This article is from Mar 31, 2022

பெட்ரோல், டீசல் விலை உயர்வு; மக்கள் அதிக வரி கட்ட வேண்டியதுதான்: நிர்மலா சீதாராமன் சொல்லும் காரணம் சரியா ?

ராஜ்யசபாவில் புதன்கிழமையன்று 2022-23 பட்ஜெட் மீதான விவாதத்தில் எரிபொருள் விலை உயர்வு குறித்து பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உக்ரைன் போரால் உலக எண்ணெய் சந்தையில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் கடந்த ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் எண்ணெய் பத்திரங்கள் ஆகியவையே எரிபொருள் விலை உயர்விற்கு காரணம் எனப் பேசியுள்ளார்.

Twitter link 

எண்ணெய் பத்திரங்கள் குறித்து அவர் பேசுகையில், ” கடந்த ஆட்சியில் எண்ணெய் பத்திரங்கள் வழங்கும் கொள்கையில் ரூ.2 லட்சம் கோடி மதிப்புள்ள எண்ணெய் பத்திரங்களை வெளியிட வழிவகுத்தது, அவை இன்னும் திருப்பிச் செலுத்தப்படுகின்றன.

இன்று வரி செலுத்துவோர்(பொதுமக்கள்) எண்ணெய் பத்திரங்கள் என்ற பெயரில் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் நுகர்வோருக்கு வழங்கப்பட்ட மானியங்களை செலுத்துகிறார்கள். மேலும், அவர்கள் இன்னும் 5 ஆண்டுகளுக்கு(2026) தொடர்ந்து செலுத்துவார்கள் ”  எனப் பேசி இருந்தார்.

எண்ணெய் ஒப்பந்த பத்திரங்கள் :

எண்ணெய் ஒப்பந்த பத்திரங்கள் என்பது பொது நிறுவனங்களான எண்ணெய் சந்தை நிறுவனம், உணவு நிறுவனம் மற்றும் உர நிறுவனம் போன்றவற்றின் மானியத் தொகைக்கு பதிலாக இந்திய அரசால் வழங்கப்படும் சிறப்பு செக்யூரிட்டியே என ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அறிக்கை தெரிவிக்கின்றன. முந்தைய காங்கிரஸ் அரசு ரூ1.3 லட்சம் கோடி மதிப்பிலான எண்ணெய் பத்திர கடனை விட்டு சென்றது.

எவ்வளவு தொகை திரும்ப செலுத்தப்பட்டது ?

2011-12-ம் ஆண்டு பட்ஜெட்டின் போதே, 1.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான எண்ணெய் பத்திர கடனை வட்டியுடன் சேர்த்து 14 ஆண்டுகளுக்கு தவணை முறையில் செலுத்த வேண்டும், ஒவ்வொரு தவணையின் போது செலுத்த வேண்டிய தொகை குறித்தும் முதிர்வு காலம் முன்பே தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. 2012-ல் ரூ.5762 கோடி அசல் தொகை செலுத்தப்பட்டு இருக்கிறது.

“எண்ணெய் பத்திரங்களுக்கு 2014-2021 வரை ஒவ்வொரு ஆண்டும் பாஜக அரசு தோராயமாக ரூ.10,000 கோடி என 70,195 கோடி வட்டித்தொகையை செலுத்தி உள்ளதாக ” ப்ளூம்பெர்க் இணையதளம் குறிப்பிட்டு இருக்கிறது. இதையே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் கடந்த ஆண்டு ஆகஸ்டில் தெரிவித்து இருந்தார்.

இதன்படி பார்க்கையில், ” எண்ணெய் பத்திரங்களின் அசல் தொகைக்கான வருடாந்திர வட்டியுடன்(1.44 லட்சம்), பாஜக அரசாங்கம் 2015-ம் ஆண்டு ரூ.3,500 கோடி மற்றும் 2021-ம் ஆண்டு 10,000 கோடி என மொத்தம் 13,500 கோடி அசல் தொகையை செலுத்தி இருக்கின்றது. இன்னும் ரூ.1.20 லட்சம் கோடி அசல் தொகை மீதமுள்ளது. அடுத்து பாஜகவின் ஆட்சிக் காலம் முடிவடைய உள்ள 2024 வரை 31,150 கோடி அசல் தொகையை கட்ட உள்ளது.

பாஜக அரசு பெட்ரோல், டீசலில் பெற்ற வரி :

ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலில் விலையில் அடிப்படை கலால் வரி, சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு செஸ், விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு செஸ் மற்றும் சிறப்பு கூடுதல் கலால் வரி என நிர்ணயித்து இருக்கிறது ஒன்றிய பாஜக அரசு.

ராஜ்யசபாவில் நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் செளத்ரி அளித்த பதிலில், ” பெட்ரோல் மற்றும் டீசலில் இருந்து வசூலிக்கப்படும் செஸ் உள்ளிட்ட மொத்த கலால் வரி 2014-15 முதல் 2020-21 வரையான நிதியாண்டில் சுமார் ரூ.14.4 லட்சம் கோடி ” எனத் தெரிவித்து இருந்தார்.

மேலும் படிக்க : பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசலில் வசூலித்த கலால் வரி 14.4 லட்சம் கோடி – ராஜ்யசபாவில் பதில் !

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்விற்கு முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்ட எண்ணெய் பத்திரங்களை காரணமாக சொல்லும் பாஜக அரசு, 2020-21 நிதியாண்டில் மட்டும் சுமார் 3.7 லட்சம் கோடியை கலால் வரியாக வசூலித்து இருக்கிறது.

links : 

https://www.indiabudget.gov.in/budget2011-2012

govts-excise-mop-up-from-petrol-diesel-doubles-to-rs-3-7-lakh-cr-in-fy21-states-get-rs-20000-cr

Please complete the required fields.




Back to top button
loader