LPG கேஸ் நேரடி மானியம் கொண்டு வந்தது காங்கிரஸா ? பிஜேபியா ?

இந்தியாவில் கேஸ்(சமையல் எரிவாயு) விலையில் ஏற்றம், இறக்கம் தொடர்ந்து கண்டாலும் ரூ.900-க்கும் மேல் வரை விலை உச்சமடைந்தது. எனினும், தற்போது தேர்தல் நேரம் என்பதால் சில மாதங்களாக பெட்ரோல், டீசல், கேஸ் விலையில் ஏற்றம் இல்லாமல் குறைந்து வருகிறது.
கேஸ் விலை மற்றும் மானியம் குறித்த கேள்விகள், குழப்பங்கள் போன்றவை அதிகளவில் மக்களிடையே தென்படுகிறது. மேலும், இது சார்ந்த கருத்து மோதல்களும் சமூக வலைதளங்களில் நீண்ட நாட்களாக தொடர்கிறது. இக்கட்டுரையில் கேஸ் விலை, மானியம், அதனை யார் தொடங்கியது என்பது பற்றிய முழு தகவலையும் காணலாம்.
நேரடி மானியம் :
14.2 கி சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்களை பெறும் மக்களுக்கு மானியத் தொகையானது நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் என்ற அறிவிப்பு மே மாதம் 2013-ல் செய்திகளில் வெளியாகி உள்ளது.
அதில், Direct Benefit transfer திட்டத்தின்படி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பெறும் மக்களுக்கு ஜூலை 1 -ம் தேதி மானியத் தொகை 435 ரூபாய் நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவித்தனர். எனினும், இதன் முதற்கட்ட சோதனையாக இந்தியாவில் 18 மாவட்டத்தில் செயல்படுத்திப் பார்த்தனர்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் Direct Benefit transfer கொண்டு வரப்பட்டு இடைத்தரகர்கள் மற்றும் மானியத் தொகையின் பயன் மக்களுக்கு நேரடியாக கிடைக்க வேண்டும் எனவும் இதனை அறிமுகம் செய்தனர்.
2013 மே கணக்கின்படி, டெல்லியில் 14.2 கி சமையல் எரிவாயு (LPG) விலை 410 ஆக இருந்த நிலையில் மக்கள் இரு மடங்கு தொகை செலுத்த வேண்டும், அதற்கான மானியத் தொகை ரூ.435 அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என கூறி இருந்தனர்.
தற்போதைய நிலை :
3 அல்லது நான்கு மாத சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்களின் பில்களை தொடர்ச்சியாக வைத்து எடுக்கப்பட்ட படங்களை வைத்து, கேஸ் விலை ஏற்றதை பாருங்கள் என சிலர் பதிவிட்டு வந்தனர். அதற்கு பதில் அளித்த சிலர் நீங்கள் பெறும் மானியம் பற்றி ஏன் பதிவிடவில்லை என கூறி இருப்பர். அதற்கான விளக்கம்,
சென்னையில் உள்ள ஒரு வீட்டில் 2018 வரையில் வாங்கிய சமையல் எரிவாயு (LPG) விலையானது நவம்பர் மாதத்தில் 960 ரூபாய் வரை உயர்ந்து இருப்பதை காணலாம். 2018 நவம்பர் மாதம் வாங்கிய சிலின்டர் விலை 958.50 ரூபாய் ஆக இருந்துள்ளது, அதே நேரத்தில் அரசு வழங்கும் மானியத்தின் விலையும் அதிகரித்து உள்ளது. இதற்கு வழங்கப்பட்ட மானியத் தொகை ரூபாய் 464.61 ஆகும்.
” இதில் மானியம் போக ஒரு சிலிண்டரின் விலை ரூ. 493.89 . இதையடுத்து, 2019 பிப்ரவரி மாதம் வாங்கிய சிலிண்டரின் விலை ரூ.673 ஆக குறைந்து உள்ளது. இதில் சென்ற முறை வழங்கிய அரசு வழங்கிய மானியமும் குறைந்து இருக்கும். இதற்கு வங்கியில் செலுத்தப்பட்ட மானியத் தொகை 191.66 ரூபாயாகும். பிப்ரவரி மாதத்தில் மானியத் தொகை போக சிலிண்டர் விலை ருபாய் 481.34 ” .
