உலகின் பசி தரவரிசையில் 101வது இடத்திலிருந்து 107வது இடத்திற்கு இந்தியா பின்னடைவு !

கடந்த 2021ம் ஆண்டு உலக பசி தரவரிசையில் 101வது இடத்திலிருந்த இந்தியா, இந்த ஆண்டு 107வது இடத்திற்குச் சரிந்துள்ளது. மேலும், தரவரிசைக்கான மதிப்பீட்டிலும் சென்ற ஆண்டை காட்டிலும் 1.6 புள்ளிகள் சரிந்துள்ளது.

2022ம் ஆண்டுக்கான உலக பசி தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 136 நாடுகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட தரவில் 121 நாடுகளை வரிசைப்படுத்தி உள்ளனர். அந்த 121 நாடுகளில் இந்தியா 107வது இடத்தில் உள்ளது. இந்த தரவரிசையின்படி இந்தியாவின் தர மதிப்பீடானது 29.1-ஆக உள்ளது. 

எதன் அடிப்படையில் பசி பட்டியல் கணக்கிடப்படுகிறது ?

உலக பசி குறியீடானது ஒரு நாட்டு மக்கள் சராசரியாக எடுத்துக் கொள்ளும் கலோரியின் அளவு (Undernourishment), ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தை அதன் வயதுக்கு ஏற்ற உயரம் உள்ளதா (Child stunting), ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தை உயரத்திற்கு ஏற்ப எடை உள்ளதா (Child wasting), ஐந்து வயதிற்கு முன்னதாக இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை (Child mortality)  ஆகிய 4 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. 

இந்தியாவின் நிலையினை மதிப்பிட FAO (Food Security Indicators) வெளியிட்ட ஊட்டச்சத்து குறித்த தரவினையும், இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட தரவினை (National Family Health Survey 2019–2021) குழந்தைகளின் உயரம் மற்றும் எடை குறித்துக் கணக்கிடவும், குழந்தைகளின் இறப்பு குறித்து ஐ.நா. வெளியிட்ட தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் பசி நிலை கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடல் :

கடந்த 2021 ஆண்டு உலக பசி தரவரிசையில் 116 நாடுகள் தரவரிசைப்  படுத்தப்பட்டது. அதில் இந்தியா 101வது இடத்திலிருந்தது. அவ்வாண்டில் தரவரிசை குறியீட்டில் இந்தியாவின் மதிப்பீடானது 27.5ஆக இருந்தது. இந்த மதிப்பீடு 2022ம் ஆண்டு 29.1ஆக அதிகரித்துச் சென்ற ஆண்டை காட்டிலும் பின்னடைவினை சந்தித்து உள்ளது (இந்த மதிப்பீட்டின் அளவு குறைவாக உள்ள நாடுகள் முன்னேறி உள்ளதாகப் பொருள்).

குறிப்பாக பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக 2014ம் ஆண்டு உலக பசி பட்டியலில் இந்தியா 55வது இடத்தில் இருந்துள்ளது. அந்த ஆண்டில் 76 நாடுகளைக் கொண்டு அத்தரவரிசை பட்டியலிடப்பட்டது. அவ்வாண்டின் இந்தியாவின் மதிப்பீடானது 17.8ஆக இருந்தது.

ஆனால், அதற்கு அடுத்த ஆண்டுகளில் இந்தியாவில் பசி விகிதம் அதிக அளவில் அதிகரித்துள்ளது. 2015ம் ஆண்டு 104 நாடுகளில் 80வது இடத்திலும், 2016ம் ஆண்டு 118 நாடுகளில் 97வது இடத்திலும் எனத் தொடர்ந்து பின்னடைவினையே சந்தித்து வந்தது. 

2022ம் ஆண்டின் பசி பட்டியலில் மற்ற நாடுகளின் நிலை :

உலக பசி தரவரிசை பட்டியலில் ஏமன் நாடு கடைசி இடமான 121வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான ஸ்ரீலங்கா (64), நேபாளம் (81), பாகிஸ்தான் (99) ஆகிய இந்தியாவைக் காட்டிலும் தரவரிசையில் முன்னேறி உள்ளது.

மேலும் கினி, மொசாம்பிக், உகாண்டா, சிம்பாப்வே, புருண்டிக், சோமாலியா, தெற்கு சூடான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளுக்குச் சரியான தகவல்கள் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பீடானது 20 முதல் 49.9ஆக இருக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் குழந்தைகள் ஊட்டச்சத்து :

உணவு என்பதைத் தாண்டி சத்துள்ள உணவு என்பது சரிவிகித வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இந்தியாவில் உள்ள 5 வயதுக்கு உட்பட்ட 3 குழந்தைகளில் ஒரு குழந்தை ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகம் 2021-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி புள்ளிவிவரம் ஒன்றினை வெளியிட்டுள்ளது. அத்தகவலின்படி இந்தியாவிலுள்ள குழந்தைகளில் வயதுக்கேற்ற உயரம் இல்லாதவர்கள் 35.5 சதவீதம், உயரத்திற்கேற்ப உடல்  எடை இல்லாதவர்கள் 19.3 சதவீதம் மற்றும் குறைவான எடை உள்ளவர்கள் 32.1 சதவீதம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : பஜனை பசியை போக்காது பிரதமரே, உணவு மானியத்தை குறைப்பது ஏன்?

முடிவு : 

உலக பசி தரவரிசையில் இந்தியாவின் நிலை பின்னடைவில் இருப்பது, குழந்தைகளின் ஊட்டச்சத்து குறித்து அரசு தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டியுள்ளதை அறிவுறுத்துவதாகவே உள்ளது.  

Link :

GLOBAL HUNGER INDEX SCORES BY 2022 GHI RANK

 

Please complete the required fields.




Back to top button
loader