அதிரடியாக எரிபொருள் வரியைக் குறைத்த அரசு.. உங்களுக்கு இல்ல, அம்பானிக்கு !

இந்திய அரசு டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதிக்கான விண்ட்ஃபால் வரியை லிட்டருக்கு ரூ.2 குறைத்துள்ளது மற்றும் பெட்ரோல் ஏற்றுமதியில் விதிக்கப்பட்ட லிட்டருக்கு ரூ.6 வரியை முற்றிலுமாக ரத்து செய்து அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் உடைய பங்குகள் உயர்ந்துள்ளது.

ஜூலை 1-ம் தேதி இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களின் பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு விண்ட்ஃபால் டேக்ஸ் எனும் சிறப்பு வரியை விதித்தது. இந்த வரி விதிப்பால்  அரசுக்கு ரூ94,800 கோடி வரி வருமானம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.

ஒருதுறைசார்ந்த நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட தருணங்களில் அதிக லாபம் ஈட்டும்போது அந்த லாபத்திற்கு அரசாங்கம் விண்ட்ஃபால் வரியை விதிக்கின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உச்சத்தில் இருந்த போது எண்ணெய் நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டி வந்தன. ஆகையால், இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் எண்ணெய் ஏற்றுமதிக்கு ஜூலை தொடக்கத்தில் விண்ட்ஃபால் வரியை அரசு விதித்தது.

விண்ட்ஃபால் வரியின் படி, ” உள்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல் மற்றும் விமான எரிபொருளுக்கு 6 ரூபாயும், டீசலுக்கு 13 ரூபாயும் விதிக்கப்பட்டது. மேலும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒரு டன் கச்சா எண்ணெய்க்கு ரூ.23,250 வரி விதிக்கப்பட்டது”.

மே மாதம் பெட்ரோலுக்கு ரூ.8 மற்றும் டீசலுக்கு ரூ.6 வரி குறைப்பு செய்த போது அரசுக்கான வரி வருவாயில் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டது. இந்நிலையில், விண்ட்ஃபால் வரி மூலம் அரசுக்கான இழப்பு சரி செய்யப்படும் என்றும், அதேநேரத்தில் இந்திய எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களின் லாபம் குறையும் என்றும் கூறப்பட்டது. எனினும், கச்சா எண்ணெய் விலை குறையும் வரையில் வரி நீடிக்கும் என ஒன்றிய அரசு தெரிவித்து இருந்தது.

ஆனால், அதன் பிறகு ஒரு சில வாரங்களில் சர்வதேச எண்ணெய் விலையில் தொடர்ந்து வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளதால் விதிக்கப்பட்ட விண்ட்ஃபால் வரியை இந்திய அரசு குறைத்து உள்ளது. இதன் மூலம் டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதிக்கு ரூ.2 மற்றும் பெட்ரோலுக்கு முழுமையாக ரூ.6 என வரியை நீக்கியது மட்டுமின்றி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு வரியான ரூ.23,250-ல் 27% குறைத்து ஒரு டன் ரூ.17,000 ஆக விதிக்கப்பட்டு உள்ளது.

இந்திய அரசு அறிவித்த விண்ட்ஃபால் வரி குறைப்பு காரணமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் உடைய பங்குகள் உயர்ந்து வருகிறது. புதன்கிழமை காலை தொடக்க நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பங்குகள் 2%க்கும் அதிகமாக உயர்ந்து ரூ.2,501 ஆக உள்ளது.

எஃப்ஜிஇ-ன் படி, ” ரிலையன்ஸ் மற்றும் ரோஸ்நெப்ட் ஆதரவு நயாரா எனர்ஜி லிமிடெட் ஆகிய தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்களே இந்தியாவின் ஒட்டுமொத்த பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதியில் 80% முதல் 85% வரை மேற்கொண்டு வருகின்றன”.
links : 
Please complete the required fields.




Back to top button
loader