This article is from Dec 12, 2018

உஷார்! இணையத்தை ஆக்கிரமிக்கும் போலி மருத்துவம்.

மதிப்பீடு

நவீன மருத்துவம் வேண்டாம் எனக் கூறுபவர்கள் முதன்மையாக எடுத்துரைப்பது இயற்கையான வாழ்வியலில் இருந்தவரை நோய் நொடியின்றி வாழ்ந்தோம், தற்போதைய மருத்துவத்தால் உடல் ஆரோக்கியம் கெடுகிறது மற்றும் பலன்கள் ஏதுமில்லை. ஆகையினால், அனைவரும் இயற்கை மருத்துவத்தை பயன்படுத்துவோம் என சூளுரைப்பார்கள்.

குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் நோய்களுக்கான இயற்கை வழியிலான தீர்வுகள் எனக் கூறும் பதிவுகளை காணாதவர்கள் யாருமிலர். தலைவலி, காயங்களுக்கான மருந்துகளில் தொடங்கி புற்றுநோய், இதய நோய் வரையிலான பலவற்றிக்கும் இயற்கை தீர்வு, வீட்டில் நீங்களே முயற்சிக்கலாம், முன்னோர்கள் விட்டு சென்ற தீர்வு என பேசுவதையும், பதிவிடுவதையும் காண முடிகிறது. மக்களும் இணையத்தில் மருத்துவ அறிவுரைகளை தேடுகின்றனர்.

சமூக வலைத்தளங்கள் பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல் ஆரோக்கியம் சார்ந்த அறிவுரைகளை யார் வேண்டுமானாலும் வழங்கக் கூடிய இடமாக அமைந்து விட்டது. அப்படி சமூக வலைத்தளங்களில் கூறும் மருத்துவ அறிவுரைகளைப் பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொண்டு அதனை பயன்படுத்தியும் பார்க்கின்றனர். அவை அனைத்தும் அங்கீகரிக்கப்படாதவை.

இவ்வாறு முயற்சிப்பது உடலுக்கு எத்தகைய ஆபத்தை விளைவிக்கும் என்பதை பலரும் அறியாமல் உள்ளனர். சமூக வலைத்தளம் போலியான செய்திகளின் உறைவிடமாக மாறியதையும் அறியாமல் தாங்கள் காணும் செய்திகள் யாவும் உண்மை என நினைத்து பகிர்கின்றனர். அவற்றின் உண்மை தன்மையை யாரும் அறிய முற்படுவதில்லை.

புற்றுநோயை யாராலும் குணப்படுத்த முடியாது எனக் கூறுகிறார்கள் கீழே கொடுக்கப்பட்ட மருந்து முறையை முயற்சித்தால் நிச்சயம் குணமடையும் என்பார்கள். இன்னும், சிலர் இது போன்ற செய்தியுடன் புற்றுநோய் குணப்படுத்தலான இம்முறையை மருத்துவர்கள் கூட ஏற்றுக் கொண்டு உள்ளனர் என்றும் கூறுவர். இணையத்தில் வழங்கப்படும் தவறான ஆரோக்கிய அறிவுரைகளை நாங்கள் பயன்படுத்தி உள்ளோம், பலனுள்ளது அல்லது குறிப்பிட்ட சுகாதார அமைப்புகள், WHO போன்றவைகள் அங்கீகரித்த ஒன்று எனக் கூறுவர். இயற்கை மருந்துகள் மட்டுமின்றி மாத்திரைகளும் பரிந்துரை செய்யப்படுகின்றன.

இணையத்தில் பரவும் ஆரோக்கிய அறிவுரைகளில் பெரும்பாலானவை தவறான அறிவுரைகளே என ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.

Massachusetts Institute of Technology வெளியிட்ட ஆய்வறிக்கையில் சமூக வலைத்தளங்களில் நாம் உண்மை என நினைத்து பகிர்வதில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை தவறான தகவல் என்கின்றனர். இங்கிலாந்தின் பொது சுகாதாரம், இணையத்தில் பரவும் உடல்நலம் சார்ந்த போலியான அறிவுரைகள் பற்றி அறிய மேற்கொண்ட முயற்சியில், கடுமையான நோய்களின் அறிகுறிகள் சார்ந்த தேடலானது கடந்த 3 ஆண்டுகளை விட தற்போது 9000 மடங்கு அதிகரித்து உள்ளது என்கிறது.

