பிரபலங்களின் மீதான அதீத கொண்டாட்டம், அதீத வசை.. ரசிகர்கள் சிந்திக்க வேண்டும் !

விவசாயப் பிரச்சனையொட்டி பல்வேறு விதமான கருத்துக்கள் வருவதை பார்க்க முடிகிறது. திரை நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். அவர்களின் கருத்துக்களால் பல்வேறு விவாதங்களும் கிளம்பி இருக்கிறது.
பல்வேறு விவாதங்களில் தனிநபர் ஒருவரின் கருத்துக்கு அத்தனைப் பெரிய ஆதரவும், பெரிய அளவில் எதிர்ப்பும் ஆகிய இரண்டும் இருக்கவே செய்கிறது. இவ்விரண்டையும் பார்க்கும் வேளையில், நாம் ஓர் கேள்வியை முன்வைக்க வேண்டி இருக்கிறது. ஒரு ரசிகன் தனக்கு பிடித்த சினிமா நட்சத்திரத்தை அல்லது விளையாட்டு வீரரை எப்படி பார்க்கிறான், அவன் பார்க்கிற விதம் சரியானதாக இருக்கிறதா எனும் கேள்வியை இந்நேரம் எழுப்ப வேண்டி இருக்கிறது.
அதீத கொண்டாட்டம் அல்லது அதீதமான வசை என இரண்டையும் ஒரு நபர் மீது வைக்கிறோம். அந்நபரின் கருத்து திடீரென நம் முகத்தில் அறைந்தார் போல் இருக்கிறதா அல்லது எப்படி எதிர்கொண்டு இருக்க வேண்டும் என்பது ரசிகன் தன்னுடைய அந்த தனிநபரை கொண்டாடுகிற விதத்தில் இருந்தே இக்கேள்வி வருகிறது.
சச்சின் எனும் விளையாட்டு வீரர் பல செஞ்சுரிகளை அடிக்கும் போது அவரை நாம் கொண்டாடுவதும், அதேநேரத்தில் தனிநபராக அவர் எப்படி இருப்பார் என நமக்கு தெரியாதது என்பதை நாம் உணராததுமே இதில் இருக்கும் சிக்கலுக்கு முதல் காரணம்.
சச்சின் உடைய விளையாட்டு சாதனைகளுக்காக, விளையாட்டு நுணுக்கங்களுக்காக கொண்டாடலாம், விளையாட்டில் வளர வளர வாழ்த்தலாம், அது தவறில்லை. ஆனால், ஒரு ரசிகன் சச்சின் என்றாலே நல்லவர், அவர் செய்வதெல்லாம் சரி, அவர் சொல்வதெல்லாம் சரியாகவே இருக்கும், அவர் மக்களின் நாயகர் என்றும் முடிவெடுக்கின்ற அந்த தருணம் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டியது. தனிநபரின் அந்த கொண்டாட்டம், அந்த நபரை கொண்டாடித் தீர்க்கிற அந்த பழக்கமே கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டியது அவசியம் .
ஏனென்றால், ஒரு திரை நட்சத்திரத்தின் நடிப்பை தான் நாம் ரசிக்க வேண்டுமே தவிர, திரை நட்சத்திரம் தனிப்பட்ட வாழ்விலும் நேர்மையானவராக, தூய்மையானவராக, நாட்டை மீட்கக்கூடிய அனைத்து வல்லமையும் பொருந்தியவராக நாம் உருவகப்படுத்திக் கொண்டு, அவரே என் தலைவர், அவரே என் உயிர், அவரால் தான் இந்த நாட்டை மீட்க முடியும் என நம்புகின்ற இடமே மோசமானது.
உன் அரசியல் நிலைப்பாடு என்ன, மக்களுக்காக அவர் செய்கிற சேவை என்ன என்ற எந்தவிதமான ஆலோசனையும், கண் நேராக பார்க்காத ஆதாரமும் இல்லாமல் ஒரு ஆதர்சன் நாயகன் என்கிற இடத்தில் ஒரு பெரிய கொண்டாட்டத்தை நாம் வைத்து விடுகிறோம். அதில், அந்த ரசிக மனோபாவம் அவரின் தனிப்பட்ட வாழ்வில், தனிநபராக அவரின் மீதும் வைக்கிற அதீத அன்பும், நம்பிக்கையும் பெரிய சிதைவு என்றே தான் பார்க்க வேண்டும்.
சச்சின் இப்படி பேசிவிட்டாரே, நான் உங்களை எப்படி ரசித்து இருக்கிறேன், நீங்கள் இப்படி செய்வீர்கள் என எதிர்பார்க்கவில்லை என்ற சொல்லே நம் ஏமாற்றத்தின் வெளிப்பாடுதான். அவர் நல்லவர் என்று யார் சொன்னார், இந்த நல்லவர் என்ற மனோபாவம் அல்லது அவர் சொல்லுகின்ற கருத்து, இப்படித்தான் இருக்கும் என்று முன்னாடியே நாம் முடிவு செய்தது எதனால் ?. அவர் சரியான நபராக தான் இருப்பார் என்று நமது மனதிற்குள் ஒலித்த செய்தி எப்படியானது. அரசியலாக அவரை பிரித்து பார்த்து இருப்போமா.
கடந்த காலத்தில் அவர் ஒரு எம்.பி. அந்த எம்.பி முறையாக நாடாளுமன்றத்திற்கு செல்லாத, கேள்விகளை எழுப்பாத எம்.பி. அப்படி மிக மோசமாக நாடாளுமன்றம் சென்ற அவர் மக்களுக்காக குரல் கொடுக்கின்ற வாய்ப்பை அத்தனை பெரிய கொண்டாட்டத்திற்கு உள்ளான மனிதர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதுதான் அவரது அரசியல். வெளிநாட்டில் இருந்து அவருக்கு பரிசாக கிடைத்த காருக்கு சரியாக வரி கட்டவில்லை என்ற ஒரு சிக்கல் வந்தது. அதற்காக அவர் பல்வேறு விசயங்களை கையாண்டார். அதெல்லாம் கேள்விக்கு உள்ளானது. அதுதான் அவர். அவரை அரசியலாக நாம் பிரித்து பார்த்தோமா என்றால் ” இல்லை “.
எப்போதுமே ” Purpose or Person ” இரண்டில் எது நாம் பேசப்பட வேண்டியது என்பதை நாம் யோசிக்க வேண்டும். ஒருநபரைப் பற்றி நாம் பேச வேண்டுமா அல்லது அந்நபரின் பிரச்சனைகளை, அவருடைய கருத்துக்களை பேச வேண்டுமா என்றால் நிச்சயமாக அவரின் கருத்தைத்தான் பேச வேண்டும்.
ஒரு நபர் என்பதாலேயே அவர் சொல்வதெல்லாம் சரி என்கிற ரசிக மனோபாவத்தை கழட்டி வைத்து விட்டு, அதீதமாக ஒரு நபரை கொண்டாடுகின்ற பழக்கத்தை கழட்டி வைத்து விட்டு அனைவருக்குமான கேள்விகளுக்கு நாம் யோசிக்க வேண்டிய தருணம் இது. அப்படித்தான் அனைத்து நடிகர்கள், பிரபலங்களை பார்க்க வேண்டும் அதுதான் சரியாக இருக்கும்.
- ஐயன் கார்த்திகேயன்