உ.பி கங்கை நதிக்கரை மணலில் புதைக்கப்பட்ட ஏராளமான உடல்கள் !

பீகார் மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கணக்கில்லாத சடலங்கள் கங்கை ஆற்றின் கரையில் கரை ஒதுங்கியிருந்தது குறித்தான செய்திகளும் புகைப்படங்களும் தொடர்ந்து வெளிவந்துக்கொண்டிருந்தது. இது குறித்தான விரிவான செய்தி ஒன்றையும் யூடர்ன் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தை மையமாகக் கொண்டு செயல்படும் பிரபலமான பத்திரிக்கையான டைனிக் பாஸ்கர் உத்தர பிரதேச மாநிலத்தில் கங்கை நதி பாயும் 27 மாவட்டங்களில் மட்டும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான உடல்கள் முறையாக புதைக்கப்படாமலும் அல்லது கைவிடப்பட்ட நிலையிலும் கங்கை கரைகளில் ஒதுங்கி இருப்பதாக ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
டைனிக் பாஸ்கர் பத்திரிக்கையின் 30 செய்தி தொடர்பாளர்கள் உ.பி யில் உள்ள 27 மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் அடிப்படையில் வெளியான இந்த அறிக்கை அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக அமைந்துள்ளது.
27 மாவட்டங்களில் கண்னுஜ், கான்பூர், மற்றும் உன்னாவ் மாவட்டங்களில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அறிக்கையின் விரிவான விபரங்கள் பின்வருமாறு,
கண்ணுஜில் 350க்கும் மேற்பட்ட இறந்த உடல்கள் மகாதேவி கங்கை காட் அருகே புதைக்கப்பட்டுள்ளன. இதனை மறைக்க அங்குள்ள நிர்வாகம் உடல்கள் மீது மண் போட்டு மூடிவிடுகிறது. இது குறித்து மகாதேவி கங்கை காட்-ல் பணிபுரியும் ராஜ்நாராயண் பாண்டே கூறியதாவது ,” கங்கைக் கரையில் புதைக்கப்பட்ட இறந்த உடல்கள், நீர் மட்டம் உயரும்போது உயர்கின்றன. இந்த சடலங்கள் மற்ற மாவட்டங்களுக்கும் அடித்து செல்லப்படுகின்றன. கரைகளில் அமைந்திருக்கும் அனைத்து மாவட்டங்களில் நிலை இது தான்.”
உத்தர பிரதேசத்தின் மிகப்பெரிய நகரமான கான்பூரில் இருந்து அரை மணி நேர தூரத்தில் உள்ள ஷெரேஷ்வர் காட் அருகே பல சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன. எங்கு பார்த்தாலும் தரையில் புதைக்கப்பட்ட சடலம் மட்டுமே காணப்பட்டது. சில சடலங்களை நாய்கள் கடித்துக்கொண்டும், கழுகுகள் மற்றும் காகங்கள் அமர்ந்திருப்பதையும் காண முடிந்தது. தகவல் கிடைத்தவுடன், போலீஸ் குழு வந்து சடலங்களை மண் போட்டு மூடும் வேலையைத் தொடங்கினர் என அங்கு ஆய்வு செய்த செய்தியாளர் கூறியுள்ளார்.
இந்த கொரோனா காலத்தில் தான் உன்னாவ் மாவட்டத்தில் நாட்டின் மிகப்பெரிய தகனம் செய்யும் இடம் கட்டப்பட்டது. இங்குள்ள சுக்லகஞ்ச் காட் மற்றும் பக்சர் காட் அருகே 900க்கும் மேற்பட்ட இறந்த உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன. டைனிக் பாஸ்கர் பத்திரிக்கை இங்கு ஆய்வுகள் மேற்கொண்ட போது அந்த இரண்டு இடங்கள் முழுவதும் மனித உறுப்புகள் ஒவ்வொரு அடியிலும் சிதறிக் கிடந்தன. நாங்கள் வெளியிட்ட செய்திக்கு பிறகு தான் அங்குள்ள நிர்வாகிகள் தூக்கத்தில் இருந்து அவசர அவரசமாக எழுவதுபோல் பணியாற்ற தொடங்கினர்.
