பஞ்சுமிட்டாய் தடை : இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் செயற்கை நிறமிகள்.. ஓர் அதிர்ச்சிப் பார்வை !

புதுச்சேரியில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சுமிட்டாய்களில் விதிகளை மீறி ரசாயனம் கலந்திருப்பதாகக்கூறி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சமீபத்தில் பஞ்சுமிட்டாய்க்கு தடை விதித்தார். மேலும் குழந்தைகளுக்கு பஞ்சுமிட்டாய் வாங்கிக்கொடுக்க வேண்டாம் என்றும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையடுத்து, சென்னையில் பொது இடங்களில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சுமிட்டாய்களும் பறிமுதல் செய்யப்பட்டு, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. ஆய்வின் முடிவில், பஞ்சு மிட்டாய்களில் ரோடமைன் பி (Rhodamine B) என்ற புற்றுநோயை உருவாக்கக்கூடிய நச்சுப்பொருள் கலந்திருப்பது உறுதியானது. குறிப்பாக இந்த ரோடமைன் பி நச்சு நிறமி, தொழிற்சாலைகளில், குறிப்பாக ஊதுபக்திகளில் பின் பகுதியில் பச்சை, மஞ்சள், பிங்க் ஆகிய நிறங்களை சேர்ப்பதற்காகவே அதிகளவில் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே புதுச்சேரியைப் போன்றே தமிழ்நாட்டிலும் பஞ்சுமிட்டாய் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக கடந்த 17 ஆம் தேதி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பஞ்சு மிட்டாய் மற்றும் நிறமூட்டப்பட்ட மிட்டாய் வகைகளை அரசு உணவு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்ததில் ரோடமைன் பி (Rhodamine B) எனப்படும் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டம்- 2006 பிரிவு 3(1)(zx), பிரிவு 3(1)(zz)(iii)(v)(viii) &(xi) மற்றும் பிரிவு 26(1)(2)(i)(ii)&(v)-ன்படி தரம் குறைந்த மற்றும் பாதுகாப்பற்ற உணவு என உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம்-2006-ன்படி செயற்கை நிறமூட்டியை கொண்டு உணவுப் பொருட்களை தயாரித்தல், பொட்டலமிடுதல், இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகள் ஆகியவற்றில் பரிமாறுதல் ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாகும். இது குறித்து ஆய்வு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை ஆணையரால், அனைத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், நிறமி கலந்த பஞ்சுமிட்டாய்கே தடை என்றும், வெள்ளை நிற பஞ்சுமிட்டாய்களுக்கு தடை இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார்.

பஞ்சுமிட்டாயில் மட்டும் தான் உணவு நிறமூட்டிகள் (Artificial Food Colors) உள்ளனவா ?

பொதுவாக நாம் உண்ணும் தானியங்கள், காய்கள், பழங்கள், பருப்புகள், அசைவ உணவுகள் அனைத்தும் ஏதோ ஒரு குறிப்பிட்ட நிறத்தில்தான் காணப்படும். இயற்கையான இந்த உணவு நிறமிகள் மனித உடலுக்கு எவ்விதத் தீங்குகளையும், பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை. பீட்ரூட், ராஸ்பெர்ரி மற்றும் சிவப்பு முட்டைக்கோஸ் ஆகியவை சிவப்பு, நீலம் மற்றும் ஊதா நிறங்களின் ஆதாரமான அந்தோசயினின்களைக் (anthocyanins) கொண்டிருக்கின்றன. அனைத்து இலைகள் மற்றும் தண்டுகளில் குளோரோபில்கள் உள்ளன, அவை பச்சை நிறத்திற்கு காரணமாகின்றன. தக்காளி, கேரட் மற்றும் ஆப்ரிகாட்ஸ் (Apricots) பழங்களில் உள்ள கரோட்டினாய்டுகள் மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறங்களை வழங்குகின்றன.

ஆனால் மாறிவரும் இந்த சூழலில் பெரும்பாலும் உணவில் செயற்கையான உணவு சேர்க்கைகளே (food additives) சேர்க்கப்படுகின்றன. இவை உணவு பொருட்களின் சுவையை பாதுகாக்க, அவற்றின் தோற்றம், நிறம், சுவை உள்ளிட்ட பிற குணங்களை அதிகரிக்க உணவில் கூடுதலாக பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் ஒரு உணவின் ஆயுட்காலத்தையும் அதிகநாட்களுக்கு அதிகரிக்க முடிகிறது. டார்ட்ராசின் (Tartracine), மஞ்சள் (sunset yellow), அமராந்த் (amaranth), அல்லுரா சிவப்பு (allura red), குயினோலின் மஞ்சள் (quinoline yellow), நீலம் (brilliant blue) மற்றும் இண்டிகோ கார்மைன் (indigo carmine) ஆகியவை பெரும்பாலும் செயற்கை உணவு நிறமிகளாக பயன்படுத்தப்படுகின்றன. 

