This article is from Sep 30, 2018

யார் யார் எந்த வம்சம்.. Genealogy அறிவீர்களா ?

நம் முன்னோர்கள் யார் என தெரிந்து கொள்வதில் எல்லோருக்கும் ஒரு ஆர்வம் இருக்கும். நம் முன்னோர்கள் யார் என நம் தாத்தா பாட்டிகளிடம் கேட்போம், அக்கம் பக்கத்தில் விசாரிப்போம் கொஞ்சம் முயற்சித்தால் தாத்தாவின் அப்பா, அவருடைய அப்பா என சுலபமாக இரு தலைமுறைகள் வரை செல்லலாம். ஒரு தலைமுறை என்பது முப்பது வருடங்கள், தந்தைக்கு தாத்தாவின் அப்பா பெயர் தெரிந்து இருக்கும், அவர் தாத்தா அல்லவா? தாத்தாவிற்கு அவரது தாத்தாவின் பெயர் தெரியும் இப்படியே சராசரியாக ஒரு மூன்று முதல் நான்கு தலைமுறை வரை நம் முன்னோர்களின் பெயர், சரித்திரத்தை தெரிந்து கொள்ளலாம், அதற்கு பின் தாத்தாவின் நியாபகத் திறன், எழுதி வைத்த ஆவணங்கள் போன்றவையே அவர்கள் முன் வாழ்ந்தவர்கள் பற்றிய விசயங்களை தெரிவிக்க இயலும்.

ஒரு நான்கு தலைமுறை என்பது சராசரி, அதில் நூற்று இருபது வருட சரித்திரம் அதற்கு முன் செல்லும் பொழுது சிறிது கவனமாக இருக்க வேண்டும்.

சில கலாச்சாரங்களில் குடும்ப நபர்களின் பெயர்களை ஏடுகளில் எழுதி வைப்பது நடைமுறை, உதாரணத்திற்கு சீனர்கள் சீனாவில் கிறிஸ்து பிறப்பதற்கு ஐநூறு வருடங்கள் முன் வாழ்ந்த கண்பூசியஸ் வழியில் வந்தவர்கள் சுமார் 86 தலைமுறைகளை 2500 வருடங்களாக எழுதி வைத்ததே உலக சாதனையாக கருதப்படுகிறது.

நான் முயற்சித்த வரை தாய் வழியில் நான்கு தலைமுறை அதற்கு பின் தரவுகள் இல்லை, தாத்தா பெயரை பேரனுக்கு வைப்பது என 

பெரிய மாறுதல்கள் இல்லாமல் சலிப்பாக இருந்ததாலும், ஆதாரங்கள் எதுவும் பெரிதாக இல்லாத காரணத்தால் மேலும் செல்லவில்லை. நான்கு தலைமுறைகள் அத்தோடு நிறுத்தி கொண்டேன். 

ஆனால் கேரள ராஜா மார்த்தாண்ட வர்மாக்கும் எனக்கும் சம்பந்தம் உண்டா? இல்லை ராஜராஜ சோழன்? என எல்லோரையும் போல யோசித்ததுண்டு.
கண்பூசியஸ் குடும்பத்தில் வந்தவர்கள் அவர்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை எழுதி ஆவணப்படுத்தினார்கள். இதை ஆங்கிலத்தில் genealogy என்பார்கள். தமிழில் குடும்ப வரலாறு..!!

