பொய் செய்தி பரப்புபவர் கைது எனப் பதிவிட்ட காயத்ரி ரகுராம்.. அவர் பரப்பிய வதந்திகளின் தொகுப்பு !

தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ” பொய் செய்திகளை பரப்புபவர் கைது ” எனப் பதிவிட்டு உள்ளார்.
ஜூன் 27-ம் தேதி உண்மைக் கண்டறிதல் தளமான ஆல்ட் நியூஸ் உடைய இணை நிறுவனர் மொகமது ஜுபைரை டெல்லி போலீசார் கைது செய்தனர். மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும், கலவரத்தைத் தூண்டுவதாகவும் ட்விட்டரில் ஒருவர் அளித்த புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153( கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஆத்திரத்தை உண்டாக்குவது) மற்றும் 295ஏ ( மத உணர்வுகளையோ அல்லது நம்பிக்கைகளையோ அவமதிப்பது) ஆகிய பிரிவுகளில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொகமது ஜுபைரின் கைதுக்கு எதிர் கட்சிகள் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஜுபைர் கைது செய்யப்பட்டதை அடுத்து , ” பொய் செய்தி பரப்புபவர் கைது ” என ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வலதுசாரி ஆதரவாளர்கள் மற்றும் பாஜகவினர் பதிவிட்டு வருகின்றனர். ஜுபைரை கைதை பொய் செய்தி பரப்புபவர் கைது எனப் பதிவிட்ட பாஜகவின் காயத்ரி ரகுராம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு பொய் செய்திகளை பரப்பி இருக்கிறார்.
கேரளாவில் கோவிலை மசூதியாக மாற்றியதாக வதந்தி :
கடந்த ஏப்ரல் மாதம் கேரளாவின் மல்லப்புரம் பகுதியில் உள்ள பழமையான இந்துக் கோவிலை முஸ்லீம்கள் கைப்பற்றி மசூதியாக மாற்றியுள்ளதாக பரவிய வதந்தியை காயத்ரி ரகுராம் ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார். ஆனால், அந்த வீடியோ கர்நாடகாவின் மங்களூரில் உள்ள பழமையான ஜீனத் பக்ஷ் மஸ்ஜித் உடையது என நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
மேலும் படிக்க : கேரளாவில் கோவிலை மசூதியாக மாற்றியதாக வதந்தியைப் பகிர்ந்த காயத்ரி ரகுராம் !
மத்திய அரசு ஒளிவரைவு சட்டத்தை நிறுத்தாவிட்டால் சினிமாவில் இருந்தே முற்றிலும் விலகுவேன் என நடிகர் சூர்யா கூறியதாக போலியான நியூஸ் கார்டை கடந்த ஆண்டு ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
மேலும் படிக்க : ஒளிவரைவு சட்டத்தை நிறுத்தாவிட்டால் சினிமாவில் இருந்து விலகுவேன் என சூர்யா கூறினாரா ?
இதேபோல், திமுக மகளிர் அணி கட்சியில் செயல்படுவதே இல்லை. இளம் பெண்களை இளைஞர் அணியில் சேர்ப்பதில் தவறு எதுவும் இல்லை. மகளிர் அணி செய்ய தவறியதை தான் நான் செய்கிறேன் என திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கூறியதாக போலியான நியூஸ் கார்டை பதிவிட்டு விமர்சித்து இருந்தார்.
மேலும் படிக்க : மகளிரணி செயல்படவில்லை என உதயநிதி கூறியதாக போலிச் செய்தியை பகிர்ந்த காயத்ரி ரகுராம் !
கடந்த மார்ச் மாதம், தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை மதிமுக எம்.பி வைகோ விமர்சித்து உள்ளதாக போலியான நியூஸ் கார்டை ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்
மேலும் படிக்க : தமிழக பட்ஜெட்டை வைகோ விமர்சித்ததாக பாஜகவினர் பரப்பும் போலிச் செய்தி !
இப்படி பல வதந்திகள் மற்றும் போலியான செய்திகளை தமிழக பாஜகவைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்துள்ளார்.