This article is from Dec 01, 2021

விவசாயிகள் போராட்டத்தில் இறந்தவர்களின் தரவு இல்லை, ஆகையால் இழப்பீடு கேள்வி இல்லை – பாஜக அரசு !

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் ஓர் ஆண்டாக விவசாயிகள் போராடி வந்த நிலையில், அந்த 3 வேளாண் சட்டங்களும் நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறப்பட்டது.

2020 நவம்பரில் இருந்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்து உள்ளதாக எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகள் போராட்டத் தலைவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக மக்களவையில், ” போராட்டம் தொடர்பாக விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை. தேசியத் தலைநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களின் போது உயிரிழந்த விவசாயிகளின் எண்ணிக்கை குறித்த தரவு, உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க அரசு முன்மொழிகிறதா, அதற்கான விவரங்கள் மற்றும் இல்லையென்றால் அதற்கான காரணங்கள் ” உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதற்கு வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ” இந்த விவகாரத்தில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்திடம் எந்த பதிவும் இல்லை, எனவே கேள்வி(இழப்பீடு) எழவில்லை ” என எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து இருக்கிறார்.

இதேபோல், 2021 ஜூலை மாதம் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதும், போராட்டத்தில் இறந்த விவசாயிகள் குறித்த தரவுகள் இல்லை என வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறி இருந்தார். ஆனால், பஞ்சாப் மாநில அரசு 220 விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் இறப்புகளை சரிபார்த்து அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10.86 கோடி இழப்பீடு தொகை வழங்கியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

நவம்பர் 20-ம் தேதி தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், டெல்லி எல்லையில் நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்த 750 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்தார். மேலும், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.25லட்சம் வழங்க வேண்டும் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்றும் ஒன்றிய அரசுக்கு கோரிக்கையும் வைத்து இருந்தார்.

போராட்டம் மற்றும் மாநிலங்களின் தேர்தல் எதிரொலியால் 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெற்றுள்ளது பாஜக அரசு. இதற்காக, ஓராண்டில் நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என போராட்ட அமைப்பு மற்றும் எதிர்க்கட்சிகள், மாநிலக் கட்சிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் தரவுகள் இல்லை என்ற பதிலையே பாஜக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

links : 

AGITATION ON FARM LAWS

telangana announces rs3 lakh compensation each for families of 750 farmers who died during year long protest 

As Centre says no record, 220 deaths during ongoing farm protests, reveals Punjab govt data

Please complete the required fields.




Back to top button
loader