இந்த செயற்கை நிறமிகளிலும் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று அனுமதிக்கப்பட்ட உணவு நிறமி, மற்றொன்று அனுமதிக்கப்படாதவை. தடைசெய்யப்பட்ட செயற்கை நிறத்தைப் பயன்படுத்துவது குழந்தைகளின் வளர்ச்சியை அதிகமாக தடுக்கிறது மற்றும் சிறுநீரகம், கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது. மேலும், தடைசெய்யப்பட்ட இந்த சாயங்களால், விரைகள் (testicles), கருப்பைகள் (ovaries) மற்றும் மண்ணீரல் (spleen) மோசமாக பாதிக்கப்படுகின்றன.

ஆரஞ்சு-II (ஆரஞ்சு), ஆரமைன் (மஞ்சள்), ரோடமைன் பி (சிவப்பு), நீலம் விஆர்எஸ் (நீலம்), மலாக்கிட் பச்சை (பச்சை) மற்றும் சூடான்-III (சிவப்பு) ஆகியவை செயற்கை நிறமூட்டிகளில் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக 4-அமினோபிபெனைல், நாப்திலமைன் மற்றும் பென்சிடின் ஆகியவை புற்றுநோய்க்கு காரணமாகின்றன. எனவே, மருந்துகள் அல்லது அழகுசாதனப் பொருட்களில் கூட இந்த நிறங்களைப் பயன்படுத்தினால் பாதுகாப்பானதாக இருக்குமா என்று எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. எனவே இவற்றை உணவில் பயன்படுத்துவது ஆபத்தையே விளைவிக்கும் என்று ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுகிறது.

எனவே பீட்ரூட் செறிவுகள் (beetroot concentrates), அன்னாட்டோ(annatto) , பீட்டா கரோட்டின்( beta-carotene), கொச்சினல் சாறு(cochineal extract), திராட்சை சாறு(grape extract), மிளகுத்தூள்(paprika), ஓலியோரெசின்(oleoresin), மஞ்சள் ஓலியோரெசின் (turmeric oleoresin), லுயெடின்(luetin), பைக்கோசயனின் (phycocyanin) மற்றும் குங்குமப்பூ (saffron) ஆகியவை இயற்கையான மூலங்களிலிருந்து பெறப்பட்டவை. எனவே இத்தகைய இயற்கையான உணவு நிறமிகள், கலப்படம் தடுப்பு சட்டம், 1954 (விதி 26 இன் கீழ்) மற்றும் உணவு கலப்படம் தடுப்பு சட்டங்கள், 1955 & 1999 ஆகியவற்றின் படி இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இவை தவிர உணவுப் பொருட்களில் எட்டு செயற்கை வண்ணங்களைப் பயன்படுத்தவும் FSSAI ஒப்புதல் அளித்துள்ளது. இவை பல்வேறு உணவுப் பொருட்களுக்கு ஏற்ப வெவ்வேறு அளவுகளின் படி பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மஞ்சள் நிறத்திற்கு Suncetylo FCF மற்றும் Tartrazine, சிவப்பு நிறத்திற்கு Panseu-4R, Carmoisine மற்றும் Erythrosine, நீல நிறத்திற்கு Brilliant Blue FCF மற்றும் Indigo Carmine மற்றும் பச்சை நிறத்திற்கு ஃபாஸ்ட் கிரீன் FCF ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. நிறமிகளின் அனுமதிக்கப்பட்ட அளவு Fresh ஆன உணவுகளில் 100 பிபிஎம் (ppm) அளவும், அடைத்து வைக்கப்படும் உணவுகளில் (Canned foods) 200 பிபிஎம் (ppm) அளவும் உள்ளது. 

ஆனால் மீன் வளர்ப்பில் பாக்டீரியா எதிர்ப்புப் பொருளாகவும், சாய தொழில்களிலும் பயன்படுத்தப்படும் லாக்கிட் கிரீன் (malachite green) என்னும் நிறமி இந்தியாவில் கீரைகள், வெண்டைக்காய், வெள்ளரி, பட்டாணி மற்றும் மிளகாய் போன்ற பச்சை நிற காய்கறிகளை கவர்ச்சிகரமாக காட்டுவதற்காக அதிகளவில் சேர்க்கப்படுகின்றன. எனவே இது தொடர்பாக எச்சரித்துள்ள FSSAI, ஒரு பஞ்சுத் துண்டை எடுத்து அதை திரவ பாரஃபினில் ஊறவைத்து, பின்னர் காய்கறியின் மேற்பரப்பில் தேய்த்து பார்க்கும் போது, பஞ்சுத் துண்டு பச்சை நிறமாக மாறினால், இந்தக் காய்கறிகள் மனிதர்கள் சாப்பிடுவதற்கு ஏற்றவை அல்ல என்பதை உறுதி செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

மேலும் உணவுப்பொருட்கள் குறித்து பொய்யான தகவல்கள் குறிப்பிட்டிருந்தாலோ , உணவுப்பொருள்கள் தரமற்றதாக இருந்தாலும், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் உணவில் செயற்கையான நிறங்களோ, சுவையூட்டிகளோ, பிற சேர்மானங்களோ இருந்தாலும் உடனடியாகப் புகார் அளிக்குமாறும் FSSAI வழியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக https://foscos.fssai.gov.in/consumergrievance என்ற இணையதளத்திலும் நேரடியாக புகார் அளிக்கலாம்.

