உலக வெப்பமயமாதல் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் எழுதிய கடிதம் !

உலக வெப்பமயமாதல் நாளுக்கு நாள் அதிகரிப்பது நம் கண் முன்னே நிகழ்கிறது. நிகழும் மாற்றத்தால் எதிர்காலத்தில் பூமியின் நிலை எப்படி இருக்கும் என்ற அச்சம் அனைவரிடத்திலும் உள்ளது. கோடை காலத்தில் நீர்நிலைகள் வறண்டதால் தண்ணீர் பஞ்சம் தலை தூக்கியது, இதேநிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் கோடை காலம் மட்டுமின்றி அனைத்து பருவ காலத்திலும் தண்ணீர் பஞ்சம் நிலவும்.
தற்போதைய தண்ணீர் தேவைக்கு வழி அறிந்தால் போதும் என நினைக்காமல் நீண்டகாலத்திற்கு பயனளிக்கும் முயற்சியையே மேற்கொள்ள வேண்டியது அவசியம். சென்னை தண்ணீர் பஞ்சத்தின் போதும் அரசின் மீது கேள்விகள் எழுந்தன. ஏனெனில், மக்களின் சிரமத்தை போக்குவதே அரசின் கடமையாகும்.
இந்நிலையில் தான், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஜூன் 28-ம் தேதி மக்களுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், தாழ்மையான வேண்டுகோள் : இன்னும் 10 ஆண்டுகளில் பூமியில் தற்பொழுது இருக்கும் வெப்பத்தை விட 4 டிகிரி அதிகமாக இருக்கும். இமயமலையின் பனிக்கட்டிகள் உருகுகின்றன. அதனால், அனைவரும் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக கைகோர்த்து போராட வேண்டும். அதிக மரங்களை நட வேண்டும், தண்ணீரை வீணாக்கக்கூடாது. பிளாஸ்டிக்கை பயன்படுத்துவது அல்லது எரிப்பதை தவிர்ப்போம். இந்த தகவலை ஒரு நபருக்கு அல்லது லட்ச பேருக்கு பரப்பாமல் நீக்க வேண்டாம். ஏனென்றால், ஒருவரால் உலக வெப்பமயமாதலை எதிர்த்து போராட முடியாது ” எனக் குறிப்பிட்டு உள்ளார்.
உலக வெப்பமயமாதல் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் எழுதிய கோரிக்கைக் கடிதத்தில் ஃபார்வர்டு செய்யுமாறு தெரிவித்து இருந்ததை, வாட்ஸ் ஆஃப் ஃபார்வர்டு செய்தியில் உள்ளதை எழுதி உள்ளார் என சமூக வலைதளத்தில் கிண்டல் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
ஆனால், தற்பொழுது நகைப்பதற்கான நேரம் அல்லவே ? உலக வெப்பமயமாதல் அனைவருக்குமான அச்சறுத்தலாகும். தண்ணீர் பஞ்சம் என வந்தால் தான் தண்ணீர் சிக்கனம், தண்ணீரின் அருமை புரிகிறது, அதேபோன்று வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் பொழுது தான் மரங்களின் அருமை புரிகிறது.
ஒன்று இல்லை எனும் பொழுது தான் அதன் அருமை மக்களுக்கு தெரிகிறது. அமைச்சர் ஜெயக்குமார் கூறியது, நீண்டகாலமாக ஒரு சிலரால் பேசப்படும் கருத்து. ஆனால், அனைவரும் அதனை பின்பற்ற வேண்டிய கட்டாயம் இங்கு உள்ளது. உலக வெப்பமயமாதலை தடுக்க அனைவரும் கைகோர்த்து போராட வேண்டியது அவசியமாகும். அரசு மக்களிடம் கோரிக்கை வைத்தாலும், மக்களின் வேண்டுகோள்களை அரசு ஏற்கிறதா ? மக்களுடன் அரசு துணை நிற்கிறதா என்பதும் முக்கியமாகிறது.
Proof :
https://www.facebook.com/pg/djayakumaradmk/photos/?ref=page_internal
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.