உன்னாவை ஒட்டியுள்ள ஃபதேபூரில், சுமார் 20 இறந்த உடல்கள் கங்கையில் புதைக்கப்பட்டிருந்தன. கடந்த வியாழக்கிழமை, ஃபதேபூர் மற்றும் உன்னாவ் நிர்வாகம் ஒருவருக்கொருவர் இறந்த அந்த உடல்களுக்கு பொறுப்பேற்காமல் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி கொண்டிருந்தனர் . ஏறக்குறைய 8 மணி நேர முயற்சிக்குப் பிறகு, இரு மாவட்டங்களின் மக்களும் அந்தந்த பகுதிகளில் இறந்த உடல்களின் இறுதி சடங்குகளை செய்வார்கள் என்று முடிவு செய்யப்பட்டது.
இதே நிலை தான் உ.பியின் கங்கை பாயும் கிழக்கு மாவட்டங்களிலும், காசிப்பூரில் இதுவரை 280 சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் சடலங்கள் கண்டறியப்பட்டு வருகிறது.
மேற்கு உத்தர பிரதேச மாவட்டங்களைப் பொருத்தவரை நிலைமை இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளது. பிஜ்னோர், மீரட், முசாபர்நகர், புலந்த்ஷாஹர், ஹபூர், அலிகார், கஸ்கஞ்ச், சம்பல், அம்ரோஹா, பதன்யு, ஷாஜகான்பூர், ஹார்டோய், ஃபரூக்காபாத் போன்ற கங்கைகளில் அமைந்துள்ள மாவட்டங்களில் இன்னும் இயல்பு நிலையே நிலவுகிறது என அந்த செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.
புதைக்கப்பட்டவர்கள் இறப்பு கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணங்களா எனத் தெரியவில்லை.
இச்சம்பவங்கள் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய உன்னாவ் மாவட்ட மாஜிஸ்திரேட் ரவீந்திர குமார், “மக்களை தகனம் செய்ய செல்ல மாநில நிர்வாகம் தன்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறது. இருப்பினும், கொரோனா தொற்றால் அதிகரித்து வரும் உயிரிழப்புகளுக்கு மத்தியில், தகன செலவு அதிகரித்துள்ளது என்று பலர் புகார் அளிக்கிறார்கள் ” என கூறினார்
“முன்னதாக ஒரு தகன மேடை அமைக்க ரூ.500 செலவாகும் இப்போது ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை செலவாகிறது மற்றும் தகனத்தின் முழு செயல்முறைக்கும் ரூ.10,000 ஆகிறது” என தகன மைதானத்தில் முடிதிருத்தும் பணியாளராக பணியாற்றும் பிரதீப் குமார் தி வயர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
உத்தர பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் 2,000 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என ஊடகங்களில் வரும் செய்திகளை உத்தர பிரதேச பாஜக செய்தித் தொடர்பாளரான நவ்னீத் சேகல் மறுத்து உள்ளார். மேலும், ” ஒவ்வொரு முறையும் 10 முதல் 20 உடல்களை மீட்டெடுக்கிறோம், கரைகளில் உள்ள சில கிராமங்கள் இந்து மரபுகள் காரணமாக இறந்தவர்களை தகனம் செய்யவில்லை.” என ரியூடுர்ஸ் ஆங்கில பத்திரிக்கையில் தெரிவித்துள்ளார்.
நிலைமையை கையாள யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக மாநில அரசு கரைகளில் உடல்களைக் கொட்டுவதைத் தடுக்க அனைத்து நதிகளிலும் ரோந்து செல்வதற்கான மாநில பேரிடர் மறுமொழிப் படை (எஸ்.டி.ஆர்.எஃப்) மற்றும் பி.ஏ.சியின் ஜால் காவல்துறையை ரோந்து பணியில் நியமித்துள்ளது.
தேசிய மனித உரிமை ஆணையம் உத்தர பிரதேசம் மற்றும் பீகார் தலைமைச் செயலாளர்கள் மற்றும் ஜல் சக்தி அமைச்சகத்தின் நீர்வளம் மற்றும் கங்கா சீரமைப்பு துறை செயலாளருக்கு இச்சம்பவங்கள் குறித்து 4 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பியது. அதில் இந்த சம்பவங்கள் சமுதாயத்திற்கு வெட்கக்கேடானவை என்றும் இறந்தவர்களின் உரிமைகளை மீறுவதாகும் எனக் குறிப்பிட்டுள்ளது.
Links :
nhrc-notice-to-uttar-pradesh-bihar-on-bodies-in-ganga
covid-crisis-dead-bodies-on-ganga-riverbank-coronavirus-cases
ganga-covid-19-bodies-uttar-pradesh
bodies-of-covid-19-victims-among-those-dumped-in-india-s-ganges-govt-doc