உலக நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள உணவு நிறமிகள் :

உலக அளவில் தடை செய்யப்பட்ட பல உணவு நிறமிகள், இன்றும் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும்.

– ஹைட்ரஜனேற்றப்பட்ட கொழுப்புகள் (Hydrogenated Fats) LDL எனப்படும் கெட்ட கொழுப்பை அதிகரிப்பதோடு மாரடைப்பு, புற்றுநோய், நீரிழிவு மற்றும் உடல் பருமன் அபாயத்தையும் கணிசமாக உயர்த்துகிறது. எனவே ‘hydrogenated’ அல்லது ‘shortening and margarine’ என்று குறிப்பிடப்படும் மூலப்பொருளை கொண்ட உணவு தயாரிப்புகளை பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

–  ஆர்சனிக் (arsenic) கொண்ட கோழி தீவனங்கள், கோழிகளை வேகமாக வளரச் செய்வதோடு, அவற்றின் இறைச்சிக்கும் அதிக நிறத்தைக் கொடுக்கின்றன. மேலும் இவை பாஸ்மதி அரிசிகளில் கலக்கப்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுகிறது.

–   Sunset Yellow, Brilliant Blue, Citrus Red, Amaranth மற்றும் Indigo Carmine போன்ற சில செயற்கை சாயங்கள் குழந்தைகளுக்கு அதிவேகத்தன்மை (hyperactivity), ADD மற்றும் ADHD போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக அமெரிக்க கெமிக்கல் சொசைட்டி கூறுகிறது.

–  புரோமின் என்பது தரைவிரிப்புகள் மற்றும் யோகா படுக்கைகள் ஆகியவை தீப்பிடிக்காமல் இருக்கப் பயன்படும் ஒரு ரசாயனம். இத்தகைய புரோமினேட் செய்யப்பட்ட தாவர எண்ணெய்கள் (BVO), குளிர்பானங்களில் உணவு சேர்க்கைகளாக பயன்படுத்தப்படுகின்றன. 

–  பொட்டாசியம் ப்ரோமேட், ரொட்டி தயாரிப்புகளில் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இவை ஐரோப்பா, கனடா மற்றும் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளன. எனவே அடுத்த முறை ரொட்டி (Breads) வாங்கும் போது, பொட்டாசியம் புரோமேட் பயன்படுத்தப்படவில்லை என்பதை சரிபார்த்து வாங்குவது அவசியமான ஒன்றாகும்.

– புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய Acesulfame-K மற்றும் Aspartame போன்ற செயற்கை இனிப்புகள், அதிகளவில் இந்திய இனிப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன. இவை குடலுக்கு நன்மை விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிப்பத்தோடு, நீரிழவு நோய், தொப்பை அதிகரித்தல் மற்றும் வளர்சிதை மாற்றத்தில் மாற்றம் போன்ற விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன.

–  ஓலெஸ்ட்ரா அல்லது ஓலியன் சேர்க்கப்பட்ட சிப்ஸ் வகைகள் UK மற்றும் கனடாவில் தடைசெய்யப்பட்டுள்ளன.

– BHA மற்றும் BHT என்பது waxin கலக்கப்பட்ட preservative ஆகும். இவை பிசைந்து விற்கப்படும் இன்ஸ்டன்ட் உருளைக்கிழங்கு உணவுகள், வெண்ணெய், சிப்ஸ், தானியங்கள், பாதுகாக்கப்பட்ட இறைச்சிகள், சூயிங்கம் மற்றும் பிற உணவுகளில் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.

இவை தவிர இந்தியாவில் அதிக நிறமூட்டிகள் சேர்க்கக்கூடிய உணவுகளான பஞ்சு மிட்டாய், கேசரி, புருட் மிக்சர், தந்தூரி சிக்கன், குடல் அப்பளம், கலர் வடகங்கள் ஆகியவற்றையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டியது அவசியமானதாகும்.

ஆதாரங்கள்:

https://www.fssai.gov.in/upload/uploadfiles/files/Compendium_Food_Additives_Regulations_08_09_2020-compressed.pdf

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC7376446/#:~:text=It%20often%20enters%20the%20body,it%20results%20in%20acute%20poisoning

https://www.fssai.gov.in/upload/media/FSSAI_News_Colour_Kashmir_28_12_2020.pdf

https://www.hindustantimes.com/cities/lucknow-news/banned-food-colour-may-affect-organs-stunt-kids-growth-study-101677866645218-amp.html

https://timesofindia.indiatimes.com/life-style/food-news/common-food-additives-that-might-be-harmful-to-you/photostory/86701479.cms?picid=86701593

https://www.indiatimes.com/health/healthyliving/ever-wondered-how-many-food-additives-indians-consume-that-are-banned-in-other-countries-255674.html

Please complete the required fields.
Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader