This article is from Mar 20, 2021

காயத்ரி மந்திரம் சொன்னால் கொரோனா சரியாகுமா ?| எய்ம்ஸ் ஆய்வு !

இந்தியாவில் கோவிட்-19 நோய் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், கொரோனா தொற்று சிகிச்சையில் காயத்ரி மந்திரம் மற்றும் பிராணயாமம் மூச்சுப் பயிற்சி பயனளிக்கிறதா என ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வு ஒன்றை நடத்தி வருகிறது.

இத்தகைய ஆய்விற்கு, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை(DST) 3 லட்சம் நிதியுதவி அளித்து இருக்கிறது. ஆய்வை மேற்கொள்வதற்கு இந்திய மருத்துவக் கவுன்சிலில்(ஐசிஎம்ஆர்) முறைப்படி விண்ணப்பிக்கப்பட்டும் உள்ளது.

இந்த ஆய்வானது கொரோனா நோய் தொற்று மிதமான பாதிப்பு கொண்டவர்களை வைத்தே மேற்கொள்ளப்படுகிறது. மிதமான பாதிப்பை கொண்ட 20 நோயாளிகளை குரூப் ஏ மற்றும் குரூப் பி என இரு குழுக்களாக பிரித்து, ஒரு குழுவில் உள்ளவர்களுக்கு கோவிட்-19க்கான வழக்கமான சிகிச்சையும், மற்றொரு குழுவில் உள்ளவர்களுக்கு கோவிட்-19க்கான வழக்கமான சிகிச்சை உடன் கூடுதலாக காயத்ரி மந்திரம் உச்சரிப்பதும், பிராணயாமம் மூச்சுப் பயிற்சி செய்யவும் கற்றுக் கொடுக்கப்படும் என அவுட்லூக் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

நோயாளிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட யோகா பயிற்சியாளர் காணொளி சந்திப்பு மூலம் கற்றுக் கொடுப்பார். 14 நாட்கள் நீண்ட சோதனையில் காயத்ரி மந்திரம் மற்றும் யோகா பயிற்சி மேற்கொண்டவர்கள் உடல்நிலையில் ஏற்படும் மாற்றத்தை அறிவியல் ரீதியான அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும்.

எய்ம்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் நிபுணரும், துணைப் பேராசிரியருமான மருத்துவர் ருச்சி துவா தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த தகவலில், ” இதன் மூலம் அவர்களின் உடல் சோர்வு குறைந்து இருக்கிறதா, கவலைகள் நீங்கி இருக்கிறதா என ஆய்வு மேற்கொள்ளப்படும். இதில் யோகா குறித்து ஆராய்ச்சி செய்யும் போஸ்ட்டாக்ரோல் ஆராய்ச்சியாளரும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும், சி ரியாக்டிவ் புரதம் மூலம் நுரையீரலில் உள்ள அழற்சி எவ்வாறு குறைகிறது என அடுத்த 2 அல்லது 3 மாதங்களுக்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இத்தகைய ஆய்விற்கு ஆட்சேர்ப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது ” எனக் கூறி இருக்கிறார். 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீரட் பகுதியில் உள்ள ஆனந்த் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தினமும் மாலை ஓம் மற்றும் காயத்ரி மந்திரம் உச்சரிப்பது நிகழ்ந்து இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா சிகிச்சையில் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளுடன் கூடுதல் சிகிச்சையாக ஆயுர்வேதம் மற்றும் யோகா ஆகியவற்றை அறிகுறியில்லாதவர்கள் அல்லது மிதமான பாதிப்பு கொண்டவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. கூடுதல் சிகிச்சையாக தற்போது காயத்ரி மந்திரம் பயனளிக்குமா என ஆய்வை மேற்கொண்டு இருக்கிறார்கள்.

Links :

Science Ministry funds trial on effect of Gayatri Mantra in treating COVID-19

india-news-can-chanting-gayatri-mantra-treat-covid-19-govt-collaborates-with-aiims-rishikesh-to-find-out

Please complete the required fields.




Back to top button
loader