காந்தி ஜெயந்தி புதிர் போட்டியில் தமிழ் இடம்பெறாததால் சர்ச்சை !

அக்டோபர் 2-ம் தேதி காந்தி பிறந்தநாளன்று தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) சார்பில் பள்ளி மாணவர்களுக்கு புதிர் போட்டி நடத்துவதாக அறிவிப்பு வெளியாகியது. இதுதொடர்பாக, மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருந்ததால், தமிழக அரசு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அறிக்கையை அனுப்பி இருந்தது.
அந்த சுற்றிக்கையில் புதிர் போட்டிகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் தமிழ் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன. தமிழ் வழிக் கல்வியில் படித்த மாணவர்கள் எப்படி இந்த போட்டியில் பங்கேற்பார்கள் என கல்வியாளர்களும் கருத்து தெரிவித்தும் உள்ளனர்.
சுற்றறிக்கையில், ” மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களை ” ஆன்லைன் ” புதிர் போட்டியில் கலந்து கொள்ள அறிவுறுத்துமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களையும் அறிவுறுத்த வேண்டும். இந்த போட்டி அக்டோபர் 2 காலை 10 மணிக்கு தொடங்கி நவம்பர் 1-ம் தேதி இரவு 12 மணி வரை நடைபெறுகிறது. 3 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
போட்டி நடைபெறும் மொழி ஆங்கிலம் மற்றும் இந்தி. காந்தியின் வாழ்க்கை வரலாறு, காந்தியடிகளின் மக்கள் பணிகள், வாழ்க்கையோடு இணைந்த காந்தியடிகளின் கருத்துக்கள் ஆகிய தலைப்புகளில் புதிர் போட்டி நடைபெறுகிறது. https://diksha.gov.in/, https://play.google. com/store/apps/details?idicom.discovergandhi.kholkhe ஆகிய லிங்கில் ஆன்லைன் போட்டி நடைபெறும் ” எனக் கூறப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு ஆங்கிலத்தில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் அதே தகவல் வெளியாகி இருக்கிறது. கேள்விகள் அனைத்தும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இடம்பெறும் எனக் கூறி உள்ளனர். MyGov.in இணையதளத்தில் இடம்பெற்றுள்ள புதிர் போட்டியில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் கேள்விகள் இடம்பெற்று இருக்கிறது.
பள்ளி மாணவர்களுக்கான புதிர் போட்டிகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டும் நடைபெறுகிறது. தமிழ் மொழி மட்டுமின்றி மாநில மொழிகள் எதுவும் இடம்பெறவில்லை. மாநில மொழிகள் இடம்பெறவில்லை என்பதால் எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்துள்ளன.