This article is from Oct 15, 2021

உலக பட்டினிக் குறியீட்டில் 116 நாடுகளில் இந்தியா 101வது இடத்திற்கு சரிவு !

2021-ம் ஆண்டு உலக பட்டினிக் குறியீட்டில் 116 நாடுகளை கொண்ட பட்டியலில் இந்தியா 101வது இடத்திற்கு சரிந்துள்ளது. நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு பின்தங்கிய நிலையில் இந்தியா இருக்கிறது. கடந்த ஆண்டு 107 நாடுகளுக்கான பட்டியலில் இந்தியா 94வது இடத்தில் இருந்தது.

உலகளாவிய பட்டினிக் குறியீடு ஆனது, ஊட்டச்சத்து குறைபாடு, 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாமல் இருத்தல், வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருத்தல், 5 வயதுக்கு உட்பட குழந்தைகளின் உயிரிழப்பு ஆகிய 4 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டு உள்ளது.

2021 ஆம் ஆண்டு அறிக்கையானது உலகம் முழுவதும் 135 நாடுகளின் தரவுகளை அணுகியது, ஆனால் அவற்றில் 116 நாடுகள் மட்டுமே மதிப்பீடு செய்யப்பட்டது. மீதமுள்ள 19 நாடுகளில் போதுமான தரவுகள் இல்லை என அறிக்கை கூறுகிறது.

இதில், பாகிஸ்தான் 92வது இடத்திலும், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் 76வது இடத்திலும், இலங்கை 65வது இடத்திலும் உள்ளன. பட்டியலின் இறுதியில் 116வது இடத்தில் சோமாலியா இடம்பெற்று இருக்கிறது.

உலகளாவிய பட்டினி குறியீட்டில் இந்தியாவின் மதிப்பெண் 27.5 ஆக உள்ளது, இது கடந்த ஆண்டில் 27.2 ஆக இருந்தது. இதன் காரணமாக, ” தீவிர ” எனும் நிலையில் உள்ள 30 நாடுகளில் இந்தியா இடம்பெற்று இருக்கிறது.

2006 முதல் 2012 வரையில் உள்ள இடைப்பட்ட ஆண்டில் 37.4 மதிப்பெண்களில் இருந்து 28.8 மதிப்பெண்களாக இந்தியா முன்னேற்றம் அடைந்து இருந்தது. ஆனால், 2012-ல் 28.8 மதிப்பெண்ணில் இருந்து 2021 வரையில் 27.5 என மிகச் சொற்ப முன்னேற்றத்தையே கண்டு இருக்கிறது.

இந்தியாவின் மக்கள் தொகைக்கு நிகரான நாடான சீனா உள்பட 18 நாடுகளில் பட்டினிக் குறியீடு ஆனது 5 மதிப்பெண்ணிற்கும் குறைவாகவே இருக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது.

உலகளாவிய பட்டினிக் குறியீட்டை அடிப்படையாக் கொண்ட கணிப்புகள், உலகம் முழுவதும் உள்ள 47 நாடுகள் 2030க்குள் நிர்ணயித்த குறைந்த பட்டினி நிலையைக் கூட அடைய தவறிவிடும். உள்நாட்டு மோதல்கள், பருவநிலை மாறுபாடுகள், கொரோனா தொற்று போன்ற உள்ளிட்ட காரணங்களும் பட்டினிக் குறியீட்டு அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக அறிக்கை கூறுகிறது.

Link : 

2021 Global Hunger Index

Please complete the required fields.




Back to top button
loader