனர்.
ஹண்டா வைரஸ் வெகு சீக்கிரத்தில் மனிதர்களை தாக்குவதில்லை. அரிதானவையாக பார்க்கப்படுகிறது. எனினும், நோய் தாக்கியவர் உடனடியாக கண்டுபிடித்து சிகிச்சை பெறாவிட்டால் நோயாளிகள் இறக்க நேரிடும். அதுதான் சீனாவில் நிகழ்ந்து உள்ளது.
சில நாட்களில் மட்டுமே பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு எச்.பி.எஸ்(HPS) நோயை கண்டறிவது கடினம். எனினும், கொறித்துண்ணிகள் அதிகம் கொண்ட பகுதிகளில் இருப்பவர்களுக்கு காய்ச்சல், தசைவலி, உடல் சோர்வு, மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் தென்படும்.
ஹண்டா வைரசிற்கு தடுப்பு மருந்தினை மேம்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. 2019-ம் ஆண்டு ஜூலை ncbi இணையதளத்தில் ” HPS ” மற்றும் ” HFRS ” நோய்க்கான தடுப்பு மருந்துகளுக்கு FDA ஒப்புதல் இல்லை என்றே கூறப்பட்டுள்ளது. அதேபோல், ஹண்டா வைரசிற்கான தடுப்பு மருந்துகளுக்கு உலக சுகாதார மையமும் ஒப்புதல் அளித்துள்ளதாக தரவுகள் கிடைக்கவில்லை.
ஹண்டா வைரஸ் கொறித்துண்ணி வகை உயிரினங்கள் மூலமே பரவுகிறது. மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுவதில்லை. ஆகையால், ஹண்டா வைரஸ் குறித்த தேவையற்ற அச்சத்தை உருவாக்க வேண்டாம்.
Proof links :
Hantavirus infection: a case report from India.
Progress on the Prevention and Treatment of Hantavirus Disease
Hantaviruses: An emerging public health threat in India? A review
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.