This article is from Nov 24, 2018

கஜா புயல் அமெரிக்காவின் சதித் திட்டமா : weatherman பதில்

தமிழகத்தை தாக்கிய கஜா புயலால் அனைவரும் எதிர்பார்க்காத அளவிற்கு டெல்டா மாவட்டங்கள் பெரிய பாதிப்பை சந்தித்தது. கஜா புயலால் நிகழ்ந்த பாதிப்பைப் பற்றி சமூக ஊடகங்களில் தீவிரமாக பேசி வரும் வேளையில் கஜா பாதிப்பு இயற்கை பேரிடர் அல்ல, வல்லரசு நாடுகள் திட்டம் தீட்டி உருவாக்கிய புயல் என செய்திகள் பரவுவதைப் பார்க்க முடிகிறது.

டெல்டா பகுதியை கஜா புயல் கொண்டு தாக்கி அழிவை நிகழ்த்தி விவசாயிகளை விவசாய நிலங்களில் இருந்து அப்புறப்படுத்தி அங்கு மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்தவே இத்தகைய செயற்கை புயலை உருவாக்கியுள்ளனர் என்று யாரும் யூகிக்க முடியாத விதத்தில் ஓர் கருத்தை பதிவிடுகின்றனர். இதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், அமெரிக்காவின் Haarp தொழில்நுட்பம் இதற்கு மூளையாக செயல்பட்டது என ஆணித்தரமாகக் கூறுகின்றனர்.

HAARP :

ஹார்ப்(HAARP) ஆராய்ச்சி மையம் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் அமைந்திருக்கிறது. ஹார்ப் கண்டுபிடிப்பானது அமெரிக்க இயற்பியல் விஞ்ஞானி பெர்னாட் ஈஸ்டுண்ட் என்பவரால் வானிலை நிகழ்வு தொடர்பாக தொடங்கப்பட்டது என்கின்றனர். இந்த ஹார்ப் ஆராய்ச்சி மூலம் மின்காந்த அலைகளை ஒருமுகப்படுத்தி எந்தவொரு பகுதியிலும் ஒரு பருவநிலை மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற அச்சம் உலகளவில் நிலவி வருகிறது.

இதை வானிலை ஆயுதமாக பயன்படுத்த முடியும் என்ற கருத்துகளும் அதிகம் நிலவுகிறது. எனினும், இதில் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளே அதிகமாகப் பரவுகின்றது. இப்பொழுது நாம் ஹார்ப் பற்றிய முழுமையான ஆராய்ச்சிக்குள் செல்ல வேண்டாம்.

கஜா புயலுக்கும், ஹார்ப் ஆராய்ச்சிக்கும் தொடர்புகள் இருக்கிறதா என்பதே கேள்வி. இதனைப் பற்றி அறிய தமிழ்நாடு வெதர்மேன் உடன் பேசியதில் இவ்வாறு பரவும் செய்திக்கு தக்க பதிலடி கொடுத்து உள்ளார்.

கேள்வி : ஹார்ப் தொழில்நுட்பம் மூலம் கஜா புயல் உருவாகியது என கூறி வருகின்றனர். அதைப் பற்றி உங்களின் கருத்து?

பதில் : ஹார்ப் பற்றியக் கருத்திற்குள் செல்ல வேண்டாம். ஆனால், அதற்கும் கஜா புயலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அவையனைத்தும் வதந்தி. மனிதனால் ஒரு புயலை வர வைக்க முடியும், நகர்த்த முடியும், இப்படித்தான் அழிய வைக்க முடியும், கடலைக் கடக்க வைக்க முடியும் எனக் கூறுவது எல்லாம் வதந்தி. இவ்வாறு பரவும் செய்திகள், கதைகள் அனைத்தும் உண்மையல்ல.

கேள்வி : ஹார்ப் தொழில்நுட்பம் இருக்கிறதா ?