இதை நாம் ஒரு வகையான விளக்கப்படமாக வரைந்து எழுதினால் அது ஒரு family tree – chart வரை படம். பல கிளைகளை கொண்ட ஒரு மரம், இலைகள் எல்லாம் குடும்ப உறுப்பினர்கள். இப்படி, நீங்களும் உங்களுக்கு ஒரு வரைபடம் தயாரிக்கலாம்

ஒரு காகிதத்தை எடுத்துக்கொண்டு அதில் ஒரு பெட்டியை வரையவும். உங்கள் பெயரை அந்த பெட்டியில் எழுதி இரு கோடுகள் மேல் நோக்கி வரைய வேண்டும் இரு கோடுகளின் முனைகளில் மேலும் இரண்டு பெட்டிகள் வரையவும், ஒரு கோட்டின் முனையில் உள்ள பெட்டியில் தாய் பெயரையும் இன்னொரு பெட்டியில் தந்தை பெயரையும் எழுத வேண்டும். அவர்களது பெட்டியில் இருந்து தலா இரு கோடுகள் என அவர்களது தாய் தந்தை, அதாவது உங்கள் தாத்தா பாட்டி என எழுத வேண்டும். இப்பொழுது மொத்தத்தில் உங்கள் வழியை பின்னோக்கி பார்த்தால், நீங்கள், தாய், தந்தை, இரு தாத்தா பாட்டிகள் என எழு பேர் அந்த படத்தில் இருப்பார்கள்.

மூன்று தலைமுறைகளாக இரு தம்பதியினர் தலா ஒரு குழந்தை என பெற்றால் அந்த வழியில் மொத்தம் ஏழு பேர் இருப்பார்கள். இது ஒருத்தருக்கு மட்டும்.

ஆனால் உண்மையில் அப்படி இல்லை, உங்களுக்கு தம்பி, அண்ணன், அக்காள்கள், தங்கைகள் இருக்கலாம், அல்லது உங்களுக்கு சித்தப்பாக்கள், பெரியப்பாக்கள், சித்திகள், பெரியம்மாக்கள் இருக்கலாம். அல்லது தாத்தா இரு திருமணங்கள் செய்து இருக்கலாம். அவ்வாறெனில் இந்த வரைபடம் அல்லது family tree இன்னும் பல கிளைகளுடன் பெரிதாக இருக்கும்.

இப்படி சுமார் ஒரு முப்பது தலைமுறை பின்னோக்கி சென்றால் உங்கள் தலை மீது மட்டுமே சுமார் 200 கோடி முன்னோர்கள் இருப்பார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உலக மக்கள் தொகையே அவ்வளவு தான். அதெப்படி எல்லாரும் நம் சொந்தக்காரர்களாக இருக்க முடியும்? சாத்தியம் இல்லை.

சரி, இப்பொழுது உங்களுக்கு திருமணம் நடக்கிறது, மனைவியும் இது போல ஒரு family tree கேட்கிறார், அவருக்கும் மூன்று தலைமுறைகள் பின்னோக்கி செல்கிறீர்கள், பெரிதாக ஒரு வரைபடம் வருகிறது. அவருக்கும் 30 தலை முறை பின் சென்றால் 200 கோடி முன்னோர்கள்.

கண்டிப்பாக ஏதோ தவறு எங்கோ உள்ளது என நினைக்க தோனும். இல்லையா..!!

இப்பொழுது இருவரும் உக்காந்து இருவரின் சார்ட்களை ஒன்றாக பார்த்தால் ஒன்று இரண்டு இடத்தில் ” அட இவர் உங்களுக்கும் சொந்தமா?”, ” இவர் எனக்கு ஒன்னு விட்ட சித்தப்பா ” என அதிசயிப்போம். சொந்தத்தில் பெண் எடுத்தால் இந்த அட அதிகம் இருக்கும். ஆக, நம் முன்னோர்களின் எண்ணிக்கை சொந்தத்தில் திருமணம் செய்யும் பொழுது பாதியாக குறையும், உதாரணத்திற்கு அத்தை பெண்ணை மனமுடித்தால் 25% ஆக குறையும். இதன் பெயர் தான் ஆங்கிலத்தில் Pedigree collapse என்பார்கள்.

