This article is from Nov 06, 2020

வெளிநாட்டு முதலாளிகளிடம் விற்கப்படும் பாரம்பரிய மருத்துவம்?| 100% அந்நிய நேரடி முதலீடுக்கு அனுமதி.

1995-ம் ஆண்டு, கொலம்பிய நாட்டின் WR Grace நிறுவனம் தனது “Neemix” பூச்சிக் கொல்லி மருந்திற்கு ஐரோப்பிய காப்புரிமை அலுவலகத்தில் (EPO) காப்புரிமை கேட்டு விண்ணப்பித்தது.

Neemix என்பது வேப்பங்கொட்டையிலிருந்து தயாரிக்கப்படும் ஓர் உயிரியல் பூச்சிக்கொல்லி. இயற்கை முறை தயாரிப்பு. சற்றேக்குறைய 200 பூச்சி வகைகளிடம் இருந்து பயிர்களுக்கு பாதுகாப்பு தருவதாக தனது விண்ணப்பத்தில் அந்த நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. அப்படியான கலவைக்கு அந்த நிறுவனம், காப்புரிமை கோரியது.

காப்புரிமை வழங்கப்படும் நிலையில், “ஐரோப்பிய ஒன்றியத்தின் எந்த நிலத்திலும் வேப்பங்கொட்டையை பூச்சிகொல்லியாக எந்தக் கலவையிலும் பயன்படுத்தக் கூடாது” என்பது தான் அந்த நிறுவனத்திற்கு இந்த விண்ணப்பத்தின் வழி கிடைக்கும் அங்கீகாரம்.

பல்வேறு இந்திய, பன்னாட்டு சேவை அமைப்புகளின் முயற்சிகளுக்கு பிறகு, இது இந்தியர்களின் பாரம்பரிய அறிவு (Prior Existing Knowledge) என்று ஐரோப்பிய காப்புரிமை அலுவலகம் (EPO), அந்த விண்ணப்பத்தினை நிராகரித்தது.

அன்று, இந்த வழக்கை எதிர் கொண்டது யார் தெரியுமா? வந்தனா சிவா தலைமையிலான குழுவில் இடம் பெற்ற அய்யா. நம்மாழ்வார் அவர்கள். சில அமைப்புகளின் தொடர் முயற்சியின் பயனாய், ஒரு மிகப்பெரிய வணிக தாக்குதல் நிறுத்தப்பட்டது.

இன்று அப்படியொரு வணிக படையெடுப்பிற்கான வழியினை இந்திய அரசே திறந்து வைத்துள்ளது. ஆம். உலகின் இரண்டாவது பெரிய பாரம்பரிய ஏற்றுமதி சந்தையான இந்தியாவின் AYUSH (Ayurveda, Yoga & Naturopathy, Unani, Siddha and Homeopathy Medicine) நிறுவனத்தில் நூறு விழுக்காடு அந்நிய நேரடி முதலீட்டை (Foreign Direct Investment – FDI) திறந்து வைத்துள்ளது மத்திய அரசு.

இந்திய பாரம்பரிய அறிவு (Prior Existing Knowledge), இன்று உலகின் சந்தைப் பொருளாகக் கடை விரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கொடிய காலத்தினை, சீனா தனது பாரம்பரிய மருத்துவத்திற்கான (Chinese Traditional Medicine – TCM) சாதகமான சூழலாக மாற்றியது. கடந்த மார்ச் நிலவரப்படி, 92.5% நோயாளிகளுக்கு சீனாவின் பாரம்பரிய மருந்துகளின் வழி சிகிச்சை அளிக்கப்பட்டதாக அறிக்கை கூறுகிறது.

சீன பாரம்பரிய மருத்துவத்திற்கு இந்த கொரோனா காலம் ஒரு பொற்காலம். தனது தனித்தன்மையை நிரூபிக்க ஒரு நல்வாய்ப்பாக இந்த கொரோனா பேரிடர் உதவியிருக்கிறது.

அப்படி என்றால், ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான இந்திய ஆயுர்வேத, யுனானி, இயற்கை முறை மருத்துவம், சித்த மருத்துவம், ஹோமியோபதி (AYUSH) இவற்றிற்கும் இது பொருந்தும் தானே.?

ஆனால் நிலைமையோ தலைகீழ். பொதுவான தொற்றுகளுக்கு தரப்படும் “கபசுரக் குடிநீரைக்” கூட மருந்தாக அங்கீகரிக்க அரசுக்கு போதிய அறிவியல் ஆய்வுகள் இல்லை.

பாரம்பரிய மருந்துக்கு எதற்கு ஆய்வு ? நோய்கள் புதிது. இன்று இருக்கும் அறிவியல் வளர்ச்சி மற்றும் உடலியல் குறித்த விரிவான அறிவு நமக்கு மருத்துவம் குறித்த புதிய தெளிவைக் கொடுத்துள்ளது.

மிக விரிவாக பல கட்டுரையில் விவரிக்க வேண்டிய தலைப்பு எனினும், Evidence Based Medicine (EBM), “ஆய்வு, தரவுகளில் அடிப்படையிலான மருத்துவம்” என்கிற இடத்திற்கு இன்றைய உலக சமூகம் நகர்ந்திருக்கிறது.