சில உடல்நலத்திற்கான ஆரோக்கிய அறிவுரைகள் மசாலா உடன் ஓர் கதையை சேர்த்து இடம்பெறுவதை படித்தாலே புரிந்து கொள்ளலாம். பல ஆண்டுகளுக்கு முன்பாக இருந்தே ஈமெயில் மூலம் கூட தவறான ஆரோக்கியம் சார்ந்த அறிவுரைகள் அல்லது மருந்துகள் குறித்த எச்சரிக்கை பதிவுகள் பரவி வருகின்றன.

நோய்களுக்கான மருந்துகள் என்பது மட்டுமல்லாமல் உடல் எடைக் குறைக்க, அதிகரிக்க, காயங்களுக்கான மருந்து, ஏன் யாரும் அறியாத சமீபத்தில் உண்டான வைரஸ் தாக்குதலுக்கு கூட மருந்துகள் மற்றும் அறிவுரை வழங்குவர். இவை பெரும்பாலும் தவறான செய்திகளே.

சமீபத்தில் கேரளாவில் பரவிய நிபா வைரஸிற்கு மருந்து என ஓர் மருந்தினை பயன்படுத்த சொல்லிய படமானது அதிகம் பரவியது. அவை தவறான ஒன்று என நாம் கூறியிருந்தோம். இவ்வாறு சமூக வலைத்தளத்தில் பரவும் மருந்தினை அருந்துவதால் பக்க விளைவுகள் அல்லது உயிருக்கே ஆபத்தாகவும் நேரலாம்.

இந்தியாவில் சமூக வலைத்தளங்களில் தவறான மருத்துவ அறிவுரைகள் அனைத்து தரப்பு மக்களாலும் நம்பப்படுகிறது. இதனை மருந்துவர்கள் கண்டிக்கவும் செய்கின்றனர். Youtube-ல் அறிவுரைகளை பெற்று வீட்டில் பிரசவம் பார்க்கப்பட்ட பெண்கள் இறப்பதையும் நாம் பார்த்து தான் வருகிறோம். பெண்கள் பயன்படுத்தும் நாப்கின் கூட பாதிப்பை ஏற்படுத்தும் என தங்கள் விருப்பத்திற்கு கூறி விடுகின்றனர்.

இந்திய மக்கள் தொகை 120 கோடியை தாண்டிச் செல்கிறது. அனைவருக்கும் மருத்துவம் கிடைக்கிறதா என்றால் அவை கேள்விக்குறியாக இருக்கலாம். 100 கோடி மக்களுக்கு 1 கோடி என்ற விகிதத்தில் மருத்துவர்கள் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும், நகர்ப்புறங்கள், கிராமங்களில் கூட மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

இதுபோன்ற தவறான மருத்துவ அறிவுரைகளை நன்கு படித்த மக்கள் கூட நம்புகின்றனர் என்பதே வேதனையான ஒன்று. ஒரு போலியான செய்தியால் எங்கோ ஒரு இடத்தில் உயிர் பலி ஏற்படுகிறது என்பதை உணர வேண்டும். பகிர்வதற்கு முன்னர் குறைந்தபட்சம் அந்த செய்தி உண்மையா என்றாவது கேட்டறிந்து பகிருங்கள்.

மருத்துவம் சார்ந்த பதிவுகளை பகிர்வதை தவிர்க்கவும், எத்தகைய நோயாக  இருந்தாலும் அல்லது உடல்நலம் சார்ந்த அறிவுரைகளை மருத்துவர்களிடம் பெறுங்கள்.

போலியான செய்திகள் மசாலா கலந்த பால் போன்று சுவை மிகுந்த ஒன்றாக இருக்கும். ஆனால், உண்மைச் செய்திகள் சுக்கு காப்பி போன்று குடிப்பதற்கு கொஞ்சம் பிடிக்காமல் இருந்தாலும் அவை நம் அனைவருக்கும் நன்மையை அளிக்கும்.

 

Fake health advice forwards a new headache for doctors

Why most health news is fake news

Please complete the required fields.
Back to top button
loader