This article is from Mar 23, 2021

அதிமுக வெற்றி என்ற போலி கருத்துக்கணிப்பை நம்ப வைக்க போலி ட்விட்டர் கணக்கு

டெமாக்ரசி நெட்வொர்க் மற்றும் உங்கள் குரல் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் 122 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என வெளியாகி இருப்பதாக செய்தி ஊடகங்கள், அதிமுக அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம், ஐடி விங், வலதுசாரி ஆதரவாளர்கள் என பலரும் பகிர்ந்து கொண்டிருந்தனர்.

விரிவாக படிக்க : அதிமுக கூட்டணி முந்துவதாக வெளியான போலி கருத்துக் கணிப்பு.. மறுத்த டெமாக்ரசி டைம்ஸ் நெட்வொர்க் !

இதற்கிடையில், அந்த கருத்துக் கணிப்பே போலியானது என நாம் ஃபேக்ட் செக் கட்டுரை ஒன்றை (மார்ச்22) வெளியிட்டோம். டெமாக்ரசி  டைம்ஸ் நெட்வொர்க் வெளியிட்ட மறுப்பு அறிக்கை, கருத்துக் கணிப்பு குறித்து தினமணி இணையதளத்தில் வெளியான செய்தியே நீக்கப்பட்டதை குறிப்பிட்டு இருந்தோம்.

டெமாக்ரசி நெட்வொர்க் மற்றும் உங்கள் குரல் எனும் பெயரில் வெளியான கருத்துக் கணிப்பு  போலியானது என நாம் கட்டுரை வெளியிட்ட பிறகு, டெமாக்ரசி நெட்வொர்க்  எனும் பெயரில் வெளியான ட்விட்டர் பதிவுகள் இருப்பதாகவும், நாம் வெளியிட்டது டெமாக்ரசி டைம்ஸ்  நெட்வொர்க் என நம்முடைய பதிவின் கமெண்ட்களில் பகிர்ந்து வருகின்றனர்.

டெமாக்ரசி நெட்வொர்க் எனும் பெயரில் உள்ள ட்விட்டர் பக்கத்தை ஆராய்கையில், அந்த பக்கமே நாம் கட்டுரை வெளியிட்ட மார்ச் 22-ம் தேதியன்றே உருவாக்கப்பட்டு பதிவுகள் வெளியாகி இருக்கிறது. மேலும், அந்த பக்கத்தில் பிற செய்தி மற்றும் சமூக வலைதளங்களில் பரவிய அட்டவணை படத்தையே பகிர்ந்து இருக்கிறார்கள். தாங்கள் எடுத்த கருத்துக் கணிப்பின் பிடிஎஃப் தொகுப்பு போன்ற எதையும் பதிவிடவில்லை.

Archive link 

இந்தியாவின் முன்னணி சந்தை ஆராய்ச்சி மற்றும் கருத்துக் கணிப்பு முகமைகளில் ஒன்று  எனக் கூறிக் கொள்ளும் இந்த அமைப்பு சமூக வலைதளத்திலே இல்லை என்றுக் கூறிக்கொள்கிறார்கள். இவர்களுக்கென சமூக வலைதள பக்கமோ, இணையதளமோ இல்லை.

Archive link 

இதைவிட, ” இவர்களுக்கு 6 பாலோயர்களே உள்ளனர். தங்களை இந்தியாவின் முன்னணி நிறுவனம் எனக் கூறுகிறரர்கள். இதற்கு முன்பு இவர்களை பார்த்து உள்ளீர்களா ” என ட்விட்டர் வாசி ஒருவர் தேர்தல் கருத்துக் கணிப்பை வெளியிடும் சி-வோட்டர் அமைப்பின் நிறுவனரும், சிஇஓ-வும் ஆகிய யஸ்வந்த் தேஸ்முக் அவர்களை டக் செய்து கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு அவர் ” தற்போது வரை இல்லை ” என பதில் அளித்து இருக்கிறார்.

டெமாக்ரசி நெட்வொர்க் ட்விட்டர் பக்கத்தை பின்தொடருபவர்கள் மற்றும் ட்வீட் பதிவுகளை பகிர்ந்தவர்கள் யாரென என ஆராய்ந்து பார்த்தால், அதிமுக மற்றும் பாஜக பெயரில் உள்ள ட்விட்டர் பக்கங்களே அதிகம் உள்ளன. ஒரு கருத்துக் கணிப்பை நடத்தும் முன்னணி நிறுவனத்தின் பக்கத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை.

இதற்கிடையில், கருத்துக் கணிப்பை வெளியிட்டது உங்கள் குரல் எனும் அமைப்பு என யூடர்ன் தரப்பிற்கு பதற்றத்துடன் ஒருவர் பேசிய அழைப்பும் வந்தது. இப்படி செய்பவர்கள் யாரும் தகுந்த ஆதாரத்தை அளிக்கவில்லை என்ற ஒற்றை வரியே உண்மை எதுவென தெளிவாய் புரிய வைக்கிறது.

Please complete the required fields.




Back to top button
loader