அதாவது, அரளி விதையை அரைத்து தின்றால் கொரோனா குறையும் என்கிற புரட்டுகள் இங்கு சாத்தியமில்லை. அதற்கான முறையான ஆய்வுகள் அவசியம். குறைந்தபட்சம், “நோய் எதிர்ப்பாற்றலைக் கூட்டுகிறது” என்பதற்கான முறையான ஆய்வுகளாவது அவசியம்.

சீன பாரம்பரிய மருத்துவம் (TCM), இப்படி பல ஆய்வுகளை நிகழ்த்தி, உலக மருத்துவ சந்தையில் ஒரு தனியிடத்தைக் தக்க வைத்துள்ளது. அப்படியாக, இந்திய பாரம்பரிய மருத்துவங்களுக்கான அங்கீகாரத்தினை அறிவியல்பூர்வமாக வர்த்தக உலகில் பெற, உருவாக்கப்பட்ட அரசு நிறுவனம் தான் ஆயுஷ்.

ஆனால், இங்கு ஆய்வுகள் இன்னும் உலக பார்வைகளுக்கு கொண்டு செல்லும் அளவிற்கு அடர்த்தியாகவில்லை என்பது வருந்தத்தக்கது. இருப்பினும், கிடைத்த வாய்ப்புகளின் வழி, இன்று உலகின் இரண்டாவது பாரம்பரிய மருந்துகளில் ஏற்றுமதி சந்தையாக இந்தியா உள்ளது. கிட்டதட்ட 1,500 மருந்து பொருட்கள் சந்தைப்படுத்த ஏதுவாக நிறைவு நிலையில் உள்ளதாக ஆயுஷ் அறிக்கை கூறுகிறது.

இதைவிட ஆச்சர்யமான தகவல், ஆயுஷ் மருத்துவத்தின் இந்திய சந்தை மதிப்பு 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இருந்தும் ஏன் நம்மால், கொரோனாவிற்கு ஒரு ஆயுஷ் கூட்டு நிறைபலன் (Complete Cure package) சிகிச்சைக் குறித்து “ஏன் உரையாட இயலவில்லை?” என்கிற கேள்வி தொக்கி நிற்கிறது.

இந்த நிலையில் தான், கடந்த 18-மார்ச் நிலவரப்படி, Make In India 2.0-ன் கீழ், 74% தன்னிச்சையான நேரடி முதலீட்டை (அரசின் தலையீடின்றி) ஆயுஷ் சந்தைக்கு திறந்து வைத்துள்ளது. 74-விழுக்காட்டிற்கு மேலான முதலீட்டிற்கு அரசு அனுமதி பெற வேண்டும். ஆக 100 விழுக்காடு நேரடி அந்நிய முதலீட்டிற்கான சந்தையாக “இந்திய பாரம்பரிய மருத்துவம்” மாறியுள்ளது.

அதாவது, நீங்களோ, நானோ கூட, ஒரு முறையான ஆய்வு சூழலில் அந்நிய முதலீடு பெற்று இந்திய பாரம்பரிய அறிவின் (Prior Existing traditional knowledge) மீதான் விரிவாக ஆய்வினைச் செய்ய இயலும்.

சரி. என்ன தவறு? இது ஒரு வகையில் அறிவு பெருக்கம் தானே? வாய்ப்பு தானே? இல்லை. இதுவரை, இந்திய பாரம்பரிய அறிவின் மீது இல்லாத அந்நிய ஆதிக்கம், இன்று முழுமையாக கையகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆயுஷ் சந்தை என்பது வெறும் மருந்துகள் மட்டும் அல்ல. மருத்துவமனைகள், மருத்துவ உபகரணங்கள், மருத்துவ ஆய்வுகள் (Clinical Trials), மருத்துவ சுற்றுலா, மருத்துவ காப்பீடு என எல்லா தளங்களிலும் அந்நிய முதலீடுகள் இனி களமாடும்.

ஒரு நிறைவான உலகத்தர ஆய்வின் வழி, இந்திய மருத்துவ அறிவின் காப்புரிமையை ஒரு அந்நிய நிறுவனத்தால் ருசிக்க முடியும்.

என்ன தவறு? இதனை முழுமையாக புரிந்து கொள்ள காப்புரிமை குறித்த ஒரு சிறு அலசல் தேவை. காப்புரிமை சட்டம் இந்தியாவில் அப்படி ஒன்றும் அழுத்தமாக இல்லை. ஆனால், உலக சந்தையினை, காப்புரிமை தனது இரும்பு கரங்களுக்குள் வைத்துள்ளது.

உலகமயமாக்கலை சீர்படுத்த உதவும் உலக வர்த்தக சபை தான் (World Trade Organization) இந்த அந்நிய நேரடி முதலீடு குறித்த வரைவுகளுக்கு தாய். அதாவது, உலகமயமாக்கலை ஏற்றுக் கொண்ட வளரும் நாடுகள், பின்பற்ற வேண்டிய சட்ட சீர்திருத்தங்களை இந்த வர்த்தக சபை தான் நிர்ணயிக்கும். இப்படி, வர்த்தக சபை, வளரும் நாடுகளின் மீது எரிந்த அம்பு தான் TRIPS ஒப்பந்தம்.