இதிலிருந்து, சிலிண்டர் ஏறும் பொழுது மானியமும் ஏறுகிறது, விலை குறையும் போது அதற்கு ஏற்றவாறு சரியாக மானியமும் செலுத்தப்படுகிறது. 2013-ல் மே மாதத்தில் டெல்லியில் 14.2 கி சமையல் எரிவாயு (LPG) விலை 410 ஆக இருந்துள்ளது என செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது, தற்போது சிலிண்டர் விலை 481.34(பிப்ரவரி மாதம் சென்னையில்).
காங்கிரஸ் & பிஜேபி ஆட்சியில் விலை :
கேஸ் சிலிண்டர் குறித்து பரவிய இந்த வீடியோவில் பல முரண்பாடுகள் உள்ளன. ஏனெனில், வங்கியில் நேரடி மானியம் செலுத்தியது காங்கிரஸ், கேஸ் விலை 960 ரூபாய்(490ரூ, மானியம் போக) உயர்ந்தது குறித்து குறிப்பிடவில்லை. பிஜேபி ஆட்சியில் தான் நேரடி வங்கி கணக்கில் மானியம் செலுத்தப்பட்டது என தவறான தகவலை கூறியுள்ளனர்.
காங்கிரஸ் & பிஜேபி ஆட்சியில் கேஸ் விலை பற்றிய விரிவான தகவல்.
மன்மோகன்சிங் பிரதமராக இருந்த சமயத்தில் 2004 ஜூன் 16-ல் கேஸ் விலை 268.1 ரூபாய் ஆகவும்(சென்னை விலை), ஆட்சி முடியும் முன் 2014 மே மாதத்தில் 401 ரூபாயாகவும் இருந்துள்ளது. 10 ஆண்டுகளில் கேஸ் விலை 132.90 ரூபாய்க்கு உயர்ந்து உள்ளது.
” பிரதமர் மோடி ஆட்சியின் தொடக்கத்தில் சிலிண்டர் விலை 401 ரூபாய், 2019 பிப்ரவரி 1-ம் தேதி விலை நிலவரம் 481.34 ரூபாய் ஆகும். 5 ஆண்டுகளில் 80 ரூபாய் ஆக உயர்ந்து உள்ளது. தேர்தல் நேரம் என்பதால் சிலிண்டர் விலை குறைய வாய்ப்புள்ளது(இடையில் 95ரூபாய் வரை உயர்ந்தது)” .
கேஸ் விலையில் காங்கிரஸ் ஆட்சியில் 10 வருடத்தில் நிகழ்ந்த விலையேற்றத்தையும், பிஜேபி ஆட்சியில் 5 வருடத்தில் நிகழ்ந்த விலையேற்றத்தையும் மட்டுமே ஒப்பிடுகின்றனர்.
மேற்கண்ட தகவல்கள் Indian oil corporation limited-ன் அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து கிடைக்கப் பெற்றவை.
அடுத்து, சமையல் எரிவாயு (LPG) சிலின்டர்களுக்கு வழங்கப்படும் மானியத் தொகை தற்போதைய ஆட்சியில் கொண்டு வரப்பட்டது போன்று பிஜேபி ஆதரவாளர்கள் கூறுவதையும் காண முடியும். 2017 கர்நாடக தேர்தலில் பேசிய பிரதமர் ” நாங்கள் தொடங்கிய Direct Benefit transfer திட்டம் என பேசி இருப்பார் “.
மேலும் படிக்க : CM மோடியால் எதிர்க்கப்பட்டு PM மோடியால் வரவேற்கப்பட்டவை !
Direct Benefit transfer கொண்டு வந்தது மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து பொழுது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 2013-2014 நிதியாண்டில் Direct Benefit transfer பற்றிய தகவல் அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடி மானியத்தின் பயன் மக்களுக்கும், அரசிற்கும் என இரு தரப்புக்கும் உண்டு. இதனால் அரசிற்கு இடைத்தரகர்களுக்கு சென்றுக் கொண்டு இருந்த தொகை நிறுத்தப்பட்டு உள்ளது.
சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் விலை பற்றியும், அதன் மானிய வழங்கல் தொகைப் பற்றியும் தெளிவாக அறிந்து இருப்பீர்கள் என நினைக்கிறோம்.
LPG subsidy to be credited directly in bank accounts from June 1 in 18 districts
Indian oil corporation limited