பாலின சமத்துவமின்மையில் 108வது இடம்.. இந்தியாவில் எப்போது குறையும் பாலின பாகுபாடு ?

2022 தரவுகளின் படி இந்தியாவில் தொழிலாளர் பங்கேற்பில் 76.1% ஆண்கள் உள்ள நிலையில், பெண்களில் 28.3% பேரே காணப்படுகின்றனர்!

ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தால் (United Nations Development Programme) ‘‘Breaking the gridlock: Reimagining cooperation in a polarised world’ என்ற தலைப்பில் மார்ச் 13 அன்று வெளியிடப்பட்ட மனிதவள வளர்ச்சி அறிக்கையின் படி உலகளாவிய மனித மேம்பாட்டுக் குறியீட்டில் (HDI) இந்தியா 134 வது இடத்தில் உள்ளது. 

மனித வளர்ச்சிக் குறியீடு:

மனித வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா 75 வது இடத்திலும், இலங்கை 78 வது இடத்திலும், பூடான் 125 வது இடத்திலும், வங்காளதேசம் 129 வது இடத்திலும் உள்ள நிலையில், இந்தியா 134 வது இடத்துடன் நடுத்தர மனித வளர்ச்சி பிரிவில் (Medium Human Development) காணப்படுகிறது. நேபாளம் (146) மற்றும் பாகிஸ்தான் (164) ஆகியவை இந்தியாவை விடவும் குறைந்த தரவரிசையில் உள்ளன. இதில் சுவிட்சர்லாந்து (0.967), நார்வே (0.966) மற்றும் ஐஸ்லாந்து (0.959) போன்ற நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. 

மேலும் இந்தியர்களின் ஆயுட்காலம் 2021 இல் 67.2 ஆண்டுகளாக இருந்த நிலையில், 2022 இல் இது 67.7 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. இதே போன்று தனிநபர் மொத்த தேசிய வருமானம் $6,542ல் இருந்து $6,951 ஆக உயர்ந்துள்ளது. இதே போன்று Expected years of schooling (EYS) என்று சொல்லப்படுகின்ற இந்தியர்களின் பள்ளிப்படிப்பு ஆண்டுகளும் 11.9 ஆண்டுகளில் இருந்து 12.6 ஆண்டுகளாக அதிகரித்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.

பாலின சமத்துவமின்மை குறியீடு:

ஆரம்பத்தில் GDI (Gender Development Index) மற்றும் GEM (Gender Empowerment Measure) மட்டுமே மனித வளர்ச்சி அறிக்கையில் கணக்கிடப்பட்டு வந்தநிலையில், GDI & GEM பெண்கள் அனுபவிக்கும் ஏற்றத்தாழ்வுகளை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று UNDP (United Nations Development Programme) நம்பியது. எனவே 2010 ஆம் ஆண்டிற்கான மனித வளர்ச்சி அறிக்கையில் பாலின சமத்துவமின்மை குறியீட்டை (GII) முதன்முதலில் UNDP அறிமுகப்படுத்தியது.

இனப்பெருக்க ஆரோக்கியம், அதிகாரமளித்தல் மற்றும் தொழிலாளா் சந்தையில் பங்கேற்பு ஆகிய 3 முக்கிய காரணிகளின் அடிப்படையிலேயே பாலின சமத்துவமின்மை குறியீடு (GII) கணக்கிடப்படுகிறது.

பாலின சமத்துவமின்மை குறியீடு 2022 இன் படி, இந்தியா 193 நாடுகளில் 0.437 மதிப்பெண்களுடன் 108 வது இடத்தில் உள்ளது. இதற்கு முன்பு வெளியிடப்பட்ட 2021 ஆம் ஆண்டிற்கான 191 நாடுகளை உள்ளடக்கிய தரவரிசையில், இந்தியா 122-ஆவது இடத்தில் இருந்தது. 

தொழிலாளர் பங்கேற்பில் 28.3 சதவீதமே உள்ள பெண்கள்:

2022 மனிதவள வளர்ச்சி அறிக்கையின் படி 76.1 சதவீத ஆண்கள் இந்தியாவில் பணிபுரியும் சூழலில், பெண்களில் 28.3 சதவீத பேரே பணிபுரிகின்றனர். இதன் மூலம் தொழிலாளா் பங்கேற்பில் (Labour Force Participation) இந்தியாவில் அதிக பாலின இடைவெளி விகிதம் காணப்படுவதை தெளிவாக காணமுடிகிறது.

எனவே மனித வளர்ச்சி அறிக்கை 2022 இன் தரவுகளை ஆய்வு செய்து பார்த்ததில், இந்தியாவில் இன்றும் பாலின பாகுபாடு அதிகரித்து காணப்படுவதை அறிய முடிகிறது. மேலும் எப்போது பெண்கள், ஆணுக்கு நிகராக தொழில் புரிய அனுமதிக்கப்படுகிறார்களோ அப்போது தான் இந்தியா போன்ற நாடுகள் பொருளாதாரத்திலும் உயர்ந்து நிற்க முடியும். ஏனெனில் ஒரு நாட்டின் பொருளாதார பங்களிப்பிற்கு பெண்களின் பங்கும் இன்றியமையாத ஒன்றாகும்..!!

ஆதாரங்கள்:

Human Development Global Report 2023-2024

India Jumps 14 ranks on Gender Inequality Index 2022

The Hindu – India ranks 134th in global human development index

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader