காணாமல் போன குழந்தைகளை இனி GHAR இணையதளம் மூலம் எளிதில் மீட்கலாம் !

NCRB தரவு படி, 2022 இல் மட்டும் 83,350 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர் !

NCRB “இந்தியாவில் குற்றங்கள்” என்ற தலைப்பில் கடந்த டிசம்பர் 03 அன்று 2022 ஆம் ஆண்டிற்கான அறிக்கையை வெளியிட்டது. அதன்படி இந்தியாவில் 2022 இல் மட்டும் 83,350 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக அறிக்கை கூறுகிறது. காணாமல் போன இந்த குழந்தைகளில் 20,380 பேர் ஆண்கள், 62,946 பேர் பெண்கள் மற்றும் 24 பேர் திருநங்கைகள் ஆவர்.

இதில் அதிகபட்சமாக மேற்குவங்காளத்தில் 12455 குழந்தைகளும், மத்தியப்பிரதேசத்தில் 11352 குழந்தைகளும் காணாமல் போயுள்ளனர். மேலும் காணாமல் போன 83,350 குழந்தைகளில், 76,069 குழந்தைகள் கடத்தப்பட்ட குழந்தைகள் பட்டியலில் உள்ளனர். இதில் 81 % பேர் (62,099 பேர்) பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மீட்கப்பட்ட குழந்தைகள் குறித்து ஆய்வு செய்ததில், இதற்கு முந்தைய ஆண்டுகளில் இருந்து, 2022 வரை, இதுவரையில் 80,561 குழந்தைகள் (20,254 ஆண்கள், 60,281 பெண்கள் மற்றும் 26 திருநங்கைகள்) மீட்கப்பட்டுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தில், ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமான NCPCR வெளியிட்டுள்ள தரவுகளின் படி, GHAR (Go Home and Reunite) இணையதளத்தில் காணாமல் போன 5,175 குழந்தைகள் பற்றிய விவரங்கள், மீட்பதற்காக பதிவு செய்யப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

காணாமல் போன குழந்தைகளை மீட்க உதவும் GHAR இணையதளம் :

உலக குழந்தைகள் தினத்தை (நவம்பர் 20) முன்னிட்டு கடந்த 2022 நவம்பர் 22 அன்று தேசியக் குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தினால் (NCPCR) “GHAR (GO Home and Re-Unite)இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் காணாமல் போன குழந்தைகளை மீட்டெடுப்பது மற்றும் உரிய இடத்திற்கு அவர்களை திருப்பி அனுப்புவது தொடர்பான தரவுகளை டிஜிட்டல் முறையில் எளிதில் கண்காணிக்க முடியும்.

மேலும் இது குழந்தைக்கடத்தல், மனித உரிமைகளை மீறுதல் போன்ற பிரச்சனைகளையும் எடுத்துரைக்கிறது. இது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் காணாமல் போன குழந்தைகள் தொடர்பான தகவல்களை திரட்டி வருகிறது. மேலும் ஒன்றிய அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், இது தொடர்பான பயிற்சிகள் (Training Programmes) வடகிழக்கு மாநிலங்களில் உள்ள GHAR Portal தொடர்புடைய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.

ஏற்கனவே NCPCR ஆணையம், i) போக்சோ சட்டம் 2012, ii) சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ) சட்டம் 2015 மற்றும் iii) இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான உரிமை (RTE) சட்டம் 2009 ஆகிய சட்டப்பிரிவுகள் மூலம் தொடரப்படும் வழக்குகளை கண்காணித்து வரும் நிலையில், தற்போது இது GHAR இணையதளம் மூலம் காணாமல் போன குழந்தைகள் பற்றிய விபரங்களையும் டிஜிட்டல் முறையில் எளிதில் கண்காணிக்கிறது. 

GHAR இணையதளத்தின் முக்கிய அம்சங்கள் :

1 . குழந்தைகளின் நலன் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட, சிறார் நீதி அமைப்பில் (Juvenile Justice system) பதிவு செய்யப்பட்டுள்ள குழந்தைகளை, டிஜிட்டல் கண்காணிப்பு முறையில், வேறு நாடு/மாநிலம்/மாவட்டத்திற்கு திருப்பி அனுப்ப GHAR இணையதளம் உதவும். 

2 . குழந்தைகளின் வழக்குகளை மாநிலத்தின் சம்பந்தப்பட்ட சிறார் நீதி வாரியம் அல்லது குழந்தைகள் நலக் குழுவுக்கு டிஜிட்டல் முறையில் மாற்றுகிறது. மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விரைவாக மாற்றவும் இது உதவுகிறது.

3. மொழிபெயர்ப்பாளர் அல்லது மொழி நிபுணரின் தேவை இருந்தால், சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் GHAR மூலம் கோரிக்கை வைக்கப்படும்.

4. திருப்பி அனுப்ப கடினமாக உள்ள குழந்தைகளை அல்லது இழப்பீடு பெறாதவர்களை இது எளிதில் அடையாளம் காட்டுகிறது.

5. குழந்தைகளின் முறையான மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வுக்காக உருவாக்கப்பட்டுள்ள அரசின் திட்டங்களை இது பட்டியலிட்டு வழங்குகிறது.

6. காணாமல் போன குழந்தைகள் மற்றும் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதைக் கண்காணித்து வரும் Track Child Portal மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் அமைப்பான CCTNS (Crime and Criminal Tracking Network & Systems) உடன் GHAR இணைக்கப்பட்டுள்ளதால், காணாமல் போன குழந்தைகளை எளிதில் கண்டுபிடிக்க முடியும். 

7. “கோயா-பயா” (Khoya-Paya) என்ற இணையதளம் மூலம் காணாமல் போன குழந்தைகள் பற்றிய தகவல்களை புகாரளிக்க குடிமக்களை இது அனுமதிக்கிறது.

 

ஆதாரங்கள்:

GHAR (GO Home and Re-Unite) Portal for Restoration and Repatriation of Child launched by NCPCR

Crime in India Year Wise 2022 Vol 3

அறிக்கையை

Smriti Zubin Irani calls upon CWCs and DCPUs to implement effectively the JJ Rules for Child Protection across the Nation on Nov 20, 2022.

GHAR (Go Home and Reunite) Website

Khoya-Paya Portal for finding missing kids

Crime and Criminal Tracking Network & Systems

Please complete the required fields.
Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader