This article is from Nov 01, 2018

ஒரு ரூபாய் பூண்டு ஊறுகாய்! – அண்ணாச்சி கதைகள்

ஏழைகளின் எளிய சைட் டிஷ் ஊறுகாய். குழம்பு, காய்கறிகள் என எதுவும் வீட்டில் இல்லாத நேரத்தில் ஊறுகாயும் தயிர் சாதத்தையும் உணவாக சாப்பிட்ட அனுபவம் நம்மில் பலருக்கு இருக்கும். அந்த ஊறுகாயுடன் தொடர்புடைய கதை தான் இது.

ஷாம்பு என்பது பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். அதுவும் கிராமத்து கடைகளில் கிடைக்காது என்று இருந்த கால கட்டத்தில் சிறிய சாஷெ (sachet) யில் ஷாம்புவை அறிமுகப்படுத்தி பட்டி தொட்டி எல்லாம் வினியோகித்து வெற்றிக் கொடி நாட்டிய தமிழ் நாட்டு நிறுவனம் அது. இன்று அதிகமாக  உபயோகிக்கப்படும் சாஷெ முதன்முதலில் அவர்களுடைய நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.  அந்த காலத்தில் நடிகை அமலாவை வைத்து வெளியிட்ட ஷாம்பு விளம்பரம் அவ்வளவு பிரபலம்.

அவர்களுக்கு இருந்த மார்கெட்டிங் நெட்வொர்க்கின் மூலமே “ருசி” யான ஊறுகாய்யை சிறிய சாஷெ பாக்கெட்டில் ரூபாய் 1 க்கு விற்பனை செய்தார்கள் . ஷாம்புவைப் போலவே இதிலும் அமோக வெற்றி பெற்றார்கள்.

மாங்காய், எலுமிச்சை மட்டுமில்லாது பூண்டு, நெல்லி, கேரட் என தமிழ மக்கள் அதிகம் அறிந்திராத ஊறுகாய்களையும் ரூ 1 க்கு சாஷெ பாக்கெட்டில் விற்பனை செய்து மிகப்பெரிய மார்கெட்டை அவர்கள் கையில் வைத்திருந்தார்கள்.

அவர்களுக்கு சோதனை இயற்கை ரூபத்தில் வந்தது. அந்த ஆண்டு மழை வெள்ளத்தினால் பூண்டு விளைச்சல் பாதிக்கப்பட்டு பூண்டின் விலை விண்ணை தொட்டது. அந்த நிறுவனத்தின் விற்பனையில் சரிபாதி விற்பனை பூண்டு ஊறுகாய்யை சார்ந்து இருந்தது.

ஒரு சூழ்நிலையில் அவர்களால் ரூ 1 க்கு பூண்டு ஊறுகாயை விற்பனை செய்ய முடியாத நிலை வந்தது. ஒரு பாக்கெட்டின் அடக்க விலை ரூபாய் 1 தாண்டி சென்றது. அதன் தலைமை நிர்வாக குழு உறுப்பினர்கள் விலையை உயர்த்த சொல்லி அதன் நிறுவன தலைவருக்கு பரிந்துரைத்தார்கள் அல்லது அதற்கு மாற்று வழியாக சிறிது காலம் பூண்டு ஊறுகாய் மட்டும் நிறுத்தி வைக்கலாம் என்ற யோசனையும் தெரிவித்தார்கள்.

அந்த நிறுவனத்தில் இது போன்ற இறுதி முடிவுகளை அதன் நிறுவனத் தலைவர் தான் எடுப்பார். அவருக்கு விலையேற்றத்தில் உடன்பாடு இல்லை ஏனென்றால் பூண்டு விளையேற்றம் தற்காலிகம் தான் . ஒரு முறை ஊறுகாய் விலையேற்றிவிட்டால் பின்னர் விலையை குறைக்க முடியாது. அதே போல் பூண்டு ஊறுகாய்க்கு மட்டும் விலையை ஏற்ற முடியாது. மற்ற ஊறுகாய்களான மாங்காய், எலுமிச்சை போன்றவற்றிக்கும் சேர்த்து விலையேற்றினால் அவர்களின் போட்டி நிறுவனங்கள் ரூ.1 க்கு விற்று இவர்களுடைய வாடிக்கையாளர்களை அவர்கள் பக்கம் திருப்பி விடுவார்கள்.

நிறுவனத் தலைவர் சிறிது காலம் பூண்டு ஊறுகாய் உற்பத்தியை நிறுத்தி வைக்கலாம் என்ற யோசனையில் இருந்தார். அவருடைய இந்த முடிவை நிறுவனத்தின் பல துறை சேர்ந்தவர்களுடன் விவாதித்து இறுதி செய்ய நிறுவனத்தின் உயர்அதிகாரிகளின் அவசரக் கூட்டத்தைக் கூட்டினார்.

காலையில் தொடங்கிய விவாதம் மதிய உணவு இடைவேளை வரை சென்றது. ஒவ்வொருவரும் தங்களிடம் உள்ள யோசனைகளை சொல்லி அதில் உள்ள நிறை குறைகளை விளக்கினர். மதிய உணவிற்கு பின் சிறிது நேரம் மொட்டை மாடியில் நடக்கும் பழக்கம் உள்ளவர் அதன் நிறுவனத் தலைவர்.

அன்றும் அப்படி நடக்கும் போது, அங்கே உள்ள கீத்து கொட்டகை நிழலில் கட்டிட வேலை தொழிலாளிகள் சிலர் மதிய உணவை உண்டு கொண்டு இருந்தார்கள்.

அதில் ஒருவர் பூண்டு ஊறுகாயை உணவில் சேர்த்து உண்டு கொண்டு இருந்தார். அந்த ஊறுகாயும் வீட்டில் தயாரித்தது போல் இருந்தது.

நிறுவனத் தலைவருக்கு ஆச்சரியம் தாங்க முடிய வில்லை. இந்த விலை ஏற்றத்திலும் எப்படி பூண்டை வாங்கி ஊறுகாய் தயாரிக்கிறார்கள் ? விலை உயர்வு பாதிக்க வில்லையா? இப்படி பல கேள்விகள் அவருக்குள் தோன்றியது. தன் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய கட்டிட தொழிலாளியிடமே நிறுவனத்தலைவர் நேரடியாக
கேட்டுவிட்டார். அந்த தொழிலாளின் பதில் நிறுவனத் தலைவருக்கு ஒரு புதிய வழியை திறந்து விட்டது.

உணவு இடைவேளைக்கு பின் கூடிய கூட்டத்தில் நிறுவனத்தலைவர் சொன்னார். “நாம் பூண்டு ஊறுகாயை அதே விலைக்கு தரப் போகிறோம் , ஆனால் நஷ்டப்படாமல் ” எல்லோருக்கும் ஆச்சரியம் விலையைக் கூட்டாமல் எப்படி நஷ்டத்தை தவிர்க முடியும்.

நிறுவனத்தலைவர் உணவு இடைவெளியின் போது கட்டிட தொழிலாளிடம் உரையாடிதையும் அதற்கு முன் தான் பார்த்த காட்சியையும் சொன்னார்.

இது தான் அந்த உரையாடல்.

“இந்த விலை ஏற்றத்திலும் எப்படி பூண்டு ஊறுகாய் தயாரிக்கிறீர்கள் ? ” – நிறுவனத்தலைவர்.

“பூண்டு விலை உயர்வு உண்மை தான். அதை வேறுவிதமாக சமாளிக்கலாம் . முன்பு ஒரு பங்கு பூண்டு உடன் கால் பங்கு தக்காளியை ஊறுகாய் தயாரிப்பின் போது சேர்ப்போம் . இப்போது அப்படியே தலைகீழாக, கால் பங்கு பூண்டு உடன் ஒரு பங்கு தக்காளி சேர்த்துவிடுவோம் . பூண்டின் விலையேற்றம் பெரிதும் பாதிக்காது . ஆனால் கொஞ்சம் தக்காளி அதிகமாக ஊறுகாயில் இருக்கும் . ஆனால் பூண்டின் சுவையும் ,வாசமும் ஊறுகாயில் கிடைக்கும் ” – கட்டிடத் தொழிலாளி.

மொத்த உயர்மட்டக் குழுவும் இந்த யோசனை அப்படியே ஏற்றுக் கொண்டாது. சில மாதங்களுக்கு பின் பூண்டு விலை குறைந்தால் பழைய சதவிதத்தில் பூண்டு ஊறுகாயை தொடர்ந்தார்கள். அது மட்டுமில்லாது
“பூண்டு தக்காளி ஊறுகாய் ” என்ற புது ஊறுகாயும் மார்கெட்டில் அறிமுகப்படுத்தி வெற்றி கண்டார்கள்.

இதைத்தான் மாற்று யோசனை (innovation) என்று பன்னாட்டு நிறுவனங்களில் கொண்டாடுகிறார்கள்.

ஒவ்வொரு சோதனையிலும் ஒரு புது வாய்ப்பு இருக்கலாம் . அந்த வாய்ப்பை கண்டுபிடிப்பவர் வயதிலோ , அனுபவத்திலோ, பதவியிலோ மூத்தவராக இருக்க வேண்டும் என்பது இல்லை . யாருக்கு வேண்டுமானாலும் தோன்றலாம். ஆனால் வியாபாரத் தலைமையில் இருப்பவர்கள் இந்த யோசனை வரும் வழியை நிறுவனத்தின் எல்லா திசைகளிலும் திறந்து வைத்திருக்க வேண்டும் அவ்வளவு தான் .

– அனு

Please complete the required fields.




Back to top button
loader