This article is from Feb 17, 2021

நேர்மையாளர் வறுமையில் தான் இருக்க வேண்டுமா? முன்னாள் எம்.எல்.ஏ வறுமையில்!

உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா என்று தெரியவில்லை, ” என்னிடம் 20 ரூபாய்தான் இருக்கு, வரலாமா ? எனக் கேட்டு விட்டு ஆட்டோவில் ஏறிய முன்னாள் எம்எல்ஏ குறித்து ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வியந்து எழுதிய முகநூல் பதிவு ” கடந்த டிசம்பர் மாதம் சமூக வலைதளங்களில் வைரலாகி ஊடகங்களிலும் வெளியாகியது.

72 வயதான நன்மாறன் மதுரை கிழக்குத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இருமுறை(2001&2006) எம்எல்ஏவாக இருந்தவர். அவரின் எளிய மற்றும் ஏழ்மையான வார்த்தையும், செயலையும் சமூக வலைதளங்களில் பாராட்டினர்.

இது நடந்து சில மாதங்களில், என்.நன்மாறன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பிப்ரவரி 15-ம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்து அளித்த மனுவில், ” நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். என் கணவர் இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்தார். எங்களுக்கு சொந்த வீடு இல்லை. எனவே, ராஜாக்கூர் கிராமத்தில் வழங்கப்படும் அனைவருக்கும் வீடு என்ற பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் எங்களுக்கு கீழ்த்தளத்தில் வீடு ஒதுக்கி தருமாறு கேட்டுக் கொள்கிறோம் ” எனக் கூறியுள்ளனர்.