இதை மனைவிக்கு மட்டும் செய்யாமல் அனைவரும் செய்யும் பொழுது ஒவ்வொருவருக்கும் 200 கோடி மூதாதையர்கள் வருவார்கள். அனைவரின் கிளைகளும் ஒரு வகையில் மற்றொருவரின் கிளையுடன் உரசும், ஒன்றாகும். அப்பொழுது இருவருக்கும் ஒரு பொதுவான மூதாதையர் இருப்பர்.

இது போல உலகில் தற்போது உயிரோடு இருப்பவர்களின் மூதாதையர் எல்லாரையும் கணக்கில் கொண்டால் அனைவருக்கும் பொதுவான ஒருவர் வருவார், அவரின் மரபணுக்கள் பல நம்மில் எல்லோரிடமும் உள்ளது. அதை மரபணு ஆராய்ச்சி, mathematical models, computer simulations, அகழ்வாராய்ச்சி, வரலாறு தரவுகள் என பல ஆதாரங்களை கொண்டு அறியலாம்.

இப்படி பார்த்தால் நம் அனைவரின் மூதாதையர் ஆங்கிலத்தில் MRCA Most Recent Common Ancestor எப்பொழுது வாழ்ந்தார் என பார்த்தால் அவர் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து இருப்பார் என நினைப்போம், இல்லை அவர் சுமார் 5000 முதல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தார்.

அப்படியென்றால் இன்று உயிரோடு இருப்பவர்கள் எல்லாம் ஒரு வகையில் இன்னொருவரிடம் தொடர்புடையவரே, உதாரணத்திற்கு நான் சோழன் வம்சம் என ஒருவர் சொன்னால் Pedigree collapse படி நானும் சோழன் வம்சம்தான் என யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.

சில ஆராய்ச்சியாளர்கள் நாம் அனைவரும் சோழனுக்கு சொந்தகாரர்கள் இல்லை. ஆனால் எகிப்தை கிமு 2589 முதல் கிமு 2566 வரை ஆண்ட, உலக அதிசயம் எனப்படும் கிசா பிரமிட்டை கட்டிய கூபு Khufu என்றொரு மன்னனின் சொந்தங்கள் என வரும் என கூறுகிறார்கள்.

இது வெறும் MRCA மிக அண்மை காலத்தில் வாழ்ந்த நமது மூதாதையர், நம் அனைவருக்கும் தொடர்புடையவர், யார் என யோசித்தால் வருவது.

வெறும் தொடர்பு இல்லாமல் நம் உடலில் இன்னாரின் ரத்தம் என் உடலில் ஓடுகிறது என சொல்ல (உடலில் உள்ள செல்களில் உள்ள மரபணுக்கள் எல்லாம் எங்கு இருந்து வந்தது) பார்த்தால், (ஆண்களின் Y chromosome பெண்களின் mitochondrial DNA) முயன்றால் சில ஆயிரம் வருடங்கள் அல்லாமல் பல ஆயிரங்கள் வருடங்கள் பின்னோக்கி செல்ல வேண்டும். 

நவீன ஆராய்ச்சிகளின் படி  சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆப்ரிக்காவில் வாழ்ந்த ஒரு தம்பதியினரின் மரபணுக்களே நம் அனைவரின் உடலில் உள்ளது.

நாம் இன்னும் பின்னோக்கி செல்லலாம், சென்றால் உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் ஒரு நானூறு கோடி ஆண்டுகளுக்கு முன் ஒரு சின்ன புள்ளியில் இணைக்கலாம்.

நான் சோழன் வம்சம்டா ” , ” என் உடலில் ஓடுவது சோழ ரத்தம்டா ” என எவரும் வீடியோ போட்டால் கண்டுக்காமல் விடுவது உசிதம், ஏன் என்றால் அவன் அவ்வம்சம் என்றால் SO ARE WE.

ஆனால் அதை வைத்து DISCRIMINATION செய்தால் சட்டையை பிடித்து GENEALOGY பற்றி சொல்லி திருத்தலாம்..

Please complete the required fields.




Back to top button
loader