This article is from Nov 23, 2018

கஜா புயல் பாதிப்பிற்கு நிவாரண நிதி திரட்டும் நாட்டுப்புறக்கலைஞர்கள்.

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் பெருமளவு பாதிப்பு உண்டாகி மக்கள் இருக்க இடம், உண்ண உணவு இன்றி தவித்து வருகின்றனர்.

தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் தங்களால் முடிந்த நிவாரண உதவிகளை அனுப்பி வைக்கின்றனர். எனினும், டெல்டா மாவட்ட மக்கள் படுகின்றத் துயரத்தை சமூக வலைத்தளத்தில் காண்கிறோம்.

இந்நிலையில், நலிவடைந்த விவசாய பெருங்குடி மக்களின் அவல நிலைக்கு உதவ நலிவடைந்த நாட்டுப்புறக்கலைஞர்கள் நிகழ்ச்சிகள் மூலம் நிதி திரட்டும் நிகழ்வு மனம் நெகிழச் செய்துள்ளது.

மதுரையின் நாட்டுப்புற இசைக்கலை பெருமன்றத்தில் உள்ள நலிவடைந்த கலைஞர்கள் தெருவில் கரகாட்ட நிகழ்ச்சியை நடத்தி அதன் மூலம் நிவாரணம் அளிக்க நிதி திரட்டி உள்ளனர்.

நவம்பர் 21-ம் தேதி மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து தொடங்கிய அவர்களின் நிகழ்ச்சி மாலை திருப்பரங்குன்றம் வரை சென்றுள்ளது.

தெருவில் கரகாட்டம் ஆடி நிவாரண நிதி சேர்க்கும் இவர்களுடன் தன்னார்வு ஆர்வலர்களும் இருந்துள்ளனர். இதில், கிடைக்கப்பெறும் நிதி மூலம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் பயன் பெறுவர் என்ற நல்லெண்ணம் மேலோங்கி உள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள நாட்டுப்புறக்கலைஞர்கள் ஒன்று சேர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் கிடைக்கும் நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதியை பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்க நாட்டுப்புற இசைக்கலை பெருமன்றத்தில் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் தெருக்கூத்து, கரகாட்டம் போன்ற பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள் குறைந்துக் கொண்டே வருகிறது. அவர்களின் வருமானம் எப்பொழுதும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

வறுமையிலும் தங்களால் முடிந்த உதவியை செய்ய நினைத்த ஒப்பற்றக் கலைஞர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

Please complete the required fields.




Back to top button
loader