இப்போ மாஸ்க் போடணுமா இல்ல போடக்கூடாதா.. ஒன் இந்தியா தலைப்பால் குழப்பம் !

ஒன் இந்தியா தமிழ் இணையதளம் நேற்று(ஜூன் 08), ” முகமூடி அணியாதவர்கள் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி ” என தலைப்பிட்டு நியூஸ் கார்டு ஒன்றை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருக்கிறது.

ஆனால், நியூஸ் கார்டில், முகமூடி அணியாதவர்கள் விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று டிஜிசிஏ தெரிவித்துள்ளது. முகமூடி அணிய மறுப்பவர்கள் விமானத்தில் பயணம் செய்ய தடை செய்யப்படும் லிஸ்ட்டில் சேர்க்கப்படுவார்கள். மறுப்பவர்களை விமானத்தை விட்டு இறங்குமாறும் கூறுவார்கள் ” என இடம்பெற்று இருக்கிறது.
.
இப்படி செய்தியில் உள்ளே ஒன்றையும், தலைப்பில் ஒன்றையும் வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளனர். அதுமட்டுமின்றி, குழப்பமான செய்தியை வெளியிட்டது விமர்சனத்தைப் பெற்று வருகிறது.
.
நாட்டின் சில பகுதிகளில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை மீண்டும் ஏறத் தொடங்கியதால் விமான நிலையங்களிலும், விமானங்களிலும் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை ஏற்க மறுக்கும் பயணிகளை புறப்படுவதற்கு முன்பே விமானத்தில் இருந்து இறக்கி விடலாம் அல்லது கட்டுக்கடங்காத பயணிகளாகக் கருதலாம் என சிவில் ஏவியேசன் ரேகுலேட்டர் டிஜிசிஏ தெரிவித்து உள்ளது.
.
ஜூன் 3-ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம், தொற்றுநோய் பாதிப்பு இன்னும் முடியவில்லை என்பதை நினைவூட்டி கடுமையான நடவடிக்கை எடுக்க தனது உத்தரவில் தெரிவித்து இருந்தது. நினைவுப்படுத்திய போதிலும் பயணிகள் நெறிமுறைகளை பின்பற்ற மறுத்தால் சுகாதார அமைச்சகம் அல்லது டிஜிசிஏ வழிகாட்டுதல்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்து இருந்தது.