பதில் :  ஹார்ப் எனப்படும் தொழில்நுட்பம் இருக்கிறது. ஆனால், ஹார்ப்-க்கும் புயல் உருவாவதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. புயலை உருவாக்கி நகர்த்துவது, பிற நாட்டிற்கு மேகங்களை கொண்டு செல்வது, மழைப் பொழிய வைப்பது என்பதற்கும் ஹார்ப்-க்கும் சம்பந்தமே இல்லை. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் கொண்டு சென்று தாக்கியது என்பது எல்லாம் வதந்தியே.

அப்படிப் பார்த்தால், டெல்டா மாவட்டம் சரி ,  ஏன் கொடைக்கானல்,  திண்டுக்கல் பகுதிக்கு சென்றது. திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட நல்ல விவசாயம் உள்ள பகுதிக்கு ஏன் செல்லவில்லை. அங்கு சென்று இருக்கலாம் அல்லவா ?. இது கற்பனையாக ஒன்றோடொன்று தொடர்புப்படுத்தி உருவாக்கிய கதைகளே.

இதற்கு முன்பாக இறுதியாக 1983-ல் தான் புயல் 100 கி.மீ வேகத்திற்கு மேல் வீசியது. அது காரைக்காலில் கடந்துள்ளது. அப்படி அழிக்க நினைத்தால் அதன்பின் தொடர்ச்சியாக அனுப்பி இருக்கலாம், 25 வருடங்களுக்கு பிறகு ஏன் அனுப்ப வேண்டும். தானே புயலுக்கு கங்கைக்கொண்ட சோழப்புரம் மற்றும் வர்தாவிற்கு சென்னை ஆகியப் பகுதிகள் முக்கியமானவையாக அமைந்தது. புயல் காரணமாக தான் மழைப் பொழிவு அதிகம் இருக்கிறது. மனிதனால் புயலின் செயலை தீர்மானிக்க முடியாது.

புயலுக்கு என Technical (டெக்னிக்கல்) ஆதாரங்கள் உள்ளன. Ridge என அழைப்பார்கள். அது டெல்டா பகுதிக்கு வந்ததால் அதன் ஓரமாய் நகர்ந்து உள்ளது. Ridge ஏன் அவ்வாறு நகர்ந்தது என்பதைக் குறித்து ஏற்கனவே விவரமாக கூறியுள்ளேன். படத்தைப் பார்க்கையில் புரிய வரும். 10 நாட்களுக்கு முன்பே புயல் இங்கு தான் வரும் என தெரிய வந்துள்ளது. அதன் தாக்கம் அதிகம் ஏற்பட பிற காரணங்கள் உள்ளன.

ஹார்ப்-க்கும்,  கஜா புயலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அதன் Ridge ஆனது டெல்டா பகுதியை நோக்கி நேரான கோட்டில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், கொடைக்கானல், மூணாறு, கொச்சின் வழியாக சென்று உள்ளது. கஜா புயலுக்கும் ஹார்ப்க்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

இதுவே தமிழ்நாடு வெதர்மேன் அளித்த பதிலாகும்.

நிவாரணப் பொருட்கள் சரியாக கிடைக்கவில்லை என்று மக்கள் புகார் தெரிவிக்கின்றார்கள், மறுபுறம் தென்னைக்கு வழங்கும் இழப்பீடு தொகை மிகக் குறைவாக இருக்கிறது எனக் கூறுகிறார்கள்.

இன்னும் பல கிராமங்களில் மின் இணைப்பு துண்டிப்பில் உள்ளது. குடிக்க நீர் இல்லை, விவசாயக் கூலிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது, தென்னை விவசாயிகளின் மொத்த வாழ்வாதரம் அழிந்து விட்டது. இப்படியான சூழலில் அதைப்பற்றி பேசாமல் தேவையற்றவையை உளறி, பாதிப்பை நீர்த்துப் போக வைப்பதற்கான முயற்சியாகதான் இதைப் பார்க்க முடிகிறது. இவ்வாறு சில அறிவிலிகளின் பேச்சை பெரிதுப்படுத்தி பேச வேண்டாம்.

மக்களின் நிலையை சரி செய்ய உதவ விட்டாலும் தேவையற்ற தகவலை பகிர்ந்து கஜா பற்றிய செய்தியை மறைக்காமல் இருந்தாலே போதுமானது.

Please complete the required fields.
Back to top button
loader