எளிதாகக் கூறுவதென்றால், “உலக வர்த்தக நிறுவனங்களில் முதலீட்டை மதித்து போதிய அளவு ‘அறிவுச் சொத்துரிமை பாதுகாப்பு’ (Intellectual Property protection) வழங்க வேண்டும்” என்பது தான் TRIPS-ன் சுருக்கம்.

அதாவது, ஒரு மருந்தின் “காப்புரிமை” என்பது, “அதன் பயன்பாடுகளை முழுமையாக ஆய்வின் வழி கண்டறிந்த நிறுவனத்திற்கு, “வர்த்தகத்தில் தனியுரிமை” (Exclusive Rights for sale) தர வேண்டும்” என்பதே சபையின் வரையறை.

இதுவே உலக நாடுகள் பலவற்றின் வர்த்தக மொழியில் “காப்புரிமையின்” வரையறையும் கூட.

இதன்படி இந்தியா, வர்த்தகம் சார்ந்த அறிவு சொத்துரிமை ஒப்பந்தத்தினை Trade-Related Aspects of Intellectual Property Rights (TRIPS) 1995-ல் ஏற்று, இந்திய காப்புரிமைச் சட்டத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களைச் செய்துள்ளது. இனிவரும் காலங்களில், இதன்வழி, இன்னும் சட்டங்கள் இறுக்கப்படும் என்பது உறுதி.

இதன் தீவிரத்தினை உணர்ந்து தான், வந்தனா சிவா மற்றும் நம்மாழ்வார் உள்ளிட்டவர்கள் அன்று அந்த வழக்கினை எதிர்கொண்டனர். அந்த காப்புரிமை வழங்கப்படும் பட்சத்தில், நாளை TRIPS வழி, விவசாயத்தில் நேரடி முதலீடு செய்யும் ஏதோவொரு நிறுவனம், நாம் நிலங்களின் இடும் வேப்பங்கொட்டை புண்ணாக்கிற்கு தடைகோர இயலும், என்பதுதான் தொலைநோக்கு.

இப்போது, ஆயுஷ் சந்தை, திறக்கப்படுவதில் இருக்கிற சிக்கல் புரிகிறதா.? ஒரு தெருவோர மரத்தின் உரிமைக்காக போராடிவிட்டு, ஆயிரமாயிரம் செடிகளின் மீதான மரபு அறிவை சந்தை விரித்திருக்கிறோம்.

இந்திய மருத்துவ சந்தை என்பது இரண்டு பகுப்புகளைக் கொண்டது. ஒன்று, நவீன மருத்துவம் (Modern Medicine), மற்றொன்று பாரம்பரிய மருத்துவம் (AYUSH). ஆயுஷ் பகுப்பில், முழுமையான அந்நிய முதலீடு என்பது பல எதிர்கால சிக்கல்களை உள்ளடக்கியது என்பதனை உணர வேண்டும். மரபு அறிவை, முழுமையாக இந்தியா கைக்கொள்வதும், அந்நிய நிறுவனங்கள் கைக்கொள்வதும் ஒன்றல்ல.

வளர்ச்சி என்கிற உலக ஓட்டத்தில், நம்மை நிலைநிறுத்த நாம் சில தளர்வுகள் தர வேண்டும் என்பது எதார்த்தம். ஆனால் நமது முதன்மைகள் (Priorities), பன்னாட்டு நிறுவனங்களில் தேவைக்கு தகுந்தாற்போல் சிதைக்கப்படுவது வளர்ச்சியல்ல.

பன்னாட்டு இயந்திர கரங்களுக்கு நமது பாரம்பரிய அறிவை திறப்பதற்கு முன்னர், காப்புரிமை, அறிவுச்சொத்துரிமை குறித்த நமது எல்லைகளை தெளிவாக வரையறுக்க வேண்டும்.

இல்லையேல், ஒரு நூறு ஆண்டு கடப்பதற்குள் மரபறிவு, முழுமையாக விழுங்கப்பட்டு, புட்டிகளில் மருந்தாக நமக்கே விற்பனைக்கு வரும் என்பதில் எந்தவொரு ஐயமும் வேண்டாம்.

இது குறித்த “முழுமையாக ஒரு விவாதத்தினை, இந்திய பாரம்பரிய அறிவுத் தளத்தில் உருவாக்க வேண்டிய தேவை உள்ளது”, என்பது மட்டுமே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

விவாதிப்போம்.!

– அதீதன்

 

Links : 

W. R. Grace & Co. And the Neemix Patent (a)

India wins landmark patent battle

6 effective traditional Chinese medicines for COVID-19

AYUSH industry may create 26 mn jobs by 2020: Suresh Prabhu

http://www.ihnfworld.com/images/ayush-brochure.pdf

FDI for Make in India

TRIPS and pharmaceutical patents

Please complete the required fields.




Back to top button
loader