முன்னாள் எம்எல்ஏக்களுக்கு என்று வரும் ஓய்வூதியம் ரூ20 ஆயிரத்தை கட்சியிடம் வழங்கி விட்டு கட்சி சார்பில் ஊதியமாக ரூ.11 ஆயிரத்தை(கட்சி விதி) பெற்று வாடகை வீட்டில் வசித்து வருகிறார் நன்மாறன். அதில், வாடகைக்கு என்றே 6,000 செலவாகி விடுகிறது என்கிறார். அவர் கட்சி விதிக்கு எதிராக பேசவில்லை, கட்சியில் அனைவருக்கும் ஒரே விதி தான், என்னை விட உத்தமர்களும் அங்கு இருக்கிறார் என்கிறார். எனினும், தனது காலத்திற்கு பிறகு தனது மனைவி யாரை நம்பியும் இருக்கக் கூடாது என்றும், அவருக்கு பயன்படுவதற்காகவே சிறு கோரிக்கையை முதன்முதலாக வைத்து இருக்கிறார்.
.
இதுகுறித்து பத்திரிகையாளர் கா.சு.துரையரசு அவர்கள் கூறுகையில், “தோழர் நன்மாறன் இருமுறை எம்எல்ஏவாக இருந்தவர். மிகவும் எளிமையானவர், நேர்மையான மனிதர். இடதுசாரி கட்சிகளில் பலரும் அப்படித்தான் இருப்பார்கள். இப்படிப்பட்ட கட்சியில் இருப்பவர்களின் குடும்பங்களில் ஆணோ, பெண்ணோ நல்ல வேலையில் இருப்பார்கள், மற்றொருவர் சமூகத்திற்காக கட்சியில் முழுநேர பணியில் இருப்பார்கள். இதற்கு எங்கும் வாய்ப்பில்லாத நன்மாறன் போன்ற குடும்பத்திற்கு சிரமம் ஏற்படுகிறது.
.
எதார்த்த மனிதரான நன்மாறன் மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் விண்ணப்பம் கொடுக்கிறார். அது சட்டவிரோதம் அல்ல. ஆனால், அரசியல்ரீதியாக பார்க்கையில், வீடு வழங்கும் நிகழ்ச்சியில் தாங்கள் எதிர்க்கும் கட்சியினைச் சேர்ந்த அக்கட்சியின் முக்கிய புள்ளியின் கையில் இருந்து வீடு பெறுவது தர்மசங்கடமாக இருக்கும்.
அடுத்து, எளிமை என பாராட்டுகிறார்கள். ஆனால், இங்கு எளிமைக்கும், வறுமைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர வேண்டும். இதுபோன்ற சூழலில், எம்எல்ஏவாக இருந்தவர் கூட வீடு இல்லாமல் வறுமையில் வாடுகிறார், சொந்த கட்சியில் இருப்பவரைக் கூட காப்பாற்ற முடியவில்லையா என கேள்வி எழுந்தால் அரசியல்ரீதியாக அது தர்மசங்கடமாக இருக்கும்.
.
இது அரசியல்ரீதியாக வேறு மாதிரி சென்று விடக் கூடாது என எழுதிய போது, கட்சியில் பலரும் அப்படி இருப்பதாகவும், தோழர் நன்மாறனுக்கு தேவையான உதவியை அவசியம் கட்சி செய்யும் என முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி அவர்களும் தெரிவித்து இருந்தார். ஆகவே, வறுமைக்கும், எளிமைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் ” எனக் கூறி இருந்தார்.
.
இதுதொடர்பாக, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரிடம் பேசுகையில், ” அரசாங்கம் மக்கள் வரிப் பணத்தில் திட்டங்களை கொண்டு வருகிறது. அதற்கு தகுதி உடையவர்கள் விண்ணப்பித்தால், ஏற்றுக் கொள்வது அரசாங்கத்தின் முடிவு. தொழிலாளிகளும், விவசாயிகளுமே அரசாங்கத்தை நடத்தி வருகிறார்கள். நன்மாறன் அவர்கள் தற்போதும் கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கிய தலைவர், முன்னின்று போராடியும் வருகிறார். ஏற்கனவே, தோழர் நல்லக்கண்ணு அவர் இருந்த வீட்டை அரசாங்கம் காலி பண்ண சொன்ன உடன் அவரும் காலி செய்தார். பின்னர் மீண்டும் வீடு வழங்குவதாக அறிவித்தனர்.
.
கம்யூனிஸ்ட் கட்சியில் அனைவரும் சமம். கட்சி சார்பாக தேர்தலில் நிற்கும் நபருக்கு கட்சியே செலவு செய்யும், அவர் வாங்கும் ஊதியத்தை(ஓய்வூதியமாக இருந்தாலும்) பொது செலவுகளுக்கு வழங்கி விடுவார். ஊழியர்கள் அனைவருக்கும் ஒரே அலவன்ஸ் வழங்கப்படுகிறது. ஆனால், இங்கே நேர்மையாக வாழ்வதையே கேள்விக்குட்படுத்தி வருகிறார்கள்.
.
கார்ப்பரேட் வரி செலுத்தி அரசாங்கம் நடந்தால்தான் மோடி பணத்திலோ, எடப்பாடி பணத்திலோ இவர் நலத்திட்டம் வாங்கி விட்டார் எனப் பேசுவதற்கு நியாயம் இருக்கு. வரி போடுவது அனைத்தும் சாதாரண மக்கள் மீது தான். டீக்கடையில் எம்எல்ஏ என போட்டோ எடுத்து அதிசயமாக செய்தி போடுகிறார்கள். ஆனால், அவர் எப்பொழுதும் டீக்கடைக்கு செல்வார். ஆக, எளிமையை அதிசயமாக பார்க்கும் காலத்தில் வெளியில் அப்படி இருப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். ஏன் காமராஜர், கக்கன் என பழைய கதையை பேச வேண்டும், இப்பவும் இப்படி இருக்கவே செய்கிறார்கள் ” எனத் தெரிவித்து இருந்தார்.
.
நேர்மையாளர்கள் என்றாலே வறுமையில் இருக்க வேண்டுமா, வறுமையில் இருப்பவர்களை பார்த்து ஆகா என்னவொரு நேர்மை என்று அனைவரும் அதை கொண்டாடுவது என்பது அவரின் வறுமையையும் சேர்த்து கொண்டாடுகிறோமா மற்றும் நேர்மையாளர்கள் எல்லாம் வறுமையில்தான் இருக்க வேண்டும் என்று நாம் நம்புகிறோமா என்ற கேள்வியும் உருவாகுகிறது. அதே நேரத்தில், ஒரு வீடு கூட இல்லாத நிலையில் இதுபோன்ற நேர்மையாளர்கள் தள்ளப்படுவது என்பதை மறுசிந்தனைக்கு உட்படுத்துமா கம்யூனிஸ்ட் கட்சிகள் என்ற கேள்வியும், இன்னொருபுறம் சமூகமே நேர்மையாளர்களை கைவிடுகிறதா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
Please complete the required fields.




Back to top button
loader